ஆன்மீக திருத்தலங்கள் – பஞ்ச பாண்டவர் வழிபட்ட தலம்!
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது அய்யாவாடி என்ற ஊர். இங்கு தர்மசம்வர்த்தினி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னிதியில் பிரத்யங்கராதேவி அருள்பாலிக்கிறார். பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதால் முதலில் ‘ஐவர்பாடி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. தேவியின் சன்னிதியில் அமாவாசை தோறும் ‘நிகும்பலா யாகம்’ நடத்தப்படுகிறது. எதிரிகளை அழிக்கும் சக்தியை அருளும் யாகம் இது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகள் பயம் நீங்கும் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
விநாயகப்பெருமான் திருத்தலங்கள்: கணபதி சிவபெருமானை வழிபட்ட தலம்:
கணபதி, கஜமுகாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்ட தலம்தான, கணபதீச்சுரம் என்னும் பெயருடைய திருச்செங்காட்டங்குடி. அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆனதனால் இத்தலத்திற்கு ‘செங்காட்டங்குடி’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், ‘கணபதீஸ்வரர்’ என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும், நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
கடைசியாக விநாயகர் வழிபாடு:
பொதுவாக அனைத்து கோவில்களிலும், முதலில் விநாயகருக்கு வழிபாடு செய்து விட்டுத்தான், ஏனைய தெய்வங் களுக்கு வழிபாடு நடத்தப்படும். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவிலில் முதலில் தட்சிணாமூர்த்திக்குத்தான் வழிபாடு நடத்தப் படுகிறது. கடைசியாகத்தான் விநாயகருக்கு வழிபாடு செய்கிறார்கள். இது எந்த கோவிலிலும் காண முடியாத அதிசய நிகழ்வாகும்.
பெருமாள் திருத்தலங்கள்:
மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய பெருமாள்:
கணவன், எப்பேர்ப்பட்ட உயரிய பொறுப்பில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். இதற்கு உதாரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் திகழ்கிறார். தன் தந்தை பெரியாழ்வார் மூலமாக கண்ணனின் லீலைகளைப் பற்றி அறிந்து கொண்ட ஆண்டாள், கண்ணன் மீது தீராத அன்பு கொண்டாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூரை கோகுலமாகவும், தன்னை கோபிகைப் பெண்ணாகவும் பாவித்து பெருமாளை வேண்டி பாசுரங்கள் பாடினாள். பெருமாளும் அவளைதிருமணம் செய்து கொண்டார். ஆனாலும், ஆண்டாள் விரும்பியது கண்ணனைத்தானே! எனவே, மனைவி ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக அருள்புரிந்தாராம். எனவே, இங்குள்ள ரெங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்குமணியாகவும், கருடாழ்வார் சத்தியபாமாவுமாகவும் அருளுவதாக ஐதீகம்.
பெண் வடிவில் கருடன்:
சென்னை சவுகார்பேட்டையில் உள்ளது பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்தில் பெண் வடிவில் கருட பகவான் இருந்து அருள்பாலிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாக பார்க்கப்படுகிறது.
