கருட பஞ்சமி ஸ்பெஷல் !

324

பெரியாழ்வார் என்னும் விஷ்ணு சித்தர் கருடாம்சமாய் பிறந்தவர். பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடியவர் இவரே. . ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ர சாயிக்கு) நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து அரங்கனுக்கே மாமானார் ஆகும் பேறு பெற்றார்.
கருடனைப் போற்றும் பெரியாழ்வாரின் ஒரு பாசுரம்

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமுந்தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.
சுவாமி வேதாந்த தேசிகருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தவன் கருடன். வேதாந்த தேசிகர் ஔஷத கிரியில் தனது குரு உபதேசித்த கருட மந்திரத்தை உபாசிக்க கருடன் தோன்றி ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து அர்ச்சா மூர்த்தியான யோக ஹயக்ரீவரையும் அளித்தான். ஹயக்ரீவரை உபாசித்து தேசிகர் ஹயக்ரிவர் அருள் பெற்று ஹயக்ரீவ ஸ்தோத்திரம் இயற்றினார். கருடன் மேல் சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன கருட தாண்டகம், கருட பஞசாசத். இவற்றில் கருடனை போற்றி தேசிகர் பாடிய சில போற்றிகள்

வைநதேயன் – விந்தையின் குமாரன்.
பக்ஷிராஜன் – வேத ஸ்வரூபன்.
கருத்மான் – அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி – நாகப்பகையோன்.
பத்ரிநாடா – பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி – நாகங்களின்(விஷ) பகைவன்.
காகேந்திரன் – பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் – பறவைகளின் அரசன்.

எந்தப் பறவையும் பறக்காத உயரத்தில் பறக்க கூடியது கருடன். எழிலானது, கம்பீரமானது, கருடனது வலிமை, வீரம், பொறுமை, வேகம்,அழகு,கோபம் ஆகியவ்ற்றுக்கு மெச்சி மஹா விஷ்ணு கருடனை தனது வாகனமாக ஆக்கிக் கொள்கின்றான். அன்று முதல் இன்று வரை அந்த விநதை சிறுவன் மேல் ஆரோகணித்து பெருமாள் நினைத்த நொடியில் தன் பக்தர்கள் இருக்கும் இடம் சென்று அவர்கள் துயர் துடைத்து வருகின்றான்.

ஓம் நமோ நாராயணா !