முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

232

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்தார். இதை யாருக்கு உபதேசம் செய்தார் என்று கேட்டால் அனைவரும் அர்ஜுனனுக்கு என்று தான் சொல்வார்கள்.

ஆனால் இந்த பகவத்கீதை முதன் முதலில் சூரிய பகவானுக்கு தான் உபதேசம் செய்யப்பட்டது என்பதே உண்மை. ராமாயணமும், மகாபாரதமும் பாரத தேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள்.

இவற்றைக் கதை என்றோ, காப்பியம் என்றோ சொல்லாமல், வடமொழியில் இதிகாசம் என்று சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வால்மீகியும் வியாசரும் எழுதிய இவை உண்மையாக நம் தேசத்தில் நடந்தவை.

இதி-ஹாசம் என்றால் இது நடந்தது என்று ஒரு பொருள் உண்டு. வால்மீகிக்கும் வியாசருக்கும் பின்னால் வந்தவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தின் நடைமுறையைக் கொண்டு சில மாற்றங்களை மூலக் கதையைச் சிதைக்காமல் சிறப்பாக எழுதித் தொகுத்தார்கள்.

ராமனை ஆரம்பம் முதல் இறுதி வரை கடவுளாகவே கருதினார் வால்மீகி. ஆனால் மானுடனாகவே கருதி முடிவில் கடவுளாக்குகிறார்.

இப்படி சில வேற்றுமைகள் காலத்திற்கேற்பவும் எழுதியவர்களின் சிறந்த கற்பனைக்கு ஏற்பவும் நமது காவியங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் கருத்து ஒன்றுதான் தர்மம் நிலைபெற வேண்டும் என்பான் ராமன்.

அதர்மம் அழிய வேண்டும் என்பான் கிருஷ்ணன். இவை இரண்டினுடைய பொருளும் ஒன்றுதான். ஆனால் அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைகள் வேறு. ராமனுடைய வழியைப் பின்பற்ற வேண்டும். கிருஷ்ணனுடைய பேச்சை கேட்க வேண்டும்.

இதுதான் சாரம். பித்ருவாக்ய பரிபாலனம் என்னும் தாய்-தந்தை சொல் கேளல், அனைவரையும் சகோதரனாக ஏற்றல் (உதாரணம்-குகன், சுக்ரீவன், விபீடணன்) மனையாளேயானாலும் மற்றவரால் குறை சொல்லப்பட்டாள் அவள் மாசற்றவள் என்பதை உணர்த்த தீக்குளிக்க வைப்பது என்பவை ராமனுடைய தர்மம்.

தாத்தா பீஷ்மர், குலகுரு கிருபர், ஆசிரியர் துரோணர், சகோதரர்களான துரி யோதனாதியர்கள் அனைவரும் அதர்மத்தின் பக்கம் நின்றதால் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றான் கிருஷ்ணன்.

முடிவில் இரு காவியங்களும் தர்மத்தை நிலைநாட்டவே எழுதப்பட்டு இன்றளவும் பேசப்படுகின்றன. ஆனால் மகாபாரதத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. புல்லையும் புண்ணாக்கையும் தின்று வாழும் பசு, தன் குருதியால் நல்ல பாலைத் தருகிறது. அந்தப் பாலிலிருந்து தயிர் கடைகிறோம்; தயிரிலிருந்து வெண்ணெயும், அதிலிருந்து நெய்யையும் பெறுகிறோம்.

அதேபோல் மகாபாரதம் எனும் இதிகாசத்திலிருந்து விதுர நீதி என்கிற தர்ம சாஸ்திர நூலையும்; பகவத்கீதை எனும் அதி அற்புதமான கடவுளின் வாக்கினையும், பின்னர் விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் நாம் படிக்க நேர்கிறது.

இது மகாபாரதத்தின் கதைப்போக்கில் தானாகவே நிகழும் ஓர் அற்புதம். குறிப்பாக பகவத்கீதையில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் மானுட வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகும். இந்த பகவத் கீதை மகாபாரதத்தில் வெகுவாகச் சொல்லப்பட்டாலும், பகவானான மகாவிஷ்ணுவால் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரால் சூரிய பகவானுக்கு இது போதிக்கப்பட்டது. பின்னர் சூரிய பகவானின் சீடர்கள் மூலம் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டது.

*இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்*
*விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்*

என்பது சுலோகம். இதில் விவஸ்வான் என்பது சூரிய தேவனைக் குறிக்கும். பகவானே இந்த கீதையை சூரியன் மூலமாக மனித குலத்தின் தந்தையான மனுவிற்கும், மனு இஷ்வாகுவிற்கும் உபதேசம் செய்தனர் என்கிறார் கிருஷ்ணர்.

இதில் இஷ்வாகு என்பவர் ஸ்ரீராமனுக்கு மூதாதையர் ஆவார். இப்படி சில யுகங்களில் ஓதப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட பகவத்கீதை பல காலங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாலும், உண்மையான கருத்துகள் சிதைவுண்டதாலும் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததாக கிருஷ்ண பரமாத்மாவே கூறுகிறார்.

இதுவே கடைசியில் இன்று வரை நிலைத்துக் கொண்டிருக்கிறது. இன்றுகூட பகவத்கீதையின் சரியான உள்ளர்த்தம் உணராத பண்டிதர்களும் நம்மிடையே உண்டு. ஒரு சமயம் ஷீரடி சாய்பாபாவின் காலை வலி தீர வருடிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இருந்தார் மகா பண்டிதரான ஒரு பிராமணர் (நானாஸாஹப் சந்தோர்கர்).
அவருடைய கண்கள் மூடியிருந்தாலும், வாய் ஏதோ சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது.

என்ன சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் பாபா. பாபா நான் பகவத்கீதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார் அந்தப் பண்டிதர். உடனே பாபா அந்த சுலோகத்தைச் சொல்லி இதைத் தானே சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்ற கேட்டார்.

அந்த பண்டிதருக்கு வியப்பு தாளவில்லை. தான் மனத்திற்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்த சுலோகம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தார். சரி; அதற்குப் பொருள் கூறு என்றார் பாபா. பண்டிதரும் கூறினார். தவறு.. தவறு.. நீ சொன்ன பதில் தவறு. அது தான் உண்மையான பதில் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

ஸ்ரீ வியாசர் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்க மாட்டார் என்று சொல்லி சரியான பொருளைக் கூறி அந்த வேத பண்டிதரை மேலும் வியக்க வைத்தார் பாபா.

அப்படித்தான் சூரியபகவானுக்கு ஆதிகாலத்தில் உபதேசிக்கப்பட்ட பகவத்கீதை பலரால் கற்கப்பட்டாலும், பல சமயங்களில் சரியான பதில் சொல்லப்படாததாலும், ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டாவது முறையாக அர்ஜுனன் மூலமாக நமக்கு உபதேசித்தார். இதுவே கீதை பிறந்த கதை.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !