பாவ புண்ணிய கணக்கு எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒவ்வொரு ஜீவனின் கர்ம பரிபாலனம் 14 வயதிலிருந்து அமையத் தொடங்குகிறது. இது அனைத்துக் குழந்தைகளுக்கும் பொருந்தும். தனக்கு மிஞ்சித் தானம் செய்கின்ற பண்புடையோரின் கர்ம பரிபாலனத்தை சாட்சாத் ஸ்ரீ மஹா விஷ்ணுவே ஏற்றுக் கொள்கின்றார். திரு அண்ணாமலை திருத்தலத்தில் தனக்கும் மிஞ்சித் தானம் செய்கின்ற பண்பு ஓங்கும் பொழுது அதன் பலன் பன்மடங்காகப் பெருகி அருள் பாலிக்கின்றது.
பூலோகத்திலுள்ள இரண்டு கோடி கோயில்களிலும் தான தர்மங்கள் செய்தமையால் பிரபஞ்சத்திலேயே அதிக புண்ணிய சக்தியைச் சித்ரகுப்தன் பெற்றுள்ளான். அதற்குரித்தான தெய்வீக பயனாக அனைத்து ஜீவன்களின் கர்ம வினைகளுக்கேற்ப பாவ புண்ணியங்களை நிர்ணயித்து அதைக் கணக்கெழுதும் தெய்வீக சக்தியை இவனுக்கு அளிப்பாயாக என்று வரமருளினார்.
மிகுந்த ஆனந்தத்துடன் சித்ரகுப்தர் தன் பணியைத் தொடங்கினார். மேலே பாற்கடலில் ஸ்ரீ மஹா விஷ்ணு புன்னகை செய்ய திரு அண்ணாமலை கோயிலின் முன் ஒரு பிச்சைக்காரன் நின்று கொண்டிருக்க, அவனருகே கை கால்கள் இல்லாத முடவன் பிச்சை கேட்க, முதல் பிச்சைக்காரன் தன் திருவோட்டைக் கவிழ்த்து அதிலிருந்து 10 பைசாவை முடவனுக்கு அளித்தான். 10 பைசாவை வைத்து என்ன செய்வது? கஞ்சி வாங்குவதற்கே நாலணா ஆகுமே என்று முடவன் பரிதாபமாகக் கேட்டான்.
முதல் பிச்சைக்காரன் சற்றும் சளைக்காமல் தன் அருகில் இருந்த மற்றொரு பிச்சைக்காரனிடம் 15 பைசா கடன் வாங்கி முடவனுக்கு அளித்தான். இது பூலோகத்தில் நடந்த நிகழ்ச்சி. இதுவே சித்ரகுப்தரின் பணியில் முதல் ஜீவனின் பாவ புண்ணியக் கணக்கின் துவக்கமாக அமைந்தது. சித்ரகுப்தர் முதல் பிச்சைகாரனுடைய கர்ம பரிபாலனக் கணக்கில் தானம் 10 பைசா, கடன் 15 பைசா என்று எழுதிட, என்ன மாயம், அவ்வெழுத்துக்கள் மறைந்து விட்டன, சித்ரகுப்தர் மீண்டும் எழுத எழுத அவை மறைந்தன.
தன் கணக்கு தவறோ என்று ஐயுற்ற சித்ரகுப்தர் தானம் 25 பைசா, கடன் 15 பைசா என்று கணக்கை மாற்றி எழுதினார், என்ன மாயம்! இவ்வெழுத்துகளும் மறைந்தன. சித்ரகுப்தர் கலங்கினார். தனது முதல் காரியமே சரியாக நிறைவேறவில்லையே என ஸ்ரீ பிரம்மாவிடம் சரணடைந்தார். அவரோ ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திருவிளையாடல் என்பதால் ஸ்ரீ மஹா விஷ்ணுவிடம் சித்ரகுப்தரை அனுப்பி வைத்தார்.
ஸ்ரீமந் நாராயணா! தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும், சித்ரகுப்தர் சரணடைந்தார். ஸ்ரீ மஹா விஷ்ணு சிரித்தவாறே, சித்ரகுப்தா அந்தப் பிச்சைக்காரனிடம் இருந்த தொகை எவ்வளவு? பத்து பைசா சுவாமி. அவன் எவ்வுளவு தானம் செய்தான்? 25 பைசா சுவாமி! நீ அளவிறந்த தான தருமங்கள் செய்தமையால் இப்பதவி பெற்றாயல்லவா? நீ எவ்வாறு தான தருமங்கள் செய்தாய்? ஸ்ரீ லக்ஷ்மி கடாட்சத்தால் கிட்டிய அனைத்தையும் தானம் செய்தேன், மஹாப்பிரபோ!” அப்படியானால் உன்னிடம் இருந்ததை தர்மம் செய்தாய்..
அப்படித்தானே!” “ஆமாம் சுவாமி!” “ஆனால் அந்தப் பிச்சைக்காரன் தன்னிடம் இருந்ததை விட, அதாவது தனக்கும் மிஞ்சித் தானம் செய்திருக்கிறான் அல்லவா? அதுவும் திருஅண்ணாமலை ஷேத்திரத்தில்! அப்படியானால் உன்னைவிட அவன் உயர்ந்தவனல்லவா? உன்னைவிட ஆன்மீகத்தில் உயர் நிலையடைந்த அப்பிச்சைக்காரனுடய பாவ, புண்ணியக் கணக்கை எழுதும் தகுதி உனக்கில்லையே! அதனால்தான் நீ எழுதிய யாவும் மறைந்தன, புரிந்ததா?” “எவனொருவன் தன் தகுதிக்கு மிஞ்சித் தான தருமங்கள் செய்கிறானோ, அவனுடைய கர்மபரிபாலனத்தை யாமே ஏற்போம்! இதை உன்மூலம் அனைவரும் அறியவே யாம் இத்திருவிளையாடல் செய்தோம்!”
சித்ர குப்தர் வெட்கித் தலைகுனிந்தார். தக்க சற்சங்கங்களை நாடி உழவாரத் திருப்பணிகள, ஆலயத் திருப்பணிகள், அன்னதானம், வஸ்திரதானம், ஏழை எளியோர்க்கு மருத்துவ உதவி, கல்விக்கு உதவியளித்தல் போன்ற நற்காரியங்களால் தனக்கு மிஞ்சித் தானதருமங்களில் திளைக்கின்ற அடியவருக்கு எல்லாம் வல்ல ஸ்ரீசற்குருவே ஸ்ரீமஹா விஷ்ணுவாகவும், ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாகவும் அமைந்து அன்பால் அரவணைத்துப் போஷிக்கின்றார். எனவே சற்குருவே அனைத்து இறை அவதாரங்களின் ஸ்தூல வடிவம்.
