முக்குறுணி விநாயகர் வரலாறு!
கி.பி.17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னருக்கான அரண்மனை கட்டுவதற்கு, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் உள்ள இடத்தில் மண் எடுக்க தோண்டிய போது மண்ணுக்கடியில் 8 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை கிடைத்தது. இவ்விநாயகரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனர். மன்னர் திருமலை நாயக்கர் அந்த விநாயகரை, மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும், மூன்று குறுணி (18 படி) பச்சரிசியால் (குறுணி என்றால் 6 படியாகும்) கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்ததால் இவ்விநாயகருக்கு முக்குறுணி விநாயகர் என்ற பெயர் நிலைத்துவிட்டது என்று வரலாறு கூறுகிறது.
மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரை தரிசிக்கச் செல்லும் வழியில் தெற்குப் பார்த்த வண்ணம் எட்டு அடி உயர “முக்குறுணி விநாயகர்” எழுந்தருளி உள்ளார். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று, அந்த விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மிகப்பெரிய அளவில் கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆலய மடப்பள்ளியில் கொழுக்கட்டைச் செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி அன்று பகல் 11 மணி அளவில் கரும்பில் தொட்டில் கட்டி பிள்ளையை தூக்கி வருவதுபோல் கொழுக்கட்டையை எடுத்து வந்து முக்குறுணி விநாயகருக்கு படைத்து பக்தர்களுக்கும் கொடுக்கிறார்கள்.
முக்குறுணி விநாயகர் முன்புள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கரின் உருவமும், அவரது குடும்பத்தினரின் உருவங்களும் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு கரையில் தம் திருமேனி முழுவதும் எப்போதும் விபூதி அபிஷேகம் காணும் விபூதி விநாயகர் அருள் பாலிக்கிறார். விபூதி விநாயகரின் மேற்புறம் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் அருள்புரிகிறார்.
விபூதி விநாயகரை வழிபடும்போது, பக்தர்களாகிய நாமே சுத்தமான விபூதி கொண்டு வந்து, நமது கைகளாலேயே விபூதி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடலாம். தொடர்ந்து 11 நாட்கள் அல்லது 11 வெள்ளிக்கிழமைகளில் விபூதி அபிஷேகம் செய்து 11 முறை விபூதி விநாயகர் சன்னிதியை வலம் வந்து வழிபட்டால், பித்ரு தோஷங்கள், முன் ஜென்ம வினைகள், வறுமை, சுபகாரியத் தடைகள் முதலியன அகலும் என்பதி ஐதீகமாக சொல்லப்படுகிறது.
பூசம், மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் நட்சத்திர நாட்களிலும், பிரதமை, சதுர்த்தி, திரயோதசி, அமாவாசை, முழுமதி நாட்களிலும் விபூதி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பாகும். விபூதி என்றால் மேலான செல்வம் எனப் பொருள். இந்த விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் பெருஞ்செல்வம் வந்து சேரும். அனைத்து தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், ஹோமங்கள் உட்பட, ஆன்மீக பக்தர்கள் மற்றும் தெய்வங்கள் செய்யும் அனைத்து செயல்களும் முழு முதற்கடவுளாக கணபதியை முன்னிறுத்தி வணங்கிய பின்பே செய்யப்படுகிறது.
கணபதியை மதிக்காமலும், வணங்காமலும் செய்யப்படும் செயல்கள் பெரும்பாலும் அதிக தடைகளை சந்திக்கிறது. ஒருசில செயல்கள் வெற்றி அடையாமல் போகிறது. அரக்கர்களை அழிக்க திரிபுரம் எரித்த போருக்கு சிவபெருமான் சிவகணங்களுடன் புறப்படும் முன் கணபதி பூஜை செய்யாமல் புறப்பட்டு தேரில் ஏறியவுடன் தேர் அச்சு முறிந்து போய்விட்டதால், விநாயகர் பூஜை செய்துவிட்டு மீண்டும் போருக்கு புறப்பட்டார்.
சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழிநீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது பிரும்மாண்ட புராணம். லலிதோபாக்யானம் என்னும் நாலில், தடை செய்யும் யந்திரத்தை சக்தி ஸைன்யங்கள் நடுவில் அரக்கர்கள் போட்டுவிட்டனர்.
அம்பிகையின் படையினர் செயலற்றுவிட்டனர். அப்போது அம்பிகை, முக்கண்ணனை அழைத்த மாத்திரத்தில், யானைமுகத்தோன் தோன்றி தடை யந்திரத்தை முறித்தெறிந்து அம்மாள் படைகளுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தார் என்றிருக்கிறது. சிவபெருமானை பார்க்க வந்த சந்திரன் விநாயகரை சற்றும் மதிக்காமல் கடந்து சென்றதால் அவரின் சாபம் காரணமாக கலை இழந்து ஒளி மங்கிபோனார். தன் தவறுக்கு வருந்தி வணங்கிய பின்பு சாபவிமோசனம் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.
கணபதி ஹோமம்:
- கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.
- யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, ஸவாஞ்சித பலவமாப் நோதி ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம்.
- நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான்.
- அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான்.
கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு அவை: மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம்.
எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான்.
கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம். கணபதி ஹோம முறை, கணபதி உபநிஷத்திலும் மற்றும் வாஞ்சாகல்பதா என்ற ஒரு பெரிய ஹோம முறையிலும் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார்.
அவருக்கு த்வைமாதுரர் என்ற பெயர் உண்டு. உமாதேவியும், முக்கண்ணனின் முடியிலுள்ள கங்கையும் ஆக இரண்டு பேருமே அவர் தாயார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.