குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகச் செய்யும் விநாயகர்!

101

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகச் செய்யும் விநாயகர்!

திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் என்ற ஊரில் உள்ளது ஐநூற்று பிள்ளையார் கோயில். இங்கு அவரே மூலவராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சங்கடஹர சதுர்த்தி, பெரிய சதுர்த்தி, கார்த்திகை, வருடப்பிறப்பு, தீபாவளி ஆகிய நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளன்று உற்சவர் கணபதி ஊருக்குள் வீதி உலா வருகிறார். ஆதிவிநாயகா என்று போற்றி வணங்குவோருக்கு எல்லாம் அருள் பாலித்து கோயில் திரும்புகிறார்.

பொதுவாக கணபதி கோயில்களி மூலவருக்கு மட்டும் ஆராதனை காண்பிக்கப்படும். ஆனால், இந்தக் கோயிலில் மூலவர் ஐநூற்று பிள்ளையார் மற்றும் உற்சவர் கணபதி இருவரும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிப்பதால் இருவருக்கும் தீப ஆராதனை காண்பிக்கப்படுகிறது.

நின்ற கோலத்தில் உள்ள உற்சவர், திருவிழா நாட்களில் 4 வீதிகளிலும் வீதியுலா வருகிறார். மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர். சாதாரண நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோயில். ஐஸ்வர்யம் பெருகவும், அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு பெறவும் பிரார்த்திக்கின்றனர். அப்படி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

எந்த காரியத்தை தொடங்கினாலும் முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடு வழக்கம். போகிற அவசரத்தில் கூட, எளிதில் தரிசித்து வணங்கி விட்டுச் செல்லும் விதத்தில் எளிமையாகக் கோயில் கொண்டுள்ள ஒரே கடவுள் இவர்தான். எந்தச் சாலை வழியாகப் போனாலும் கூப்பிடு தொலைவில் ஒரு பிள்ளையார் கோயில் என்பது தமிழகத்தின் தனிச்சிறப்பு. இந்து மதத்தில் கணபதியையே பரம்பொருளாக வழிபட்டு வந்த ஒரு பிரிவினர் இருந்தனர். இந்த வழிபாட்டிற்கு காணபதம் என்றும் பெயர் இருந்ததாக காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறார். கணபதி மூலாதார சக்தி உருவினர், பிரணவம் என்ற ஓங்கார வடிவினர். அவரது துதிக்கையே ஓங்காரத்தைக் குறிக்கும் வகையில் அமைந்ததுதான்.

கணபதி என்னும் பதத்தில் உள்ள க என்பது மனோ வாக்குகள் ண என்பது அவற்றைக் கடந்த நிலை. அவ்விரண்டுக்கும் ஈசன் கணேசன். சிலர் க என்பது அறிவு; ண என்பது வீடு என்று கொண்டு அறிவுக்கும் வீட்டுக்கும் உரிய தெய்வம் என்பர். கொடிய மாயையை துண்டிப்பவர் என்பதால் வக்ர துண்டர் எனப் பெயர் கொண்டார். அவர் வாகனமாகிய மூஷிகம் நமக்குள் இருந்து நம்மை அழிக்கும் கள்ளத் தன்மையான உலகப் பற்று என்றும், அவர் உண்ணும் மோதகம் இன்பத்தைப் பயக்கும் ஞானம் என்றும் கூறுவர்.

கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் சாரதா திலகம் என்ற நூல் கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோயில் கொண்டதனால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோயில் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும். அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் துகி, இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் ஐநூத்து பிள்ளையார் என்று மக்களால் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு நூறு மடங்கு பலன் என்று சொல்வார்களே, அந்த மாதிரி இந்த விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.