கடன் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

59

கடன் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

மனிதன் தான் செய்யும் தவறுகளை மனிதனிடம் கூறினால் ஏளனம் பேசுவான் என்பதற்காக ஏதாவது ஒரு பரம்பொருளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து தனிமையான இடத்தில் மரம், கல் போன்றவற்றிடம் தனது குறைகளை சொல்லி வந்தான்.

மக்கள் குடியிருக்கும் பகுதியில் கடவுளுக்கு கோயில் கட்டி நல்லது, கெட்டதை அதனிடம் ஒப்படைத்தனர். பிற்காலத்தில் நம்மை காக்கும் கடவுளுக்கு ஏன் விழா கொண்டாடக்கூடாது என்று யோசித்த முன்னோர்கள், கிராமத்தை காக்கும் தேவதைக்கு ஆண்டுதோறும் ஊர்மக்கள் கூடி விழா எடுத்து மகிழ்ந்தனர். இப்படி கடவுள் நம்பிக்கை என்பது ஆதிகால மனினுக்கு தோன்றி இன்றுவரை நிலை மாறாமல் இருக்கிறது.

நாட்டை ஆட்சி நடத்திய மன்னர்கள் கோயில், குளம் அமைப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினர். அவர்கள் கட்டிய கோயில்கள் இன்று வரை பக்தர்களின் பெருமையை போற்றும் வகையில் உள்ளது. கர்நாடகாவில் புராண காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக சோமேஷ்வரன் கோயில், காடு மல்லேஷ்வரசுவாமி கோயில், தொட்ட கணபதி கோயில், கவிகங்காதேஷ்வரசுவாமி கோயில் என்பது உள்பட பல கோயில்கள் உள்ளது.

அந்த வரிசையில் பெலகாவி மாவட்டம், ஹுக்கேரியில் கடந்த 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கால பைரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோயில் சிறியதானாலும், புகழ் பெரியது என்ற பழமொழி போல், நமது கலாச்சாரத்தில் கட்டப்பட்டுள்ள கால பைரவர் கோயில்.

சைவத் திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆன்மீகத் திருத்தலங்கள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் உள்ள திருத்தலங்கள் மட்டுமே ஜாதி, மத,. பேதமில்லாமல் அனைவரும் வந்து செல்லும் புண்ணிய ஸ்தலமாக உள்ளது. அந்தப் பட்டியலில் பெல்காம் மாவட்டம் ஹுக்கேரியிலுள்ள கால பைரேஷ்வரர் கோயிலாக உள்ளது.

இந்து இஸ்லாமிய, ஜெயினர் என்று அனைத்து மதத்தினரும் கால பைரவரை தரிசித்து பலனடைந்து வருகிறார்கள். இவரை கடன் தீர்க்கும் கால பைரவர் என்று மக்கள் பெருமையுடன் அழைக்கிறார்கள். ஹுக்கேரியிலுள்ள ஹீரே மட்டம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் அனைத்து தரப்பு மக்களும் போற்றி வணங்கும் ஆன்மீகத் திருத்தலமாக 10 நூற்றாண்டுகளாக பிரசித்தி பெற்றுள்ளது.

வரலாறு:

பெல்காம் மாவட்டம் ஹுக்கேரிக்கு தனி வரலாறு உள்ளது. பழங்காலத்தில் ஹுக்கேரியில் 36 ஏரிகள் இருந்து கண்ணோக்கி பார்க்கும் இடமெல்லாம் நீர் நிலைகளும், பூந்தோட்டங்களும் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. இந்தக் கிராமத்தில் பூந்தோட்டங்கள் அதிகம் காணப்பட்டதால் ஹுவினக்கேரி (பூந்தோட்ட கிராமம்) என்று அழைத்தனர். நாளடைவில் அது ஹுக்கேரியாக மாறி தற்போது ஹுக்கேரி என்றாகியுள்ளது. ஜெகத்குரு, ரேணுகாச்சார்யா இப்பகுதியில் ஆன்மீக யாத்திரை சென்றபோது அவரால் தீட்சை பெற்ற குருஷாந்த கேசவ சுவாமி பக்தர்களின் ஆதரவுடன் ஹுக்கேரியில் தங்கினார்.

அப்பொழுது மக்கள் மிகவும் கடன் மற்றும் கஷ்டத்தில் வாழ்ந்து வந்தனர். அவரது நிலையைப் பார்த்த குருசாந்தேஷ்வர சாமிகள் இரவு படுக்கும்போதே மனமுருகி சிவபெருமானிடம் இந்த மக்களின் கஷ்டத்தை போக்கும்படி வணங்கினார்.

அவரின் வேண்டுதலைக் கேட்ட ஈஸ்வரன் நீ தங்கியுள்ள இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து வணங்கினால் என்னைத் தேடி வரும் பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கி சுகவாழ்வு தருவார் என்று எதிர்பார்த்தார். அதைதொடர்ந்து கிராம மக்களின் உதவியுடன் கால பைரவர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். இந்தக் கால பைரவனிடம் பக்தர்கள் கடன், குடும்பக் கஷ்டம், தொழில் விருத்தி, திருமணத்தடை, குடும்ப பிரச்சனை, குழந்தையின்மை உள்பட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கல்யாணப் பூசணியை இரண்டாகப் பிளந்து அதில் எண்ணெய் விளக்கு ஏற்றி பக்தியுடன் வேண்டிக்கொண்டால் அவர்கள் கஷ்டமெல்லாம் தீரும்.

இங்கு நிலைகொண்டுள்ள கால பைபைரவரை ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி வாரந்தோறும் சனி மற்றும் திங்கள் கிழமைகளில் பூஜை செய்தால் அவர் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும். நாட்டின் வட மாநிலத்திலுள்ள காசியில் கால பைரவர் அன்னப்பூரணி சன்னதி ஒரே இடத்திலிருந்து பக்தர்களை அருள்பாலிப்பதுபோல் ஹுக்கேரியிலுள்ள காலபைரேஷ்வரர் அன்னப்பூரணி சமேத அருள் பாலிக்கிறார். குறிப்பாக கடனில் உள்ளவர்கள் கால பைரவரை வேண்டினால் கடனெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற நம்பிக்கையுள்ளதால் மக்கள் கடன் தீர்க்கும் கால பைரவர் என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்.

நவராத்ரி விசேஷம்: நவராத்ரி பண்டிகையை நாட்டில் ஒவ்வொரு பகுதியில் வெவ்வேறு பெயரில் அவரவர் பண்பாடு கலாச்சாரத்தின்படி கொண்டாடுகிறார்கள். அதன்படி ஹுக்கேரி கால பைரேஷ்வவரரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்ரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தருமம் தேசப்பற்றை எடுத்துக்கூறும் வகையில் இளைஞர் தசரா, வேளாண்தசரா, விவசாய தசரா, ஒற்றுமை தசரா, ஆத்ம பரிபூரண தசரா, கிராமின தசரா, நாட்டுப்புறக்கலை தசரா, இலக்கிய தசரா என்ற பெயரில் 10 நாட்கள் விமர்சையாக நடத்துகிறார்கள்.