காசியில் திதி கொடுப்பது எப்படி ?

261

நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும். இந்த நிலை அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.

இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.

திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் (இறந்தபின் எரித்த) சாம்பலை வைத்து கொடுக்கபடுவது.

இப்போது ஒருவர் தனது மூதாதையருக்கு திதி கொடுக்க எண்ணுகிறார். அவருக்கு அவரது மூதாதையரின் சாம்பல் எங்கிருந்து கிடைக்கும். ? இறந்து பல வருடங்கள் கழிந்த பின் எங்கே போவது சாம்பலுக்கு ?

அதனால் அவர் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,

ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும்.

அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து அதற்கு பூஜை செய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை மலர் (பூ) வைத்து பூஜை செய்யவேண்டும்.

இந்த நாட்களில் உறவினர் இறந்தால் இருப்பது போல துக்கம் அனுஷ்டிக்கவேண்டும்.

இந்த மணல் காய்ந்தபின் பார்த்தால் இடுகாட்டு சாம்பலுக்கு சற்றும் மாறாமல் இருக்கும்.

2. காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.

இப்போது நாம் திதி கொடுக்க தயார்.

முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும்.

திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.

(மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்). பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.

அங்கே நாம் சென்று இறங்கி இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு அந்த மணலில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது பூவை வைத்து வருடம், மாதம், அன்றைய கிழமை, அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், தான் இன்னார் மகன் அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு போன்றவைகளை சொல்லி என்னால் கொடுக்கப்படும்.

இந்த திதியை ஏற்று அவர்களின் ஆன்மாவை கைலாயத்திற்க்கோ வைகுண்டத்திற்கோ சேர்த்து ஆன்மாவிற்கு விடுதலை தரவேண்டும் தாயே என்றவாறு

அந்த மணலை கையில் ஏந்தி நம் தலையில் வைத்து கங்காதேவி, யமுனாதேவி, சரஸ்வதி தேவியை நினைத்து மனமுருகி வேண்டி அப்படியே நீரில் மூழ்கி விட்டு விடவேண்டும்.

( நம் தலையில் நேரடியாக மணலை வைக்கக்கூடாது, மணல் நம் தலையில் படக்கூடாது, கையில் வைத்து மூடிக் கொள்ளவேண்டும்).

இப்படியே நமது அத்தனை உறவினர்களுக்கும் ஒவ்வொருவராக சொல்லி சொல்லி மணலை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்.

நினைவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்தையார் வம்சம் எல்லோருக்கும் என்று சொல்லி விட்டு விடலாம். நமக்கு விரோதமான சொந்தமாக இருந்தாலும் இங்கே கோபம் பாராட்டாமல் விரோதம் பாராட்டாமல் கொடுக்கவேண்டும்.

ஆத்மாக்களுக்கு சொந்தமில்லை நாமெல்லோரும் உறவுகளே !!!
எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் நன்றாக குளித்துவிட்டு படகில் ஏறி இன்னும் கொஞ்சம் நதியின் உள்ளே சென்று ஒரு கேன் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் த்ரிவேணி தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அடுத்து நாம் செல்வது வாரனாசி எனப்படும் காசி மாநகரம்.

இரண்டாவது கட்டமாக நமது திதி கொடுக்கும் நிகழ்வில் நாம் இப்போது அலகாபாத்தில் இருந்து சுமார் 220km தொலைவில் இருக்கும் வாரணாசிக்கு வந்துவிட்டோம். கங்காதேவி இங்கு ஆர்ப்பரித்து ஆனந்தமாக பாய்ந்து செல்கிறாள். இங்கேதான் பல ஆயிரம் முனிவர்களும் மகரிஷிகளும் தினசரி அரூபமாக வந்து ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசிப்பதாக வாரனாசி க்ஷேத்ர புராணம் கூறுகிறது.

மேலும் எம்பெருமான் சிவன் கேதார்நாத்தில் இருப்பதை காட்டிலும் காசியில் இருப்பதை விரும்புகிறார் என்கிறது.

இங்கே நாம் கங்கையில் ஆனந்தமாக நீராடி (நமது அன்னையின் மடியில் தவழ்வதுபோல்) மகிழ்வுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கே சாஷ்ட்டாங்கமாக வீழ்ந்து தண்டனிடவேண்டும்.

( நமஸ்கரிக்கவேண்டும் ) அப்போது நாம் “ ஐயனே எனக்கு தெரிந்தவகையில் எனது மூதாதையருக்கு என்னால் ஆன வகையில் திதி தந்துள்ளேன். பெருமான் அதனை ஏற்று எனது மூதாதையரின் ஆன்மாக்களை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ எது அவர்களின் இருப்பிடமோ அங்கு சேர்க்க வேண்டும் என்று மனதில் ஆழமாக சிந்தித்து தண்டனிட வேண்டும் என்பார் பெரியோர்கள்.

இங்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருமேனியில்(சிவலிங்கத்தில்) நமது சிரம் வைத்து வணங்கி வேண்டுதல் செய்யலாம். இங்கு பார்க்க வேண்டிய கோயில்கள் ஏராளம், ஏராளம். ஸ்ரீ அன்னை அன்னபூரணி, ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ மகாகால பைரவர் என நிறைய கோயில்கள் உள்ளன. சந்திரமுகி, அரிச்சந்திரா கட்டம் என நிறைய படித்துறைகள் உண்டு. கங்கை கரை ஓரங்களில் முதலைகள் உண்டு. ஜாக்கிரதை.

அடுத்து நாம் செல்லவேண்டியது கயா எனும் நகரம்.

மூன்றாவதாக நாம் செல்ல இருப்பது கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கிடைத்த “பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம்”

இங்கு நாம் ஒரு தமிழ் தெரிந்த ஐயரை பார்த்து பேசிக் கொள்ள வேண்டும். ( இரயில்வே ஸ்டேஷனிலேயே நம்மை அவர்கள் மடக்கி விடுவார்கள்.) நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் காசு கறந்து விடுவார்கள்.

இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் குளித்து விட்டு வந்து விடவேண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேன் தந்து அதனை கலக்கி பிசைந்து தயார் செய்ய சொல்வார், நாம் வைத்துள்ள எள், தேன், பச்சரிசி மாவுடன் அதையும் சேர்த்து நிறைய மாவாக்கி அதனை பிசைந்து கொள்ளவேண்டும்.

அதனை மூன்று பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் முப்பத்திரண்டு சிறு சிறு உருண்டைகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்டைகள் உள்ளது.

நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்வார், பிறகு நம்மிடம் நமக்கு மிகவும் பிடித்த ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் இவைகளை நமது மூதாதையருக்காக இனி பயன்படுத்தமாட்டேன் என்று விட்டுவிட சொல்வார்.

சரி என்று நாம் ஏதாவது ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் விடவேண்டும். அதனை நாம் என்றுமே உண்ணவே கூடாது.

(நான் எனக்கு மிகவும் பிடித்தமான ஆப்பிளை விட்டேன், மிகவும் ருசித்து உண்ணும் பாகற்காயை விட்டேன், இலை ஆலமரத்தின் இலையை விட சொன்னார்கள் விட்டேன்.)

ஒன்று.
முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும்.

இரண்டு
இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில் மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும், அப்போதும் நாம் “எம்பெருமானே! என்னாலான வகையில் எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், இதனை மனமுவந்து ஏற்று அவர்களின் ஆன்மாவை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ அங்கு அழைத்துச் செல்வாயாக” என்று மனமுருக வேண்டிக் கொண்டே ஒவ்வொன்றாக அந்த திருவடியின் மீது விடவேண்டும்.

மூன்று
மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும் ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும். (இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி ஸ்ரீகாசியம்பதியிலும் , கடைசிப்பகுதி (கயாவழியாக – கயாசுரன் வேண்டுதல்படி- படிக்க : கயாசுரன்-கதை) இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.

நாம் திதி தரமறந்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்களால் கீழேயேதான் இருக்கமுடியும், மேலேறும் மற்ற ஆன்மாக்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பர்கள், இங்கே அவர்கள் அழ அழ நாம் அங்கே மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாவோம் என்பார்கள், அந்த ஆன்மாக்களின் உறவுகளின் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே இவனாவது நமக்கு திதி தந்து மேலேற்றுவானா என்று எண்ணுவார்களாம்.

நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.

இதனை அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல் ) காசியில் தண்டம் (சுவாமியை தண்டனிடுதல்) கயாவில் பிண்டம் (பிண்டார்ப்பணம் செய்தல் ) என்பார்கள்.

பின்னர் அங்குள்ள ஒரு ஐயரை அழைத்து நாம் நிர்மாணித்த ஐயர் கேட்பார் “ இவர்களின் மூதாதையர் சொர்க்கம் சென்று விட்டார்கள், நமது ஐயர், அவர்கள் இவர்களின் செய்கையினால் சந்தோஷப்பட்டார்களா? அவர்கள், ஆம், மிகவும் சந்தோஷப்பட்டார்கள், நமது ஐயர், சரி, இவர்களை ஆசீர்வதியுங்கள்.

அந்த ஐயர், உங்கள் உறவினர்கள் சார்பில் உங்களை ஆசிர்வதிக்கிறேன்,

உங்கள் செய்கையினால் அவர்கள் மிக சந்தோஷம் அடைந்து சொர்க்கம் சென்றார்கள். உங்களுக்கு ஆசீர்வாதம், இனி நன்றாக இருங்கள், என்று சொல்வார்கள் . இதற்கு “சொஸ்தி சொல்வது” என்பார்கள்.

அடுத்தது நாம் செல்ல இருப்பது இராமேஸ்வரம்.

நாம் அடுத்து மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும், இராமேஸ்வரம் வந்து நாம் அலகாபாத்தில் நாம் எடுத்த தீர்த்தத்தை கோயிலில் கங்கா அபிஷேகம் என்று சொல்லி இரசீது போட்டு அதனை இங்குள்ள கோயில் ஐயரிடம் தரவேண்டும், அவர் உங்களை உள்ளே அமரச்செய்து உங்கள் கங்கை நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை நீங்கள் காணச்செய்வார்.

அப்போது நீங்கள் “ ஐயனே என் அறிவுக்கு தெரிந்தவாறு எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், அதனை ஏற்று அவர்களை நின் மலர்ப்பதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அங்கே வரும் கோடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்லோருக்கும் தரவேண்டும். வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து வைத்துக் கொள்ளலாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும்.

இப்படியாக இராமேஸ்வரத்தில் துவங்கி இராமேஸ்வரத்திலமுடிகிறது மூதாதையருக்கு திதி தரும் காசி யாத்திரை.

ஸ்ரீஅலகாபாத், ஸ்ரீகாசி மாநகரம், ஸ்ரீகயா நகரம் இங்கெல்லாம் மலர்கள் மணப்பதில்லை, காகம், பல்லிகள் சப்தமெழுப்புவது இல்லை, மாடுகள் முட்டுவதில்லை, பிணம் எரியும் வாடை வருவதில்லை.

காரணம் என்ன ? அங்கு லட்சோப லட்சம் முனிவர்களும் ரிஷி பெருமக்களும் தவமியற்றிகொண்டே இருக்கின்றார்கள். அவர்களின் தவம் கலைந்து விடக்கூடாதென்று எண்ணியே எம்பெருமான் கருணை கொண்டு அருளியதே காரணம்.

காசி யாத்திரை செல்லுங்கள், மூதாதையருக்கு திதி கொடுங்கள். அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி நீங்கள் சந்தோஷமாகுங்கள் , உங்கள் சந்ததிகளுக்கும் நல்வழி அமைத்துக் கொடுங்கள் .

வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.