குலதெய்வ விரத வழிபாடு!
வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு…
காலங்காலமாக நம் முன்னோர்கள் வழிபட்ட வந்த குல தெய்வத்தை மாதந்தோறும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அப்படியும் இல்லை என்றால் 6 மாதததிற்கு ஒரு முறையேனும் குடும்பத்தோடு சென்று வழிபட வேண்டும். குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
எவ்வளவு சோதனைகள், கஷ்டங்கள் வந்தாலும் குல தெய்வத்தை தான் முதலில் வழிபட வேண்டும். அதன் பிறகு தான் மற்ற தெய்வங்கள். அதற்காக மற்ற தெய்வங்களை வழிபடக் கூடாது என்றில்லை. குல தெய்வதோடு சேர்த்து இஷ்ட தெய்வம், மற்ற தெய்வங்களையும் வழிபாடு செய்யலாம். பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள், வழிபட்டு வந்த தெய்வ நம் குல தெய்வம். குலம் காக்கும் தெய்வமாக நம் குல தெய்வமே போற்றப்படுகிறது.
முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை காக்கும் வல்லமை பெற்றவை. அந்த புண்ணிய ஆன்மாக்கள், ஒருவரது பூர்வ கர்ம வினைகளை கூட அகற்றும் சக்தி பெற்றவை. ஒருவருக்கு குல தெய்வமே தெரியவில்லை என்றால், அவர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன.
நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்கள் மற்றும் அவரவர் வாழ்க்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப கர்ம வினைகள் அமைகின்றன. ஒரு பரம்பரையில், கன்னியாக வாழ்ந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டு குல தெய்வமாக வழிபடுவது தமிழரது பண்பாடு. பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை கன்னித் தெய்வம், குல சாமி என்று அழைப்பர். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தி.
குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும் பலன் கிடையாது. எவ்வளவு பரிகாரம் செய்தாலும் அதற்கான பலன் கிட்டாது. ஒருவருக்கு குல தெய்வத்தின் அருள் கிடைத்தால் தான் மற்ற தெய்வங்களின் அருளும் கிடைக்கும். தோஷத்திற்கு பரிகாரம் செய்தாலும் அதற்குரிய பலனும் கிட்டும் என்பது ஐதீகம்.
