கோயில்களின் சிறப்பு அம்சங்கள்!
- திருப்புவனத்தில் பொன்னையாள் எனும் பக்தை சிவலிங்கத்தின் அழகில் மயங்கி அதைக் கிள்ளிய வடுவுடன் ஈசனை தரிசிக்கலாம்.
- சுருட்டப்பள்ளி தலத்தில் ஈசனின் கருவறைக்குப் பின் உள்ள திருமால், வலக்கையில் கபாலம் ஏந்தியிருக்கிறார். பொதுவாக ஐந்து தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான் திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் ஏழு தலை ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.
- திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமூர்த்தி விநாயகர் கோயிலில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகப் பெருமான்கள் திகழ்கிறார்கள்.
- குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மனும் ஞானமுத்தீஸ்வரனும் வேறு எங்கும் காண இயலாத வகையில் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ளனர்.
- தர்மபுரி கோட்டைக் கோயிலில் முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது, ஐயப்பனைப் போல் குந்திட்டு அமர்ந்திருக்கிறார்.
- காவேரிப்பாக்கம் சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி ஜடாமுடியுடனும் அட்சமாலை, அக்னி ஏந்தி காலடியில் உள்ள மானுக்கு உபதேசம் செய்யும் நிலையில் தரிசனம் தருகிறார்.
- வேலூர் ஆற்காடு அருகே, திருவலம் ஈசன் ஆலயத்தில் ஈசனின் கருவறை முன் ஜனக முனிவரின் திருவோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- சென்னை பழவேற்காடு சின்னக்காவணம் சதுர்வேதீஸ்வரர் ஆலய அம்பிகை பாசம், அங்குசம் ஏந்தாமல் மேல் இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு கரங்களில் அபய-வரதம் தரித்து மகாலட்சுமி அம்சமாய் விளங்குகிறாள்.
- சிங்கப்பெருமாள் கோயில் ஸ்ரீபெரும்புதூர் பாதையில் உள்ள ஆப்பூர் மலையில் அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதி த்ரிபங்க நிலையில் மகாலட்சுமியை தன்னுள் ஏற்று அருள்கிறார். அதனால் இவருக்கு பட்டுப்புடவையே சாத்தப்படுகிறது.
- வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கலையழகு கொஞ்சும் திருமண மண்டபத்தில் குழந்தை வடிவில் தவழும் அற்புத விநாயகரை தரிசிக்கலாம்.
- கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள், உத்தானசயனம் எனும் படுத்திருந்து சற்று எழுந்திருக்கும் பாவனையில் தரிசனம் அளிக்கிறார்.
- ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் முப்பதடி நீளத்தில் சயனித்த திருக்கோலம் கொண்டிருக்கிறாள். இழந்த பொருளை திரும்பப் பெற மிளகாய் அரைத்துத் தடவும் பிரார்த்தனை இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
- வரகூரில் லட்சுமி ஹயக்ரீவர் தோற்றத்தில், திருமகளை மடியில் இருத்தி தழுவிய நிலையில் லட்சுமி நாராயணர் காட்சியளிக்கிறார்.
- திருச்சி, லால்குடி அருகில், அன்பிலில் உள்ள சிவதலத்தில் அப்பர் ஞானசம்பந்தர் பாடல்களை செவி சாய்த்துக் கேட்ட கோலத்தில் செவிசாய்த்த விநாயகராகக் காணலாம்.
- பூம்புகார் அருகே, சாயாவனம் தலத்தில் வில்லேந்திய வேலவனைக் கண் குளிரக் கண்டு வணங்கலாம்.