அம்மனுக்கு நடத்தப்படும் குட்டி குடி திருவிழா என்பது என்ன?
திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அம்மன் கோயில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலும் ஒன்று. இக்கோவில் திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோயிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப் படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.
கோயில் வரலாறு:
நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தைவெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான்.
இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலைஒண்டி கருப்புசாமி கோயிலில் அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோயிலுக்கு ”குட்டி குடி திருவிழா” என்று நடத்தப் படுகிறது.
ஆலயத்தின் திருவிழா:
மாசி மாதம் நடைபெறும் இந்த திருவிழா வின் முதல்நாள் விழாவில் புத்தூர் கிராம மக்கள் தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க, யானை மீது மலர்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு சாற்றுவார்.. பின்னர் அம்மனை ஊர்வலமாக புத்தூர் மந்தையில் உள்ள பதுவு கோயில் அருகே கொண்டு வந்து பின்னர் இதனையடுத்து காளியவிட்டம் என அழைக்கப்படும் விழாவில் அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில், திருவீதியுலா வருவார் . அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு, தேங்காய் பழம், வைத்து படைத்து சுத்தபூஜை வழிபாடு செய்யப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக்குடி நிகழ்ச்சி நநடைபெறும். ஆண்டுதோறும், நிகழ்ச்சியில் முதல் மரியாதையாக, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்படும். கிடா ரத்தத்தை கோயில் மருளாளி குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திகடனாக பலியிடப்படும்.
குழுமாயி அம்மன் என்ற பெயர் எப்படி வந்தது?
(சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் தல புராணத்திலும் கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன், குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து).
கோயில் அமைந்துள்ள இடம்:
திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் தொட்டிப் பாலம் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல புத்தூர் நாலு ரோடு, பிஷப் ஹீபர் கல்லூரி வழியாக குமரன் நகர் செல்ல வேண்டு. அங்கிருந்து இடது (தெற்கு) பக்கம் கோயிலுக்குச் செல்லும் பாதை வழியாக நடந்தும் செல்லலாம்.
