Thursday, November 2, 2023
HomeAanmeega Thagavalgalகர்மவினை தீர சிவன் வழிபாடு!

கர்மவினை தீர சிவன் வழிபாடு!

கர்மவினை தீர சிவன் வழிபாடு!

விதிக்கு விதி செய்யும் சிவபெருமானை கும்பிடுங்கள்

‘கர்மவினை செய்தவரை விடாது. விளைவை அனுபவித்தே தீர வேண்டும். தேவர்களும், அவதாரப் புருஷர்களும்கூட அதற்கு விதிவிலக்கில்லை’ என்கிறது இந்துமதக் கோட்பாடு.

சுமார் அறுபது ஆண்டுகட்கு முன் ஒரு பெரிய ஜமீன்தார் நாடி ஜோஸ்யம் பார்த்தார். நாடியில் சொல்லப்பட்ட விஷயங்களும், ஜமீன்தாரின் வாழ்க்கை நடப்புகளும் ஒரே மாதிரி பொருந்தியிருந்ததை அறிந்து அவரும், மற்றவர்களும் பெரிதும் வியந்தனர். ஜமீன்தாரின் எதிர்காலத்தைப் பற்றி நாடி சிறப்பாக விவரித்தது. அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது.

நாடியை மேலும் படித்துக் கொண்டே போன ஜோதிடர், ஓரிடத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு ஜமீன்தாரின் முகத்தைப் பார்த்தார். ‘ஏன் நிறுத்திவிட்டீர்கள்? மேலே படியுங்கள்’என்றார் ஜமீன்தார். ஜோதிடர் தயக்கத்தை விட்டு அந்த இடத்தைப் படிக்கலானார்: ‘… வருஷம், ஆனி மாதம், 10ஆம் தேதி, சூரியன் உச்சியைக் கடந்த பின் இந்த ஜாதகன் பழைய சோறு சாப்பிடுவான்…’.

அதற்கு முன்னால் வரை நாடியை முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்ட ஜமீன்தார், இந்த இடத்தில் கடுமையாக எதிர்த்தார்: ‘நான் பழைய சோறு சாப்பிடுவேனா? அப்படிப்பட்ட ஏழ்மையான நிலை என் பரம்பரையைச் சேர்ந்த எவருக்குமே நேராது. நாடி இங்கேதான் தவறு செய்துவிட்டது….’.
சிறிது காலத்திற்குப் பிறகு ஜமீன்தார் ஜோதிடரையும், நாடி ஜோஸ்யத்தையும் அடியோடு மறந்துவிட்டார். ஆனால் காலம் மட்டும் மறக்கவில்லை.

அற்புதமான குதிரை ஒன்றை விலைக்கு வாங்கினார் ஜமீன்தார். குதிரைச் சவாரியில் அதிக நாட்டமுள்ள அவர், அதிஉற்சாகமாக அந்தக் குதிரையின் மீது ஏறி அமர்ந்தார். அதைத் தட்டிப் பறக்கவிட்டார். ‘வாயு வேகம், மனோவேகம்’ என்பார்களே, அந்த வேகத்தில் குதிரை பறந்து போய்க்கொண்டு இருந்தது. அதைத் திருப்ப மனம் இல்லாமல், அது போன போக்கில் போக விட்டார் ஜமீன்தார். இடையில் கடந்துபோன மைல்களுக்குக் கணக்கே இல்லாமல் போய்விட்டது.

குதிரை இப்பொழுது எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ஜமீன்தாருக்கு இடம் புரியவில்லை. புரியாத பகுதியில் புழுதியைக் கிளப்பிப் பறந்துகொண்டு இருந்தது குதிரை. பொழுது உச்சியைத் தாண்டிவிட்டது.

தாகம் அவர் நாக்கை இழுத்தது. கடும்பசி வயிற்றில் நெருப்பாய் எரிந்தது. ஏதாவது சாப்பிடாவிட்டால் உயிரே போய்விடும் போன்றதொரு நிலை. குதிரையை நிறுத்தி இறங்கினார்; பார்த்தார்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வீடுகளோ, மனிதர்களோ காணப்படவில்லை. ஏமாற்றத்தை இப்பொழுது நம்பிக்கையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘ஏதாவதொரு வீடு காணப்படும், மனிதர்கள் யாராவது காணப்படுவார்கள்’ என்று நம்புவது ஒன்றுதான் உயிரைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தக்கூடிய ஜீவ மந்திரம். அந்த மந்திரத்தை மனத்தில் ஜபித்துக்கொண்டே ‘எங்கே போகிறோம்?’என்பது தெரியாமலே நடந்தார்.

அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. தூரத்தில் குடிசை ஒன்று தெரிந்தது. அதை நோக்கி விரைந்தார். குடிசையில் இருந்தவர்களைப் பார்த்து, ‘பசி காதை அடைக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?’என்று பரிதாபமாகக் கேட்டார். ‘பழைய சோறு இருக்கிறது’என்றார்கள். ‘அது எனக்கு இப்பொழுது தேவாமிர்தம்; சீக்கிரம் போடுங்கள்’என்று கூறிப் பழைய சோற்றை வாங்கி ‘பரபர’வென்று சாப்பிட்டார் ஜமீன்தார். அன்று, ‘…. வருஷம், ஆனி மாதம் 10ஆம் தேதி, நேரம்: சூரியன் உச்சியைக் கடந்த நேரம்’. நாடி ஜோதிடன் சொன்னது பலித்துவிட்டது.

ஜோஸ்யத்தை முழுக்க முழுக்க நம்புபவர்கள் பலர். ஓரளவுக்கு ஒத்துக் கொள்பவர்கள் சிலர். அவர்கள் அதிர்ஷ்டம், தரித்திரம் என்பவற்றை சில சமயங்களில் ஏற்றுக்கொள்வார்கள்; சில சமயங்களில் மறுப்பார்கள். ‘உழைக்காமல், தரித்திரம் என்பதில் என்ன அர்த்தம்?’ என்று வாதிப்பவர்களும் உண்டு. நம் நாட்டில் அதிர்ஷ்டத்தை நம்பாதவர்கள்கூட தலைவிதியை அதிகம் நம்புவார்கள். ‘கர்மவினையின்பாற்பட்ட தலைவிதியை எவ்வேளையிலும் தவிர்க்க இயலாது’என்று இந்தியப் பண்பாட்டில் ஊறிய இதிகாசங்கள் தீர்க்கமாகவும், உறுதியாகவும் சொல்கின்றன. வாழ்க்கை நடைமுறையில் நாம் அவ்வாறே நினைப்பதற்குக் கற்பிக்கப்பட்டு இருக்கின்றோம்.

சமீபத்தில் ஒரு செல்வர் குருடாகிப்போன தம் இரு கண்களையும் எப்படியாவது மீண்டும் பெற வேண்டும் என்று தீவிரமாக முயன்றுகொண்டு இருந்தபொழுது அற்புதங்களை நிகழ்த்தும் ஒரு சாமியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்துவைப்பார் என்று கேள்விப்பட்டார். முழுநம்பிக்கையோடு அவரிடம் சென்றார்.

உள்ளே இருந்த சாமியார் அவரை அழைத்தார். செல்வர் மனத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தம் கை விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றார். சாமியார் அவரைப் பார்த்து, ‘இங்கே திருட்டுப்பயல் யாரும் இல்லை. மடியில் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் கை விரலில் போட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். செல்வர் திடுக்கிட்டுப்போனார்.

‘இது கர்மவினை; தீராது. வீண் முயற்சி செய்ய வேண்டாம்’ என்றார் சாமியார்.
அதற்குப் பிறகு செல்வர் வீண் முயற்சிகள் செய்வதை விட்டுவிட்டு, கர்மவினையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு, பதப்பட்டு, அடங்கிப்போனார்.

‘கர்மவினை செய்தவரை விடாது. விளைவை அனுபவித்தே தீர வேண்டும். தேவர்களும், அவதாரப் புருஷர்களும்கூட அதற்கு விதிவிலக்கில்லை’ என்கிறது இந்துமதக் கோட்பாடு. மேல்நாட்டில் இந்து மதத்தைப் பற்றி நினைவுகொள்வதற்குக் காரணமாக இருப்பவை இரண்டு விஷயங்கள். அவை: கர்மா, மறுபிறப்பு.

கடவுள்களை எல்லாம் சிருஷ்டித்த பரம்பொருளை தன் ஆத்மாவில் பிரதிஷ்டை செய்கின்றான். பரம்பொருளான இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலத்தால் ஏற்பட்ட கர்மாவுக்கும் அப்பாற்பட்டவன். பரம்பொருளின் ஆதீனத்தில் கர்மம் கரைந்து போய்விடுகின்றது. கடவுளைத் தொழுபவன் பக்தன்.

பரம்பொருளை நாடுபவன் யோகி, முனி, தபஸ்வி. நம் மரபுப்படி முனிவனுக்கும், தபஸ்விக்கும் இல்லறம் பொருத்தப்படாது. இல்லற வாழ்க்கைக்கு, துறவறத்தின் தூய்மையையும், துறவறத்தின் ஆன்மீகத் திறனையும் வழங்குவது சிவபெருமானின் அருள்.

பாவத்தைச் செய்த பின்பு நாம் அதை விட்டாலும், அதன் பலன் நம்மைத் தண்டிக்காமல் விடாது. அதுவே ‘கர்ம வினை’எனப்படுவது. நாம் பாவத்தை விட்ட பின்பு, பாவத்தால் தொடரும் வினையை அழிக்க வல்லது சிவபெருமானின் அருள். அவ்வகையில் துறவறத்தின் சிறப்பை இல்லறத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பது சிவபெருமானின் வழி. இப்பெருமையும், திறமையும், கனிவும் நம் மரபில் இல்லாத சிறப்புகளின் பிறப்புகளாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 18 =

Most Popular