Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamஇறந்தவர் வீட்டில் தேவாரம் திருவாசகம் பாடலாமா?

இறந்தவர் வீட்டில் தேவாரம் திருவாசகம் பாடலாமா?

இறந்தவர் வீட்டில் தேவாரம் திருவாசகம் பாடலாமா?

இறந்தவர்கள் இல்லத்தில் அடியார்கள் சென்று திருவாசகம் தேவாரப் பதிகங்கள் பாடுகின்றனர். இது சரியா? தவறா?

இது அன்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில் படிக்கலாம் எனக் கருத்திட்டவரிடம் வினவிய வினா! இதை விடத் திருமுறைகளை இழிவு படுத்த எவராலும் இயலாது!
இந்தக் கொடிய வழக்கம் தென் மாவட்டச் சைவர்கள் இல்லங்களில் எப்படியோ, எப்போதோ தொடங்கி, பரவலாக நடை முறைக்கு வந்து விட்டது!

திருமுறைகளில் பற்றும் பயிற்சியும் உள்ள ஒரு சிவனடியார், இறப்புக்கு முன் நினைவு தவறும் முன்பாக, அவர் செவியில் ஏறுமாறு திரு முறைகளைப் பாடுதல் தவறில்லை!
அதைக் கேட்பவர் சிவ சிந்தையே நிறைவாகிட, இறை நினைவுடன் மட்டும் உடலை நீங்குதல், உயர் பதம் அடைவதை விளைவிக்கும்.

பல ஆலயங்களுக்குத் தல புராணங்களை வகுத்தளித்து அருந் தொண்டாற்றிய, சிவ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நினைவாற்றல் நீங்கு முன், அவரது சீடர் சிவ. உ. வே. சுவாமி நாத ஐயர் திருவாசகம் ஓதிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டே, கண்களின் இருபுறமும் நீர் வழிய, அவர் உயிர் நீத்தது வரலாறு! உயிர் நீங்கிய பிறகு, தொடர்ந்து பாடவில்லை! உயிர் நீங்கிய பின் பாடுதல் வேதத்தை அவமதிப்பதாகும்!

திருமுறைகளின் பெருமைகளை அறியாதார் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள்! ஆலய வழிபாடே அறியாத, திருமுறைகளையே அறியாத, பெரிய தனவந்தர்கள் இறந்த வீடுகளிலும், பொருள் பேசி திருவாசகம் ஓதுவதில் போய் நின்றுள்ளது இன்றைய அவல நிலை! இதற்காக, இறைவனாரால் அருளாளர்கள் மீது மேலோங்கி நின்று, அருளப் படவில்லை இந்த மெய்ஞ் ஞானப் பாடல்கள்!

வாழ்வியல் சுப, அசுப காரியங்களுக்காகப் படைக்கப் பட்டவை அல்ல! ஏன் படிக்கக் கூடாது? தீட்டாவது ஒன்றாவது? என்பர் பிழைப்பாளர்கள் !எப்படித் தெளிவிப்பீர்கள்?
நல்ல வினா! இறந்தவர் வாரிசு ஒருவர், உடனே திருவாசகத்தை எடுத்துக் கொண்டு,
சிவாலயத்துக்குள் புகுந்து, இறைவன் திருமுன், இறந்தவர் சிவ பதம் அடைய வேண்டும் என்று திருவாசகம் படிக்கத் துணிவாரா? எது தடுக்கும்?
கடுமையான வினாக்களாக உளவே? பித்தம் உறைந்து போன சித்தத்தவரை தெளிவிக்க, இது போன்றக் கடுங் கசப்பு மருந்து கொடுத்தால்தான் தெளியும்!

திருமுறைகளின் ஒவ்வொரு பாடலிலும் சிவமே வரி வடிவாக உறைந்திருக்கிறார்! ஓதும் போது ஒலி வடிவில் வெளிப்படுகிறார்! பொருளறிந்து உருகி ஓதின், இறையாற்றல் ஓதுபவரின் ஆன்மாவைப் பக்குவப் படுத்தும்! துன்ப நீக்கத்துக்கும், இன்ப ஆக்கத்துக்கும் வகை செய்யும்! திங்களூர், திருமருகல் ஆகிய தலங்களில் இறந்தவரை எழுப்பப் பாடப் பட்ட நிகழ்வுகள் நடந்ததே? அந்த சூழல்கள் வேறு!

அவர்கள் இறந்திருப்பினும், விதிப்படி, இவர்களைக் கருவியாக வைத்து, உயிர்பிக்கப் பட முன்னை விதியுடையோர் எழுப்பிய அருளாளர்கள் வழி இறைவனாரே நிகழ்த்திய அருள் திருவிளையாடல்கள் அவை! எழுப்பிடக் கருவியாக நின்றோர், நாம் பொறி புலன்களைப் பயன்படுத்துதல் போல் செயல் படத்தாமல், பதி கரணமாக நின்று, அதாவது அவர்கள் உயிரறிவு இறையறிவில் அடங்கிட, சிவம் ஒன்றே அவர்களது உருவில் மேலோங்கி நின்று நிகழ்த்திய நிகழ்வுகள் அவை!

பொருள் விழைவாளர்களுக்கு இது விளங்காது! இது சிவ ஞானப் புகலுடையோருக்கே விளங்கும்! இறந்த உடலாக அங்கு எஞ்சி இருப்பது பஞ்ச பூதக் கலவையான சட நிலையில் உள்ள உடல் மட்டுமே என அறிக! சுவர் பயன் பெறட்டும் என அதன் முன் நின்று ஓதுவதை ஒப்பதே இது! இறந்தவருக்கு எந்தப் பயனும் விளையாது என அறிந்து கொள்ள வேண்டும். தூய்மையற்ற இடம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 8 =

Most Popular