மஹாகவி காளிதாசரின் கர்வத்தை நீக்கிய பெண்மணி

678

ஒரு முறை கவி காளிதாசர் தனது பிரயாணத்தின் போது மிகவும் தாகமடைந்து தண்ணீர் எங்குள்ளது என்று தேடினார்.

அப்போது அங்கே ஒரு பெண்மணி கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டு இருப்பதை கண்டார்.

அவளிடம் சென்று தண்ணீர் தருமாறு வேண்டினார். அவளும் தண்ணீர் தர சம்மதித்து பிறகு தாங்கள் யார் என எடுத்துரைக்கவும் என்று கேட்டாள்.

அதற்கு காளிதாசர் எங்கே இந்த கிராமத்து பெண்ணிற்கு தன்னை தெரிய போகிறது என்று எண்ணி தன்னை ஒரு வழிப்போக்கன் என்று கூறினார்.

அதற்கு அந்த பெண் இவ்வுலகில் இரண்டே வழிப்போக்கர்கள் தான் உண்டு. ஒன்று சூரியன் மற்றொன்று சந்திரன்.  இரண்டுமே தினமும் காலையிலும் மாலையிலும் தோன்றி மறைந்து விடுவதால் இவ்விரண்டும் மட்டுமே வழிப்போக்கன் என்று கூறினாள்.

காளிதாசர் உடனே தன்னை ஒரு விருந்தாளி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். அதற்கு அந்த பெண் அமைதியாக இவ்வுலகில் இரண்டே விருந்தாளிகள் தான்உண்டு ஒன்று இளமை மற்றது செல்வம் இவ்விரண்டும் தற்காலிகம் ஆதலால் விருந்தாளி ஆவர் என்று பதில் உரைத்தாள்.

அப்பதிலை கேட்ட காளிதாசர் சற்று அதிர்ச்சி அடைந்து தான் ஒரு பொறுமைசாலி என்று கூறினார். அப்பெண்மணியோ இவ்வுலகில் இருவருக்கு மட்டுமே பொறுமையின் பொருள் விளங்கும்.  ஒன்று பூமி மற்றது மரம். இரண்டுமே நாம் எவ்வளவு சோதித்தாலும் தாங்கி நமக்கு நன்மை மட்டுமே செய்கிறது என்று கூறினாள்.

தற்போது காளிதாசர் மிகுந்த குழப்பமடைந்து தான் ஒரு பிடிவாதக்காரன் என்று கூறினார் அப்பெண்மணி புன்னகையுடன் இரண்டே பிடிவாதக்காரர்கள் தான் உண்டு ஒன்று கூந்தல் மற்றது நகம் இவ்விரண்டும் நாம் வெட்டி எரிந்தாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து விடுகிறது என்று பதிலளித்தார்.

இக்கணம் வரை பொறுமை காத்த காளிதாசர் கோபமடைந்து தன்னை ஒரு முட்டாள் என்று கூறினார். அதற்கு ஒரு பெரிய புன்னகையுடன் அப்பெண்மணி இவ்வுலகில் இருவர் மட்டுமே முட்டாள்கள். ஒன்று எவ்வித  தகுதியும்  அறிவாற்றலும் இல்லாத மன்னர் மற்றும் அம்மன்னனை துதிபாடும் மந்திரி ஆகிய இருவரும்தான் முட்டாள்கள் என்று பதிலளித்தார்.

காளிதாசர் தற்போது தான் தோல்வியுறுவதை உணர்ந்தார். உடனே அப்பெண்மணியின் கால்களில் விழுந்து எழுந்தபோது அங்கே அறிவின் கடவுளான சரஸ்வதி தாயினை கண்டார் சரஸ்வதியே தனக்கு பாடம் புகட்ட பெண்மணியின் ரூபத்தில் வந்ததை உணர்ந்தார். இனி எந்த சமயத்திலும் யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது என்பதையும் உணர்ந்தார்.