அபயம் அளித்திடுவாய் காளி

127

அவள் கையில் ‘மகாபத்ராத்மஜன்’ என்ற பெயர் கொண்ட மிக அழகியதும் மங்களகரமானதுமான பட்டாக்கத்தியை ஏந்தியுள்ளாள். வாள் எது நித்தியம், எது அநித்தியம் என்பதை கண்டறியும் விவேகத்தையும் குறிக்கிறது.

வாளாகும் கூர்மையான அறிவினாலே நிலையானது எது, நிலையற்றது எது என்பதை பக்தர்கள் பாகுபடுத்தி அறியவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

பக்தர்களின் உடலின் ஆறு ஆதாரங்களிலும் நிலையாய் அமர்ந்து அவர்களுக்கு செயல், சக்தி, மகிழ்ச்சி, அமைதி போன்றவற்றை வாரி வாரி வழங்கும் பரமமங்கல மூர்த்தினி, காளி. அவர்களைப் பாதிக்கும் காமக் குரோதாதிகளை அழித்து அருள்பவள்.

பக்தர்கள் வேண்டுவனவற்றை வேண்டியவாறே விரைவில் அருள்பவள். மழைபோல் தன் தண்ணருளைப் பொழிபவள். நம் உடலில் ஸஹஸ்ராரத்தில் உள்ள தாமரையை மலரச் செய்யும் பானுமதியும் இவளே.

சவங்களும் எலும்புக் கூடுகளும் மலிந்த சுடலையில் சவமாகக் கிடக்கும் சிவன் மீது ஏறி நின்று சவத்தை சிவமாக்குபவள். ஒரு தாய் தன் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய ஜீவாம்ருதமாகிய பால் நிறைந்த குடம் போன்ற பருத்த ஸ்தனமண்டலங்களைக் கொண்ட ஜெகதீஸ்வரி. துஷ்டர்களின் கரங்களை ஒடுக்க, தீச்செயல்களை வதைக்கவே கரங்களை ஆடையாகக் கொண்டுள்ளாள். வீரமாதாவாயிற்றே!

தீய எண்ணம் இருந்தால்தானே தீய பேச்சும் தீய செயலும் ஏற்படும்? சிவனின் மனைவியல்லவா? சிவம் எனில் மங்களம். நலமே உருவாயுள்ளவனே ஈசன். உலகையும் தேவர்களையும் காக்கத் தானே ஆலகால விஷத்தை உண்டு உயர் நலம் புரிந்தவன். அவன் மனைவி மட்டும் அதர்மத்திற்குத் துணைபுரிவாளா என்ன? நலமே புரிபவள்.

பரப்பிரம்ம வடிவினள். ஜகன்மாதா. அவள் அருளாலே பரம்பொருளுடன் ஒன்றிடும் குண்டலினி வித்யையை அடையும் சக்தியை மகான்களும் சித்தர்களும் அறிந்து பயன் அடைகின்றனர். இவள் தம் பக்தர்களுக்கு பூரண ஆயுள் தந்து அவன் புகழை நான்கு திசைகளிலும் பரப்பி அவன் என்றும் புகழுடம்புடன் இருக்கச் செய்ய அருள் புரிபவள்.

தர்மமே வடிவானவன் சிவன். சத்யமே உருவானவன் சங்கரன். சத்ய தர்மத்தைக் காக்க அறியாமையையும் அதர்மத்தையும் அழிக்க வேண்டுமல்லவா? அதற்கு பெரும் சக்திவேண்டும். தன் கணவனின் சத்ய தர்மத்தைக் காக்கும் செயலில் துணைபுரிய தன்னில் தானே தோன்றும் ஆத்மசக்தி எழும்புகிறது. அதைத்தான் காளி எழுந்தருளும் கோலமும் காலகாலன் அமைதியாக படுத்திருப்பதும் தெரிவிக்கின்றன.

அமைதி காக்க, அஞ்ஞானத்தை அழிக்க ஆவேசமாகப் புறப்படுகிறாள் பராசக்தி. அவளின் சினம் தன் மக்களைத் திருத்தவேயன்றி, அழிக்க அல்ல. அவளின் சிவந்த நீண்ட அழகிய நாக்கு நாம் அவளை வழிபட்டால் நாவன்மை அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது. இவளுடைய உக்கிரம் அளவு கடந்து சென்றபோது கீழே தன் கணவன் படுத்திருப்பது தெரியாமல் மிதித்து விட்டாளாம். கணவனைத் தெரியாமல் மிதித்து விட்டோமே என்று தன் நாக்கைக் கடித்தாள் என்று காளியின் தோற்றத்தை சான்றோர் கூறுவதுண்டு.