மால்யவந்த பர்வதம்- ரகுநாத் கோவில், ஹம்பி, கர்னாடகா

153

1500 களில் பீஜப்பூர் சுல்தானின் இஸ்லாமிய படையினரால் துவம்சம் செய்யப்பட்டது விஜயநகர சாம்ராஜ்யம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரம் ஹம்பி. இஸ்லாமியர்களால் சேதப்படுத்தப்பட்ட பல கோவில்கள் சிலைகள் கட்டிடங்கள் இன்னும் அதே நிலையில் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பார்க்க உள்ளூர் சுற்றுலா பயணிகளை விட வெளிநாட்டுப் பயணிகளே அதிகம் வருகிறார்கள்.

ஹம்பிக்குச் செல்லும்
சுற்றுலாப் பயணிகள் யாருமே மேலே சொன்ன கோவிலுக்குச் செல்வதில்லை. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இந்த இடத்திற்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர மாட்டார்கள்.

ராணி குளித்த இடம், யானை கட்டும் இடம், விஜய விட்டல் கோவில், கல் தேர், விருப்பாக்ஷேஸ்வரர் கோவில், சப்தஸ்வரத் தூண்கள், இசுலாமியர்களால் சேதப்படுத்தப்பட்ட நரசிம்மர், யோகநரசிம்மர், கடுகு பிள்ளையார், கடலைக்காய் பிள்ளையார் மற்றும் இன்னும் பல சிதைக்கப்பட்ட சிற்பங்கள் என்பனவற்றை மட்டுமே பார்க்கப் போவார்கள்.

1. ராமாயணத்தில் மால்யவந்த பர்வதம் என்ற பெயர் காணக் கிடைக்கும். அந்தப் பர்வதம் இங்கேதான் இருக்கிறது. ராமன் லட்சுமணன் சீதை வனவாசம் இருந்து இலங்கையை நோக்கிச் சென்ற போது இந்த இடத்தில் மழைக்காலத்தில் தங்கி சதுர்மாத விரதம் அனுஷ்டித்தார்களாம்.

2. ஹனுமான் இலங்கையில் சீதாதேவியைக் கண்டு அசோக வனத்தை அழித்த பின் சீதாதேவியின் மோதிரத்தை அடையாளமாகக் கொண்டு வந்து ராமனிடம் கொடுத்த இடமும் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

3. ராமாயணத்தில் சொல்லப்பட்ட கிஷ்கிந்தா மற்றும் மதங்க பர்வதம் இந்தப் பகுதியில்தான் உள்ளன என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

4. மால்யவந்த பர்வதத்திற்குக் கீழே துங்கபத்திரா நதி ஓடிக்கொண்டிருக்கிறது. நதியின் அக்கரையில் அஞ்சனாத்திரி பர்வதம் இருக்கிறது. இதுதான் அனுமானின் பிறந்த இடம் என்று சொல்லப்படுகிறது. இந்த மலை மீது அனுமனுக்குக் கோவில் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் மாலையணிந்து 48 நாட்கள் விரதமிருந்து மலையேறி அனுமனைத் தரிசிக்கும் வழக்கம் பல காலமாக நடந்து வருகிறது.

5. மால்யவந்த பர்வதத்திற்கு மேல் விஜயநகரப் பேரரசு கட்டிய ரகுநாத் கோவில் உள்ளது. இங்கு கருப்பு வண்ணத்தில் ஆறடி உயரத்திற்கு ராமர் சீதை லட்சுமணன் அனுமன் சிலைகள் அற்புதமாக விளங்குகின்றன.

6. கோவிலின் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றி குகை மாதிரி அமைப்பு உள்ளது. ராமன் சீதாதேவி லட்சுமணன் இந்தக் குகையில் தான் தங்கினார்கள் என்று நம்பிக்கை.

7. கோவிலின் பல பகுதிகள் சிதிலமான நிலையிலேயே தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

8. இந்தக் கோயில் வளாகத்தில் கடந்த 10 வருடங்களாக இடைவிடாத ராமாயண பாராயணம் செய்யப்படுகிறது. 24X7X365. இதற்கென மத்தியபிரதேசத்தில் சிவனி என்கிற நகரத்திலிருந்து 22 பேர் இந்தக் கோவிலில் தங்கியுள்ளனர்.

அடுத்த முறை கர்நாடகத்தில் விஜயநகரப் பேரரசின் ஹம்பி சிதிலங்களைப் பார்வையிடப் போகும் சுற்றுலாப் பயணிகள், கட்டாயம் இந்த இடத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டும். ஹம்பி நுழைவு வாயிலில் இருந்து இந்த இடம் மூன்று கிலோமீட்டர் மட்டுமே.