ஒவ்வொரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திரமன்று முருகப் பெருமானை நினைத்து வழிபடுவார்கள்.
அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால் முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,
“நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”
என்கிறது.
அன்றைய தினம் முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
அந்த தினத்தில் வீட்டிலும் முருகப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் இருக்கும் படத்தை வைத்து மாங்கனி நைவேத்தியம் படைத்து, கந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
கந்தனுக்கு பிடித்த கந்தரப்பம், பருப்பு பாயாசம், நைவேத்தியம் செய்து வழிபட்டால் 12 கரங்களை கொண்ட வேலன் வரங்களை அள்ளித் தருவான்.
ஆடி மாதம் வரும் கார்த்திகை மிகவும் விசேஷமானதாகும்.
இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது.
முருகப் பெருமானுக்குரிய விரதங்களும், விழாக்களும்
முருகப் பெருமானை ஆராதிக்கும் மூன்று முத்தான விரதங்கள் வார விரதம் ஒன்றும், (சுக்கிரவாரம் அல்லது வெள்ளிக்கிழமை விரதம் ) திதி விரதம் ஒன்றும் (கந்தசஷ்டி விரதம்), (நட்சத்திர விரதம் – கார்த்திகை விரதம் )என அமைகின்றன.
முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவதற்குரிய விரதங்களை சிறப்பாக ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.
உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான்.
தேவர்களை சிறைப்பிடித்து,மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது.
கார்த்திகைப் பெண்களும் குமரனை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள்.
அவனை சேர்த்து ஒன்றாக்கிய உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்’ எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார்.
மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு, அவனருளால் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும்.
கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் .
பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதமநுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம்.
மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். முருகனுக்குரிய கார்த்திகை நட்சத்திரங்களின் போதும் சிறப்பாகக் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்தின் போதும் மாவிளக்கிட்டு வழிபாடு நிகழ்த்துவர்
