ரதசப்தமி: நாளைய தினத்தின் விடியலின் முக்கியத்துவம்

800

உலகத்திற்கே ஜீவாதாரமாக விளங்கி அனைத்து உயிர்களுக்கும் ஒளியையும் சக்தியையும் கொடுப்பவர் சூரிய பகவான். புராண காலத்திலிருந்தே சூரிய பகவான் வழிபாடு முக்கியமானதாக கருதப்பட்டு சூரிய வழிபாடும் மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ரதசப்தமியின் சிறப்பு :

நாளை ரதசப்தமி.(01.02.2020) .

சூரியன் அவதரித்த திருநாளே ரதசப்தமி எனப்படுகின்றது .பிரளயம் தோன்றி அடங்கிய வேளையில் அடர்ந்த இருளில் பிரம்மதேவர் செய்வதறியாது திகைத்து நிற்கும் பொழுது அந்த சூழலில் ‘ஓம்’ என்னும் பிரணவம் எழுகிறது . அந்த ஓம் எனும் பிரணவ ஒலியில் இருந்து ஒளி பிறக்கிறது .அந்த ஒளியிலிருந்து சூரிய பகவான் அவதரித்தார் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

சூரிய பகவானின் மகிமைகள்:

ஸ்ரீமன் நாராயணனே ராமச்சந்திர மூர்த்தியாக அவதரித்து ராவணனை அழிக்க முயன்ற சமயத்தில் அரக்கனின் பலம் அதிகரித்ததால் மனம் தளர்ந்த வேளையில் அகத்திய முனிவர் அண்ணல் ராமனிடம் குலதெய்வமான ஆதவனை முறைப்படி வணங்கி வெற்றி பெறுவாயாக என்று கூற, அவ்வாறே வழிபட்டு ஸ்ரீராமபிரான் போரில் வெற்றி கண்டார்.

ஆதிசங்கரர் பகவத் பாதர் ‘சூரிய பகவானை’ வழிபாட்டு கடவுளாகக் கொண்ட சௌரம் என்ற மதத்தை ஸ்தாபித்தார்.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ‘உலகம் உவப்ப வலநேர்பூ திரிதரு, பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு’. என்று சூரியபகவானை போற்றி வணங்கி துவங்குகின்றார்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ‘ஞாயிறு போற்றுதும்’, ஞாயிறு போற்றுதும் என்று சூரிய பகவானைபோற்றி வணங்கியே துவங்குகின்றார்.

அபிராமி பட்டர் உதிக்கின்ற செங்கதிர் என்றே ஆரம்பித்து அபிராமி அந்தாதியை பாடத் துவங்குகின்றார்.

மணிமேகலை என்னும் காப்பியத்தில் புத்தரை ‘புத்த ஞாயிறு’என்றே குறிப்பிட்டுள்ளார்.

.‘யஜுர் வேதம் ‘சூரியபகவானின் பெருமைகளை போற்றியும், ‘சாம வேதம்’ அனைத்து வெற்றிகளை அளிப்பதாக போற்றியும் ‘அதர்வன வேதம்’பிணிகளை அகற்றியும் பசுவின் மடியில் உள்ள கிருமிகளை சூரியக்கதிர்கள் அழிப்பதாகவும் கூறுகிறது.

பீஷ்மாஷ்டமி என்பதன் விளக்கம்:

ரதப்தமியில் இன்னொரு சிறப்பு பிதாமகரான பீஷ்மருடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும். பிதாமகர் நினைக்கும்போது இறக்கும் வரத்தை தந்தையிடம் பெற்றிருந்தார். அம்புப் படுக்கையில் பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலமான தை மாதத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். தை மாத அமாவாசைக்குப்பின் வரும் ஏழாம் நாளே ரதசப்தமி வரும் நாளாகும். (சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்க ஆரம்பப்பதே உத்தராயண புண்ணிய காலம் என்பதாகும்.) தை பிறந்த பின்னும் உயிர் பிரியவில்லையே என்று வருந்தியபோது வியாசர் பகவான் வருகை தந்தார். இதற்கான காரணத்தை வியாச பகவானிடம் வினவியபோது , அரசவையில் ‘திரௌபதியை’ துரியோதனன் துகில் உரிந்த வேளையில் திரௌபதி அபயக் குரல் எழுப்பியும் நீங்கள் அதர்மத்தை கண்டுகொள்ளாமல் இருந்த பாவமே இதற்கு காரணம் என்று என்று சொல்லி கையில் இருந்த எருக்க இலைகளை பீஷ்மரின் உடல் முழுவதும் அடுக்கி இந்த ‘அர்க்கபத்ரம்’ என்னும் எருக்க இலைகள் சூரியனின் சக்தி கொண்டவை ஆகும். இவை உங்கள் பாவங்களை போக்கி புனிதப்படுத்தும். அதன் பின் நீர்விரும்பியபடி நடக்கும் என்று அருளினார். அதன்படி எருக்கு இலைகள் அவரது பாவத்தை போக்க அவர் விரும்பியபடி ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று மரணம் உண்டானது. இதுவே ‘பீஷ்மாஷ்டமி‘என்று அழைக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்று எருக்க இலைகள் வைத்து நீராடுவதன் காரணம்:

‌பீஷ்மர் பிரம்மச்சாரி என்பதால் பிதுர்க்கடன் செய்வது யார் என்று தர்மர் வருந்தினார். அதற்கு வியாசபகவான் ஒழுக்கம் தவறாத உத்தம பிரம்மச்சாரி, துறவி என்பதால் இது தேவையில்லை. ஆனாலும், தங்கள் உடம்பின் மீது எருக்க இலைகளை வைத்து நீராடுவோர் அனைவரும் புண்ணியம் சேர்ப்பார்கள்.அவர்கள் செய்த ஏழேழு ஜென்மங்கள் செய்த பாவங்கள் தீரும் என்று அருளினார்.

ரதசப்தமியன்று நீராடும் முறை:

தந்தை இல்லாத ஆண்களும், கணவனை இழந்த பெண்களும் தலையில் ஏழு எருக்க இலைகளை வைத்து அதன்மீது அட்சதை,(முனை முறியாத பச்சரிசி) கறுப்பு எள்ளை வைத்து கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும். மற்றவர்கள் எள்ளைத் தவிர்த்து ஏழு எருக்க இலைகளோடு அட்சதையோடு மஞ்சள் பொடி வைத்து நீராட வேண்டும்.(நீராடும்போது வஸ்திரத்துடன் நீராடுவதே முறையானதென்று சாஸ்திரம் கூறுகின்றது. எருக்க இலைகளின் மேல் பாகம் தலையில் படும்படி வைக்க வேண்டும்)
இந்த சூரிய வழிபாட்டின்போது சர்க்கரைப் பொங்கல் ,உளுந்து வடை ,கோதுமையில் செய்த பலகாரங்கள் ஏதாவது செய்து சூரியனுக்கு படைத்து ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதுடன் அவர்களுக்கு வேண்டிய தான தர்மங்கள் செய்வதும் மிக புண்ணியமானதாகும்.

சூரிய பகவானின் காயத்ரி மந்திரம்:
ஓம் ஆதித்யாய வித்மஹே
புத்திர் பலம் தேஹிமே
தன்னோ சூரிய ப்ரசோதயாத்.

மந்திரங்களில் மிக முக்கியமான காயத்ரி மந்திரமும் , சூரியபகவானின் ஒளியையே வழிபட்டுப் போற்றுகின்றது. நம் அறிவை தூண்டுகின்ற இறைவனை போற்றுதற்குரிய ஒளியை பின்வருமாறு தியானிப்போம்.

காயத்ரி மந்திரம் பின்வருமாறு:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|

இந்த சிறப்புமிக்க சூரிய வழிபாடு அறிவுக்கு தெளிவையும் , உள்ளத்திற்கு வலிமையையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்க்கு வைராக்கியத்தையும் அளிக்க வல்லது.

அனைத்து உயிர்களுக்கும் உணவும், நீரும்,ஒளியும் தந்து காத்து ரட்சிக்கும் சூரிய பகவானை வணங்கி அவனருள் பெறுவோம். நல்வழியில் வாழ்வோம்.