நரசிம்மருக்கு பிரதோஷ பூஜை!

310

எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ தினத்தன்று சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். இதேபோல், நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை உகந்தது. அந்த நாளில் நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இரணியன் வித்தியாசமாக வரம் ஒன்றை வாங்கியிருந்தான். அதாவது என்னைக் கொல்லும் சக்தி மனிதருக்கும் இருக்கக் கூடாது; மிருகத்துக்கும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால்தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்டு அவதரித்தார் நரசிம்மர்.

அடுத்து, வீட்டுக்குள்ளேயும் கொல்லக் கூடாது. வெளியேயும் சாகடிக்கக் கூடாது எனும் வரத்தைக் கேட்டிருந்தான். அதனால்தான் இரணியனை வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், வாசலுக்குக் கொண்டுவந்து, மடியில் கிடத்தி சம்ஹரித்தார் பெருமாள்.

என்னைக் கொல்லும் நேரம் காலையாகவும் இருக்கக் கூடாது இரவாகவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி ஆணவத்துடன் திரிந்தான். அதனால்தான் காலையும் இல்லாமல் இருளும் இல்லாத அந்திசாயும் வேளையாகப் பார்த்து, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது.

அப்படி நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது… மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்… அவதரித்தது ஓர் பிரதோஷ நாளில் என்றும் சொல்வார்கள்.

ஆகவே, பிரதோஷ நாளின் போது, நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

“உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம்
தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்”

“மாதா நரசிம்ஹா,
பிதா நரசிம்ஹா
ப்ராதா நரசிம்ஹா
ஸகா நரசிம்ஹா
வித்யா நரசிம்ஹா,
த்ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா
ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா
பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி:
ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தேவாத்
பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ
சரணம் ப்ரபத்யே”

“சிம்ஹமுகே,
ரௌத்ர ரூபிண்யாம்,
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே,
சர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்,
பாபவிமோசன
துரித நிவாரணம்,
லட்சுமி கடாக்ஷ
சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா”

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !