அஷ்டலட்சுமியையும் வீட்டிற்குள் அழைத்து வரும் பாடல்!

323

ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, இவர்களைத்தான் அஷ்டலட்சுமி என்று சொல்லுவோம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இந்த அஷ்ட லட்சுமிகளை மனதார நினைத்து, வணங்கி தீபமேற்றுவது நல்ல பலனைத் தரும். 16 வகையான செல்வங்களையும் பெற்று தரும் இந்த லட்சுமிதேவிகளை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவது சிறப்பான பலனை கொடுக்கும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அஷ்ட லட்சுமி பூஜையை தொடங்குவதற்கு முன்பாக, குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை முதலில் பெற்றுவிட வேண்டும். அதன்பின்பு விநாயகரை மனதில் நினைக்க வேண்டும். அதன் பின்பே அஷ்டலட்சுமி பூஜையை தொடங்க வேண்டும்.

இப்படியாக முறைபடி அஷ்ட லட்சுமி வழிபாட்டை பின்பற்றி வந்தோமேயானால் வாழ்க்கையில் ‘குறை’ என்ற ஒன்று நமக்கு இருக்கவே இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று காலை வேளையில் தீபம் ஏற்றிய பின்பு அஷ்டலகட்சுமிக்கு உரிய பாடலை உச்சரித்து விட்டு, அதன்பின்பு தூப ஆராதனை காட்டுவது மிகச் சிறப்பு. அதுவும் நமக்குப் புரியும்படி தமிழ் பாடல் பாடுவது மிகவும் சிறந்தது. தமிழில் அர்த்தம் உணர்ந்து பாடும் பாடலுக்கு மகத்துவம் அதிகம்தானே! இதற்காகத்தான் இந்தப் பாடல். உங்களுக்கான மகாலட்சுமி பாடல் இதோ! எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டுவகை நானறிந்தேன் கோலமயி லானவளே வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லெட்சுமி வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்!

சிந்தைனைக்குச் செவிசாய்த்துச் சீக்கிரமென் னில்லம்வந்து உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும் வந்தமர்ந்து உறவாடி வரங்கள்பல தருவதற்கே சந்தான லெட்சுமியே தான் வருவாய் இதுசமயம்!
யானையிரு புறமும் நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால் காணுமொருபோ கமெலாம் காசினியில் கிடைக்குமென்பார் தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லெட்சுமியே வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்!
அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ இன்றோடு துயர்விலக இனியதன லெட்சுமியே மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்!
எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும் தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லெட்சுமியே மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்!
கற்றுநான் புகழடைந்து காசியினில் எந்நாளும் வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கிறேன் பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லெட்சுமியே வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்!
நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால் தஞ்சமென உனையடைந்தேன் தாமரைபோல் நிற்பவளே அஞ்சாது வரம் கொடுக்கும் அழகுமகா லெட்சுமியே வஞ்சமில்லா தெனக்கருள வருவாய் இதுசமயம்!
ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும் சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே வாழும் வழிகாட்டிடவே வாவீர லெட்சுமியே மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம்!

இந்தப் பாடலை நம் வீட்டில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று உச்சரிப்பது அவசியம். பௌர்ணமி தினங்களில் அஷ்ட லட்சுமியை மனதில் நினைத்து, வீட்டில் ஒரு இனிப்பு நெய்வேதியம் செய்துவைத்து, பூஜை செய்வது மிகவும் நல்ல பலனைத் தரும். வீட்டிலிருக்கும் எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தீர்க்கும் வல்லமை உடையது தான் அஷ்ட லட்சுமி பூஜை.