நவராத்திரி ஸ்பெஷல் !

179

அஸ்தினாபுரத்தில் தனேஷ்வரம் என்னும் பகுதிக்கு அருகே ‘அனுஜை’ கிராமத்தில் இருந்த செல்வந்தர் அச்சுதர். அவர் தனேஷ்வரத்தில் அருள்புரியும் காமாட்சி கோயிலுக்கு தினமும் வருவார். ஒருநாள் இரவு வழிபாட்டுக்கு வந்த அச்சுதர் மண்டபத்தில் துாங்கி விட்டார். கனவில் தோன்றிய காமாட்சி, ”அச்சுதா! நீ இருக்கும் கிராமத்தில் எனக்கு கோயில் எழுப்பு. நான் அங்கு குடியிருக்க விரும்புகிறேன்” என சொல்லி மறைந்தாள்.
”தாயே… உன்னைத் தரிசிக்க தனேஷ்வரம் வரும் எனக்கு, என் ஊரில் கோயில் கட்ட வேண்டும் எனத் தோன்றவில்லையே!” என எண்ணியபடி வீட்டுக்கு வந்தார். காமாட்சியின் உத்தரவை மனைவி நீலாட்சியிடம் தெரிவித்து மகிழ்ந்தார். கோயில் திருப்பணி விரைந்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஆனால் தங்களுக்கு குழந்தைப்பேறு இல்லையே என வருந்தினாள் நீலாட்சி. விஷயம் அறிந்த அச்சுதர், ” அடியார்களின் வயிறு குளிர உணவும், இயன்ற அளவு பணமும் தானம் கொடு. உன் வயிறு குளிர பிள்ளைச்செல்வம் வாய்க்கும்” என்றார். நீலாட்சியும் அதை உடனே செயல்படுத்தினாள்.
வயிறார சாப்பிட்ட அடியார்கள் வாழ்த்திச் சென்றனர். நல்லவர்களின் வாழ்த்துக்கு உடனே பலன் கிடைத்தது. கருவுற்ற நீலாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ‘ஞானம்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர்.
அடியாருக்கு அன்னமிடும் தர்மத்தை நீலாட்சி தொடர்ந்து செய்தாள். நல்லவர்கள் சிலர் இருந்தால் கெட்டவர் பலர் அல்லவா இருக்கிறார்கள். அவர்களும் தானத்தில் பங்கேற்று பணம் பறித்தனர். தீயவர்களுக்கு நன்மை செய்தால் என்னாகும்? ஓட்டை விழுந்த பலுானில் உள்ள காற்று வெளியேறுவது போல அச்சுதரின் செல்வம் குறைந்தது. குடும்பம் வறுமையில் உழன்றது.
அப்போது குழந்தை ஞானத்திற்கு வயது எட்டு. காசில்லாதவனை உலகம் பொருட்படுத்துவதில்லையே. அச்சுதரை உறவினர் ஒதுக்கினர். மூன்று நாட்களாக மூவரும் பட்டினியால் வாடினர்.
மகளின் பசியைப் போக்க எண்ணிய அச்சுதர், விவசாயிகள் நெல் அடிக்கும் களத்து மேட்டுக்குப் போனார். சிதறிக் கிடக்கும் நெல்மணிகளை எடுத்து வந்து, ”நீலாட்சி… இதை வடித்து உப்பும் தண்ணீரும் விட்டு கஞ்சியாக்கு; அதற்குள் நான் காமாட்சியம்மனை தரிசித்து வருகிறேன்” என்று கிளம்பிச் சென்றார். அங்கு கோயில் வாசலில் ”அப்பா… அப்பா…!” எனக் குரல் கேட்கவே திரும்பி பார்த்தார். மகள் ஞானம் நின்றிருந்தாள். ”அப்பா! உங்க பின்னாலே தான் வந்தேன். ஆனா என்னால நடக்க முடியல; பசி காதை அடைக்குது; வெயிலும் கொளுத்துது” என சொல்லும் போதே அச்சுதர் இடைமறித்தார்.
” பசிக்கிற போது இப்படி நீ வரலாமா? உடனே வீட்டுக்குப் போ. அம்மா உணவு தருவாள்” என்றார்.
”வேண்டாம் அப்பா! எனக்கு நடக்க தெம்பு இல்ல இங்கேயே இருக்கேன்” என மறுத்தாள்.
”தோள்ல வச்சு துாக்கிட்டு போறேன்” என்றார் அச்சுதர்.
”வெயில் கொளுத்தறது; பசிக்கறது; இப்பவே சாதம் வேணும்” என சொல்லி அழுதாள். அப்படியே கோயில் மண்டபத்தில் படுத்து விட்டாள். மகளின் நிலையைக் கண்ட அச்சுதர் கண்ணீருடன் ” இங்கேயே இரு. அப்பா வீட்டுக்குப் போய் உணவுடன் வருகிறேன்” என சொல்லி கிளம்பினார். வீட்டில் நீலாட்சி களைப்பால் கண் அயர்ந்திருந்தாள். எழுப்ப மனமில்லாத அச்சுதர்,
சாதம், தண்ணீர் தானே கையில் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தார். மகளை எழுப்பி ஊட்டினார். சப்புக் கொட்டியபடி ஞானம், ”அப்பா! சாதம் பிரமாதம்” என சொல்லி சாப்பிட்டாள்.
”பசி அதிகமானால் உப்பும், தண்ணீரும் கூட பிரமாதமாகி விடும் போல” என மனதில் நினைத்துக் கொண்டார்.
”அப்பா! இன்னும் எனக்கு பசிக்கிறது. வீட்டில் இன்னும் சாப்பாடு இருக்கு. அதையும் சாப்பிட்டால் தான் உங்களுடன் வருவேன்” என பிடிவாதம் செய்தாள். காலியான பாத்திரத்துடன் வீட்டுக்கு வந்த அச்சுதர் மனைவியிடம் ” நீ வைத்திருந்த உணவை கோயில் மண்டபத்தில் இருக்கும் ஞானம் சாப்பிட்டு விட்டாள். இன்னும் உணவு இருக்காமே… அதையும் அவள் கேட்கிறாள். உடனே நான் போகணும்” என்றார்.
திகைப்புடன் நீலாட்சி, ”சுவாமி…என்ன சொல்கிறீர்கள்? குழந்தையாவது! மண்டபத்தில் இருப்பதாவது!” என சொல்லி கணவரை இழுத்துச் சென்றாள். கிழிந்த பாயில் ஞானம் சோர்வுடன் படுத்திருந்தாள். மகளைக் கண்ட அச்சுதர் திடுக்கிட்டார். ”அப்பா! பசிக்கறது!” என அவளின் தீனக்குரல் காதில் விழுந்தது. அச்சுதர் கோயில் மண்டபத்திற்கு ஓடினார். நீலாட்சியும் பின்தொடர்ந்தாள்.
மண்டபத்தில் யாருமில்லை. மகளின் வடிவில் வந்தவள் அன்னை காமாட்சி என்னும் உண்மை புரிந்தது. “தாயே! என் கையால் உணவு உண்டாயா? என்ன பாக்கியம் செய்தேன்!” என்று சொல்லி அழுதார்.
”அச்சுதா…மூன்று நாளாக கோயிலில் நைவேத்யம் செய்யாததால் பட்டினி கிடந்தேன். இன்று உன் கையால் உணவை ஏற்று மகிழ்ந்தேன். மீண்டும் நீ செல்வந்தனாக வாழும் பேறு பெறுவாய்” என குரல் ஒலித்தது.
காமாட்சியின் கருணையை எண்ணிய அச்சுதரும், நீலாட்சியும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்