பாபம் போக்கும் நாமம் !

176

ஸ்ரீ கிருஷ்ண சைதைன்ய மஹாப்ரபு, ஸந்நியாஸம் வாங்கி க் கொண்டதும்,‌பாரத தேசம் முழுவதிலும் பாத யாத்திரையாக அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்றார்.

அப்படிச் செல்லும்போது ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தை அடைந்தார்.
ஒவ்வொரு ஊரிலும் ப்ரபுவை ஏராளமானோர் வரவேற்று, வணங்கி அருள் பெற்றனர்.

ப்ரபுவின் ஸாந்நித்யதால் காட்டு விலங்களுகூட விரோதம் மறந்து அன்பு பாராட்டி க் கொண்டு தம்மை மறந்து அவரது மஹாமந்திர கீர்த்தனர்த்தை அனுபவித்தன. என்றால், மனிதர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்திலும் ஊர்ப் பெரியவர்களும், பொது மக்களும் ப்ரபுவை வரவேற்று, அவரோடு மஹாமந்திர கீர்த்தனம் செய்தனர்.
ப்ரபு கோவிலுக்குச் சென்று கூர்ம பகவானை தரிசனம் செய்து பிறகு அடுத்த ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்.

அவ்வூரில் ஒரு வயதானவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெரும் செல்வந்தராய் இருந்த அவர், நோய் வந்ததும், சொத்துக்கள் முழுவதையும் பிள்ளைகளிடமும் உறவினரிடமும் ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு நீங்கினார். கூர்ம க்ஷேத்திரத்தை அடைந்தவர் நோயின் கொடுமையால் மேற்கொண்டு எங்கும்‌ செல்லாமல் அந்த ஊரிலேயே ஒரு பாழடைந்த வீட்டின் திண்ணையில்‌ தங்கிக்கொண்டார். உடல் முழுவதும் புழுக்கள் நெளியும்.

இந்த உடலால் ஒரு பயனும் இல்லையென்று நினைத்தேனே. உங்களுக்காவது உணவாகிறதே

என்று சொல்லி கீழே விழும் புழுக்களையும்‌எடுத்து தன் உடல்மீதே விட்டுக் கொள்வார்.
இரவு பகல் பாராமல்

வாசுதேவா வாசுதேவா

என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். எனவே அனைவரும் அவரை வாசுதேவர் என்றே குறிப்பிட்டனர். அவரது உண்மையான பெயர் ஒருவருக்கும் தெரியாது.
திண்ணையில் ஒரு மறைப்பின் பின்னாலேயே இருப்பார். ஒருவரும் அவரைப் பார்க்க அனுமதியார். ஊர் மக்கள் அவர்களாக விரும்பி அவருக்கு ஏதேனும்‌ உணவளித்து வந்தனர்.

இப்போது ஒரு மஹாத்மா வந்திருக்கிறார். நாம ஸ்வரூபமாய் இருக்கிறார். தங்க நிறத்தில் தேஜஸோடு ஜ்வலிக்கிறார்

என்றெல்லாம் ஊர் மக்கள் பேசிக்கொண்டு செல்வது வாசுதேவர் காதில் விழுந்தது.‌

அப்பேர்ப்பட்ட மஹாத்மாவாமே..
இளம்‌ ஸந்யாசியாமே
என் பாவத்தால் கோவிலுக்குத் தான் போகமுடியாது. நடமாடும் இறைவனான, அதுவும் நான் இருக்குமிடத்திற்கருகிலேயே வந்திருக்கும் சாதுவை தரிசனம்‌செய்யும் பாக்யம் இல்லையே.
கிளம்புகிறாராமே..

பலவாறு அழுதழுது மறுகிக்கொண்டிருந்தார்.

ஊர் எல்லை வரை சென்று விட்ட மஹாப்ரபு, சட்டென்று நின்றார்.
பிறகு ஒன்றும் பேசாமல் விடுவிடென்று ஊருக்குள் நடந்தார்.

எல்லோரும் மஹாப்ரபு ஊருக்குள் தங்க முடிவு செய்துவிட்டதாய் நினைத்து ஆனந்தமடைந்தனர்.
மஹாப்ரபு நேராக வாசுதேவர் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றார்.

வாசுதேவா வாசுதேவா

மதுரமாய் அவரது குரல் ஒலித்தது.

என்னையா,
இந்தப் பாவியையா
தேடி வந்து அழைத்ததே போதும் ப்ரபோ..
நான் தன்யனானேன். உம்மை தரிசனம் செய்யும் யோக்யதை எனக்கில்லை ப்ரபோ

வாசுதேவா வெளியே வா..

நான் பாவி ப்ரபோ, வேண்டாம்.

வாடா..
என்று ப்ரபு அதட்ட,

சட்டென்று வெளியே வந்த வாசுதேவரைப் பார்த்ததும் ஊர் மக்கள் அதிர்ந்து போயினர். பலர் பயந்துவிட்டனர்.

உடல் முழுதும் அழுகிச் சொட்டிக்கொண்டு, புழுக்கள்‌ மேய்ந்துகொண்டு, முகம் என்று ஒன்றைத் தேடும்படி இருந்தது வாசுதேவரின் உருவம்.

மஹாப்ரபு‌ வேகமாய்ச் சென்று வாசுதேவரை இழுத்து அணைத்துக்கொண்டார்.

அனைவருக்கும் மூச்சே நின்றுவிட்டது. இப்படி ஒரு உருவத்தை அணைத்துக்கொள்வதா?
ப்ரபுவால் மட்டுமே முடியும்.
ப்ரபு இழுத்து அணைத்துக்கொண்டதுதான் தாமதம், வாசுதேவரின் உடல் ப்ரபுவின் உடல் போலவே தங்கமயமாய் ஜ்வலித்தது.
நோயுமில்லை, புழுவுமில்லை.

கௌர் ஹரி என்று அழைக்கும்படியான தங்கமயமாய் ஜ்வலிக்கும் சைதன்யர் ஷ்யாம ஹரி யாகிவிட்டர்.
ஆம், ப்ரபுவின் உடல் கருப்பு வண்ணத்தில்‌மாறி ஜ்வலிக்க, துடித்துப் போனார் வாசுதேவர்.

ப்ரபோ, ஏன் ஏன் இப்படி? உங்கள் உடல் கருத்துவிட்டதே. என் பாவங்களை ஏன் வாங்கிக்கொண்டீர்கள்? திருப்பிக் கொடுங்கள்

கதறி அழுதவரைப் பார்த்துச் சிரித்தார் மஹாப்ரபு.

திருப்பிக் கொடுப்பதா?

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ‌ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு மஹாப்ரபு கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். அனைவரும் சேர்ந்து தம்மை மறந்து ஒரு முஹூர்த்தம் கீர்த்தனம் செய்ய, நாம ப்ரவாஹம் ஓடியது.

ஒரு முஹூர்த்த காலத்தில் மஹாப்ரபுவின் மேனி முன்னை விட இன்னும் அதிக ப்ரகாசத்துடன் தங்க நிறத்தில் ஜ்வலிக்க ஆரம்பித்தது.

மஹாமந்திர கீர்த்தனத்தினால்‌ எப்பேர்ப்பட்ட பாவமும் போகும்‌என்பதை ப்ரத்யக்ஷமாக நிரூபித்தார்‌ ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு.

மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ‌ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே