படைத்தல் குறித்த சூட்சமம் ( இதை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது ?? )

196

படைப்பு – படைத்தவன் என்ற இருவேறு பரிமாணங்களில் தான் நம் பார்வை செல்கிறது ..

படைப்பு என்று எடுத்துக்கொண்டால் நாம் என்று தொடங்கி இந்த பிரபஞ்சமே படைப்புதான்..
இன்னும் கொஞ்சம் ஆழமாக பயணித்தால் படைப்புகளுள் படைப்பு ..
அதாவது ஒவ்வொரு படைப்பின் உறுப்பு, பாகங்கள், அதனின் தன்மை என்று விரிவடைந்து கொண்டே போகிறது ..

இதில்
படைப்புகள் வழியே படைப்பு என்பது படைப்புகள் எதையோ கொண்டு எதையோ உருவாக்குவது ?? யூகிப்பது ?? போன்று விரிவடையும் ..

ஆனால்
படைத்தவன் – இறைவன் வழியே வெளிப்படும் படைப்புகள் எல்லாம் ..
எதை கொண்டு எதை படைத்தான் என்பதே இங்கு நாம் அறிய வேண்டிய சூட்சமும் ..

யாதுமாகி எங்கும் எதுவாகவும் என்றும் எப்போதும் எதிலும் வியாபித்து இருக்கிறான் என்ற மெய்யை உணர இந்த சூட்சமம் நமக்கான மெய்யுணர்வை தரும் ..

அதாவது
ஒரு மேஜை செய்யவேண்டும் ( அதாவது படைக்க வேண்டும் ) என்றால்
மரம், ஆணி, மரத்தை அறுக்கும் உபகரணங்கள் போன்ற அனைத்தும் இருந்து ..
அதை மேஜையாக செய்பவன் அறிவு, அனுபவம், திறன் போன்றவை எல்லாம் கூடியே ..
மேஜை என்ற ஒன்று படைக்கப்படுகிறது ..

ஆனால்
இறைவன் என்பவன் எதிலும் எப்போதும் வியாபித்திருக்க எதை கொண்டு எதை படைத்தான் என்று கொஞ்சம் சிந்தித்தால் !!
அவனை கொண்டு அவனே படைத்தது தானே படைப்புகள் எல்லாம் ..

இதில் படைப்புகள் எல்லாமே அவனால் அவனைக்கொண்டு அவனுள்ளே படைக்கப்பட்டு இருக்கிறது ..
ஆதலால் படைப்புகள் எல்லாமே அவனால் அவனிக்கொண்டு அவனுள்ளே அவனது இயக்கத்தால் பிறந்து, வளர்ந்து, இருந்து, மாறி, வேறு உருவாகவோ, உருவற்ற தன்மையாகவோ இருந்துகொண்டே இருக்கிறது தானே ..

இதில் உயர்வு / தாழ்வு ?? சிறந்து / மட்டமானது ?? ஜாதி / குலம் ?? மதம் / சமயம் ?? போன்ற வேறுபாடுகள் எல்லாம் ஏதுமில்லை தானே ..

படைப்புகள் படைப்பின் சூட்சமத்தை புரிந்துகொண்டால் போதும் ..

படைத்தவனே எங்கும் எதுவுமாகவும் வியாபித்து சர்வமாய்,
நம் மாயா பேதங்கள் கடந்து,
நிதர்சனமாக இருக்கிறான் ..

ஒவ்வொரு படைப்பும் படைத்தவனின் தன்மையை பெற்று,
அவனது இருப்பாலே இயங்கிக்கொண்டு இருக்கு,
இப்படி இருக்கும் படைப்புகளின் மொத்த தன்மையும் நம் அறிவுக்கு எட்டி,
அதை அறிவுறுத்தும் தன்மையை நம்மால் ஒருபோதும் பெறவே முடியாது,
எனவே ஒவ்வொரு படைப்பும் அதன் தன்மைக்கு ஏற்றபடியே படைத்தவனை உணர்கிறது ..
ஆனால் அவனோ எத்தன்மையும் கடந்து இருக்கும் நிதர்சனம் ..

நம்மையும் ஒரு பொருளாக்க தன்னையே தந்து
நாம் இருக்க இடம்பெறவும் தன்னையே தந்து
நம்மோடு வாழ்வும் தன்னையே தந்து
நம்முள்ளே இயக்கமாக தன்னையே தந்து
நம்மை சுற்றி இருக்கும் இயக்கமாக தன்னையே தந்து
நாம் என்ற அடையாளப்படுத்து கூட தன்னையே தந்து கொண்டே இருக்கிறான் ..
படைத்தேன் என்று நம்மைப்போல விட்டு விடாது, படைப்பாகவும் அவனே பரிணமிக்கும் அற்புதம் ..
அனுபவிக்க தெரிந்தால் அவனை கடந்து ஏதுமில்லை
அவனே யாவும் ..

திருச்சிற்றம்பலம்