பங்குனி பௌர்ணமி குல தெய்வ வழிபாடு!
காலம் காலமாக நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருடம் ஒரு முறை வரும் சிவராத்திரி நாளன்று அவரவர் குல தெய்வ கோயிலுக்கு சென்று பக்தர்கள் வழிபடுவது வழக்கம். சிவராத்தியைத் தொடர்ந்து வரும் பங்குனி உத்திர நாளன்றும் கூட குல தெய்வத்தை வழிபடுவார்கள். குலம் காக்க குல தெய்வ வழிபாடு மிகவும் அவசியம். குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது என்பதும் நம்பிக்கை. பெண்களுக்கு பிறந்த வீட்டு குல தெய்வம், புகுந்த வீட்டு குல தெய்வம் என 2 குல தெய்வங்கள் உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம். குலதெய்வங்கள் கர்ம வினையை தீர்க்கவல்லவை.
குலதெய்வ குத்தம் இருந்தால், குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால், குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த பங்குனி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கருத்து.
இதற்காகத்தான் குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. கிரகங்களின் கோட்சார பலன்களும், கிரக பெயர்ச்சிகளின் பலன்களும் முழு பலனைத் தர வேண்டுமென்றால் அதற்கு குல தெய்வ அனுக்கிரகம் அவசியம். மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஒரு சிலருக்கு அவர்களது குல தெய்வம் எது என்றே தெரியாது. வெளியூர், வெளிநாடு சென்றவர்கள் கூட குல தெய்வத்தை மறந்து விடுகிறார்கள்.
குல தெய்வத்தை மறந்தால் குல தெய்வ தோஷம் ஏற்படும். அப்படி தோஷம் இருந்தால் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த பலனும் கிடைக்காது. குடும்பத்தில் நிம்மதியின்மை, உறவுகளுக்கிடையில் பிரச்சனை, செய்யும் காரியத்தில் தடை தாமதம் ஏற்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், திருமணத் தடையும், வீடு கட்டும் போதும் தடையும் ஏற்படும். வருடத்திற்கு ஒரு முறை தான் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பதில்லை. மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு குல தெய்வ வழிபாடு செய்கிறோமோ அந்தளவிற்கு நல்லது.
மாசி மகா சிவராத்திரி, மாசி அமாவாசை, பங்குனி உத்திரம் நாட்களில் அவரவர்கள் குல தெய்வத்தினை முறைப்படி வணங்க வேண்டும். காரியத்தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். குல தெய்வ கோயிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட கோடி நன்மை உண்டு. பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குல தெய்வத்திற்கு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும். வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குல தெய்வத்தை திருப்திப்படுத்தும் என்பது ஐதீகம்.