பாவத்தை நீக்கும் வில்வம்!

69

பாவத்தை நீக்கும் வில்வம்!

சிவபெருமானின் தல விருட்சம் வில்வ மரம். வில்வதை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டி யாவும் கிடைப்பதோடு நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரி சூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிக்கின்றன. வேதங்கள் யாவும் தாங்கள் அழியாமலிருக்க என்ன செய்வதென்று சிவபெருமானிடம் கேட்கவே, திருவைகாவூர் (திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருள் புரிந்தார்.

சிவன் கூறியபடியே வேதங்கள் வில்வ மரம் வடிவில் நின்று தவம் புரிந்ததால் திருவைகாவூர் என்ற ஊரானது வில்வராண்யம் என்ற சிறப்பு பெயர் பெற்றது. மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என்று வில்வத்தில் பல வகைகள் உண்டு. மூன்று இதழ் கொண்ட வில்வத்தை மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். 5 மற்றும் 7 இதழ்கள் கொண்ட வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை சூரியன் உதயம் ஆவதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது தண்ணீர் வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். தினந்தோறும் சிவபெருமானுக்கு வில்வம் சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சாற்றி சிவபெருமானை தரிசித்தால், ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் வில்வத்தை மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் பறிக்க கூடாது. இது போன்ற நாட்களில் பூஜைக்கு தேவையான வில்வத்தை முதல் நாளே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்துப் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வில்வ மரம் வளர்ப்பதில் பயன்கள்:

நாம் வீட்டில் வில்வ மரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும்.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலன் உண்டாகும். வில்வ மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் (மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

பொருள் விளக்கம்:

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக் கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும், என்பதே மேலே உள்ள மந்திரத்தின் விளக்கமாகும். இந்த ஸ்லோகத்தை சொல்லிய பிறகே நாம் வில்வத்தை பறித்து இறைவனுக்கு பூஜிக்கலாம்.

ஓம் நமசிவாய….!
சிவாய நம…
சிவ சிவ!