Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalபங்குனி உத்திரம் ஸ்பெஷல் !

பங்குனி உத்திரம் ஸ்பெஷல் !

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும்.
12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும்.

உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.

புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்.

ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான்.

ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.

மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்கு உத்திரத்தன்றுதான்.

மோகினிசுதன் ஐயப்பன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.

அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள்.

அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது.

அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.

இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார்.

காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்,

மதுரையைப்போலவே.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.

அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும்; பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது.

வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய ராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போதுதான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்தபோது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம்.

அன்றிலிருந்து ராமானுஜர் ‘உடையவர்’ என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார்.

கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மகிழ்ந்திருக்கும் வேளையில்,

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று துதித்து மகிழ்வோம்.

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோயில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காக குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.

பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான்.

இந்த இனிய நாளில் ,அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படித்து, இறைவனின் நாமாவளிகளைச் சொல்லி பயன் அடைவோமாக.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − five =

Most Popular