வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார்.
மகாலட்சுமி சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள். தக்க பருவம் வந்ததும் பத்மாவதிஸ்ரீனிவாசன் திருமணம் ஏற்பாடானது. பொருள் இல்லாததால் திருமணச் செலவிற்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாசன். திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. மகாலட்சுமியான பத்மாவதியைத் தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு வேங்கடவன் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.
பத்மாவதிஸ்ரீநிவாசன் திருமண விருந்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படவில்லை என்பதால், தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்ததாக சொல்வர். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பரமும், கறிவேப்பிலையும் எந்த விதத்திலும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.தல தீர்த்தம் பத்ம ஸரோவர் என்று போற்றப்படுகிறது.
தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.திருமலையில் வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜபுரத்தில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை சுவாமி புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்
