குகனும் ஶ்ரீராமச்சந்த்ரனும்

476

ச்ருங்கிபேரபுரத்தின் தலைவனான குகனுக்கு அன்றென்னமோ மனதில் இனம் புரியாத ஆனந்தம்!!ஆயிரம் நாவாய்களுக்குத் தலைவனும், வேடுவர் கூட்டங்களுக்கெல்லாம் ராஜாவுமான குஹனின் மனது எதனாலோ அமைதியிழந்திருந்து!! ஆனந்தமான ஒரு படபடப்பு!!

குஹனின் மனதை மேலும் ஆனந்திக்கச்செய்யும்படி ச்ருங்கிபேரபுரத்து ஒற்றன் குஹனது இல்லத்திற்கு வந்து கூறுகிறான். “தலைவ!! அயோத்யாபுரியாளும் ஶ்ரீதசரத சக்ரவர்த்தியின் மூத்த குமாரனாகிய ஶ்ரீராமச்சந்த்ரப் ப்ரபு நம் நகருக்கு எழுந்தருளியுள்ளார்!! முனிவர் கூட்டத்துடனே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்!!” என்றான்.

குஹன் தன் மனதில் இனம் புரியாது ஆனந்தத்திற்க்கான காரணத்தை அறிந்து கொண்டான்!! ரகுகுலத்து இளவலாகிய ஶ்ரீராமச்சந்த்ர ப்ரபு நம் ஊரருகே எழுந்தருளியிருப்பதாலன்றோ நம் மனது இவ்வளவு ஆனந்தத்துடன் இருக்கிறது. ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தியைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து என்றாவது ஒரு நாள் அவரைக் காண மாட்டோமா என்ற நமது ஏக்கம் இன்று தணிய அந்த ப்ரபு அருள் புரிந்ததனனே!!

“ஒற்றனே!! நம் சேனைகளை தயாராக இருக்கும்படி என்னுடைய உத்தரவைச் சொல்!! மேலும் சிறிது நேரத்திற்க்குள்ளாக ஶ்ரீராமச்சந்த்ர ப்ரபுவைக் காண நாம் செல்லவேண்டிம் என்பதையும் தெரிவித்துவிடு!!” என்று கூறிவிட்டு ஶ்ரீராமனைக் காணவேண்டி தானும் தன் மனைவி மக்களுடன் புறப்பட்டான்.

அங்கே கங்கைக் கரையிலே முனிவர் குழாத்திலே பூர்ண ப்ரஹ்மமானது தேஜோ ரூபமாய் வீற்றிருந்தது. யாரை இறுதியில் அடைவதற்கு பலகோடி யஞ்ஞங்கள் ருஷிகள் இயற்றினார்களோ, அந்த ப்ரஹ்மமே மனிதவடிவெடுத்து ருஷிகள் மத்தியில் அமர்ந்து பொலிந்துகொண்டிருக்கிறது.

லக்ஷ்மணன் முனிவர் குழாத்தில் மத்தியில் வீற்றிருக்கும் ராமனருகே வந்து “அண்ணா!!தம்மே சேவிக்க ச்ருங்கிபேரபுரத்து அரசன் குஹன் வந்திருக்கிறார்!!” எனக்கூற, அழைத்துவரும்படி உத்தரவிடுகிறார் ஶ்ரீராமச்சந்த்ரன்.

“அப்பா!! நீ யார்!!?” என ராமச்சந்த்ரன் அன்பு ததும்பும் மொழிகளுடன் கேட்க, அதற்கு குஹனின் பதிலே உயர்வு.

“தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்” என்றான் குஹன்.ஆயிரம் நாவாய்களுக்கு அரசனென்றோ, ச்ருங்கிபேரபுரத்து தலைவனென்றோ கூறாது ராமனின் அடிமை என்றதே அவனுள்ளத்தில் ராமச்சந்த்ரன் மேல் வைத்துள்ள அன்பிற்கு ஸாக்ஷி.

“என் தெய்வமே!! முத்தும் மரகதமும் மாணிக்கமும் நவரத்தினங்களும் மின்னும்படி ஆபரணங்களோடும், பீதாம்பரங்களுடனும், ராஜாராமச்சந்த்ர மூர்த்தியாக தர்சிக்க வேண்டிய உங்களை, மரவுரி கொண்டு தர்சித்த என் கண்கள் செய்த பாபம் என்ன!? உங்களை பட்டாபிஷேக கோலத்தில் காண இயலாத கண்கள் இருநதென்ன பயன்!!?” மனதில் துக்கத்துடன் ராமச்சந்த்ரனின் பாதங்களின் கீழ் அமர்ந்தான்.

கம்பர் கூறுவார் “உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;” .தாயைப் போல அன்பையுடையவன். உள்ளம் தூயவன். தேனும் மீனும் தன் அன்பிற்குரியவனுக்கு படைத்துப் பின் பணிந்திருக்கும் போது ராமச்சந்த்ரன் கூறினார் ” அப்பா!! கங்கைக்கரைக்கு அப்பால் எங்களை சேர்த்து விடுவாயா!! சித்ரகூடத்திற்கு சென்று முனிவர்களுடன் வசிக்கத் திட்டம்!!” என்றார்.

“இறைவா!! நான் இங்கிருக்கும் போது தாங்கள் அடர்ந்த வனத்திற்சென்று துயரமடைவதா!! வேண்டாம்!! தாங்கள் என்னுடனே தங்கியிருங்கள்!! நொடி கூட கண்ணயராது தங்களுக்குச் சேவை செய்வேன்!! தயவு காட்டுங்கள்!!” என்றான் குஹன்.

“அன்பனே!! சிறிது நாட்கள் மட்டுமே வனவாசம் மேற்கொள்ளும்படி தந்தை உத்தரவு!! அதை மீறலாமா!! கண் இமைக்கும் நொடியில் மீண்டும் திரும்பி வந்து உன்னுடனும் உன் சுற்றத்தாருடனும் இருப்போம்!!” என்றார் ஶ்ரீராமச்சந்த்ரன்.

பதினான்கு வருடங்கள் என்றால் குஹன் மனது வேதனைப்படும் என்று அன்புடன் சிறிது காலம் என்கிறார் ஶ்ரீராமச்சந்த்ரன்.

குஹனும் வேறு வழியில்லாமல் மறுநாள் கங்கைக் கரையிலுள்ள தன் படகில் ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தி, மைதிலி தேவி, லக்ஷ்மணன் ஆகியோரை அழைத்துச் செல்கிறான். அக்கரை அடைந்ததும் ராமச்சந்தரனைப் பிரிய முடியாத துக்கத்தில் அழதுகொண்டு

“என் தலைவ!!
நெறி, இடு நெறி வல்லேன்; நேடினென், வழுவாமல்,
நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்;
உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப்
பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்”

என்கிறான்.

குஹனின் அன்பைக் கண்ட ராமச்சந்த்ரன் அன்பினால் உருகிய உள்ளமுடையவனாய் மனங்களித்து “குகனே நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, அழகிய சீதை உனக்கு உறவினள், குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்கிறார். மேலும் “குஹனே நீ இனி இருப்பிடம் சென்று உன் மக்களைக் காக்க வேண்டும். எப்படி என் தம்பி பரதன் அயோத்தியை ஆள்கிறானோ அது போல் நீயும் உன் நாட்டை ஆள வேண்டும், உன் தம்பி இலக்குவன் என்னை பத்திரமாகக் காட்டில் பாதுகாப்பான்!!” என்கிறார்.

மேலும்

“முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்”

என்கிறார் ஶ்ரீராமச்சந்த்ரன்.

ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தியிடம் பிரியா விடைபெற்று ச்ருங்கிபேரபுரத்திற்குத் திரும்பிய குஹனும் பதினான்கு வருடங்கள் ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தி திரும்பி வரும் வரை உணவு உறக்கமின்றி தவித்திருந்தான் லக்ஷ்மணன் போலே!!

இதயத்தில் ராமச்சந்த்ரனின் த்யானமும், கண்களால் அவரைக் காணும் எதிர்பார்ப்புடனும் ச்ருங்கிபேரபுரத்தின் எல்லையில் குகன் காத்திருந்தான்.

ச்ருங்கிபேரபுரம் அவன் அன்பிற்கு ஸாக்ஷியாய் நிலைத்திருந்தது.

ராமச்சந்த்ரனுக்கு ஸமர்ப்பணம்!!