பயம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!
சென்னை, பூக்கடைக் காவல் நிலையம் அருகில் உள்ள தேவராஜமுதலி தெருவில் அமைந்துள்ளது சென்னக் கேசவப் பெருமாள் திருக்கோவில். பட்டணம் கோவில், பூக்கடைக் கோவில் என்ற பெயரிலும் இந்தக் கோவில் எல்லோராலும் அறியப்படுகிறது. நகரின் சென்னி (தலை) போல் இருந்த சென்னக் கேசவர் கோவிலால், இந்தப் பகுதி ‘சென்னிநகர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் காலப்போக்கில் அதுவே மருவி ‘சென்னை நகர்’ என்றானதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.
ஆலய வரலாறு:
கேசி என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் தீராத துன்பங்களைக் கொடுத்து வந்தான். அவனது தொல்லைகளை பொறுக்க முடியாமல் அனைவரும் அவதிப்பட்டு வந்தனர். ஒரு முறை தேவர்கள் அனைவரும் அசுரனிடம் இருந்து உலகத்தைக் காத்தருளும்படி, திருமாலை வேண்டி நின்றனர். அவரும் அசுரனுடன் போரிட்டு அவனை வதம் செய்தார். கேசி என்ற அசுரனை வதம் செய்ததால், திருமாலுக்கு ‘கேசவர்’ என்ற திருநாமம் வழங்கப்படலாயிற்று. அவரே இந்தப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாளாக எழுந்தருளியுள்ளார்.
செல்வங்களை அருளும் சென்னக் கேசவப் பெருமாள்:
இவரை உள்ளன்புடன் வழிபடுபவர்கள், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்தப் பெருமாள் நாம் வேண்டும் வரத்தைத் தருபவராகவும், துன்பம் நீக்கி இன்பம் அருள்பவராகவும் திகழ்கிறார்.
ஆலய அமைப்பு:
கோவிலுக்குள் நுழையும் முன்பாக, அழகிய பெரிய மண்டபம் நம்மை வரவேற்கிறது. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் வடக்கு பார்த்த நிலையில் எம்பார் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். இவர் திவ்யபிரபந்தத்திற்கு விளக்கம் அருளியவர் ஆவார். தொடர்ந்து சென்றால் கருவறையை அடையலாம். கருவறை வாசலில் ஜெயன், விஜயன் என்ற காவலர்கள் உள்ளனர். கருவறையில் மூலவராக சென்னக் கேசவப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரது இடதுபுறத்தில் ஸ்ரீதேவி தாயாரும், வலதுபுறத்தில் பூமாதேவி தாயாரும் உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் அலங்காரப் பிரியர் என்றால், இத்தலத்தில் உள்ள சென்னக் கேசவப் பெருமாள் அன்னப்பிரியர் என்ற சொல் வழக்கு உள்ளது.
தீராத நோய் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்:
பெருமாள் சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வடக்கு பார்த்து அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி நம்மை வரவேற்கிறது. இவருக்கு சக்கரராஜர், சுதர்சனர், திருவாழி ஆழ்வான், சக்கரத்தண்ணல், நேமி என்று பலவாறான திருநாமங்கள் அமையப் பெற்றுள்ளன. இவரை வணங்கினால், தீராத நோய் தீரும், நெஞ்சினில் உண்டாகும் பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவருக்குப் பின்பக்கத்தில் தெற்கு பார்த்த அழகிய சிங்கர் எனும் யோகநரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில், மேற்கு பார்த்த நிலையில் அனுமன் சன்னிதி இருக்கிறது. இவரை வழிபடுபவர்களுக்கு, இன்னல்களை களைவதோடு மட்டுமின்றி, வலிமையையும், வெற்றியையும் தருகிறார். இவரை கடந்து சென்றால், வடக்கு பார்த்த திசையில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இவர்களுக்கு அருகிலேயே திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் இருவரும் வடக்கு பார்த்த தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இதற்கடுத்த தனிச் சன்னிதியில் திருக்கச்சி நம்பிகள், பட்டர், வேதாந்த தேசிகர் ஆகியோர் எழுந்தருளியிருக்கிறார்கள்.
கோதண்டராமர் சன்னதி:
இவர்களை வழிபட்டு திரும்பினால், தனித்தனி கல்லினாலான வடிக்கப்பட்ட நான்கு யானைகள் கிழக்கு முகமாக வீற்றிருக்கும் கோதண்டராமர் சன்னிதிக்கு வழிகாட்டுகின்றன. இந்த சன்னிதியில் கோதண்டராமருடன், சீதை, லட்சுமணன், பரத, சத்ருக்கனன், அனுமன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இதைக் கடந்தால் கிழக்கு பார்த்தபடி தனிச்சன்னிதியில் செங்கமலவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். இந்தத் தாயார் கமல முகத்துடனும், கருணை வடிவாகவும், பக்தர்களின் கோரிக்கைகளை உடனே தீர்ப்பவளாகவும் வீற்றிருக்கிறாள். மேலும் ஆலயத்தில் ருக்மணி– சத்யபாமா சமேதராக கண்ணன் வீற்றிருக்கும் சன்னிதியும், கருடாழ்வார் சன்னிதியும், வலதுபுறத்தில் ராமானுஜர், முதலியாண்டார், கூரத்தாழ்வார் அருள்பாலிக்கின்றனர். கிளிமண்டபத்தில் இருந்து கிழக்கு பார்த்து செல்லும் போது, வலப்புறத்தில் பரத மண்டபத்தில் ராமர் பாதங்கள் உள்ளன.
ஆலயச் சிற்பங்கள்:
பெருமாள் சன்னிதி நுழைவு மண்டபத்தின் வலது புற மேற்கூரையில், கல்லைக் குடைந்து மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அனுமன் சன்னிதிக்கு நேர்எதிரே உள்ள மண்டபத்தின் மேல் லட்சுமி மற்றும் கருடர் சிற்பங்கள் சுதை வடிவில் உள்ளன. பொய்கையாழ்வார் மற்றும் கோதண்டராமர் சன்னிதி மேற்கூரையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமர், சீதை, கஜேந்திர மோட்சம், மகாலட்சுமி, ஆழ்வார்கள் போன்ற சுதைச்சிற்பங்கள் மிக நேர்த்தியாக அமையப்பெற்று பார்ப்போர் கண்களை கவருகின்றன.
பலன்கள்:
இந்த சென்னக் கேசவப் பெருமாளை வணங்கினால், தீராத நோய் தீரும், நெஞ்சினில் உண்டாகும் பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
