அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா? மழை பெய்தாலோ, நல்ல வெயில் அடித்தாலோ குடை வேண்டும். அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவை யும் அவை குடைபிடித்து பாதுகாப்பதாக ஐதீகம்.
இயற்கையும் இறைவனை வணங்கு கிறது என்பது ஒரு ரகசியம். பனிக்காலம் இலையுதிர் காலம். அப்போது, இந்த மரங்கள் இலையை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். அதாவது, குடையை மடக்கி விடும் எனலாம். அப்போது, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல, வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால் தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும்.
சீதோஷ்ண நிலையால் அவர்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற கருணை யுடன் தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டு விட்டனர் என்பது இன்னொரு ரகசியம். மரத்தடியில் ஒதுங்கும் சாக்கிலாவது, அங்கிருக்கும் இறைவனை ஒருதடவையாவது மனிதன் வணங்கிவிட மாட்டானா என்ற மகான்களின் ஆதங்கம், மரத்தடி தெய்வ பிரதிஷ்டையின் மற்றொரு ரகசியம்.
ஆலமரம் இல்லாமல் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி கோயில்!
சென்னை தாம்பரம் அருகிலுள்ளா மாடம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள கோயில் தேனுபுரீஸ்வரர். இந்தக் கோயிலில் தேனுபுரீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். சோமாஸ்கந்தர் உற்சவராக திகழ்கிறார். தேனுகாம்பாள் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். மூலஸ்தானத்தில் உள்ள இறைவன் சதுர பீடத்தில், ஒரு அடி உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார்.
சகரன் என்பவனின் மகன் பகீரதனை கபில மகரிஷி சபித்துள்ளார். அவரது சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்தது. இதையடுத்து வசிஷ்ட முனிவரின் ஆலோசனையின்படி, பகீரதன், கங்கையை பூமிக்கு கொண்டு வந்து சிவபூஜை செய்து தனது சாபம் நீங்கப் பெற்றான். தனது சாபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை நினைத்து மனம் வருந்திய கபில மகரிஷி சிவனை நினைத்து பூஜை செய்தார்.
ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையால் மலர் தூவினார். அப்போது அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். ஏன், தன்னை கையில் வைத்து வணங்க வேண்டும் என்பதற்கான காரணத்தை கபில மகரிஷியிடம் ஈசன் கேட்டார். அதற்கு மகரிஷியோ மணலில் வைத்து வழிபட மனம் வரவில்லை என்றார் முனிவர்.
ஆனால், கையில் வைத்து வழிபட்ட முறை சரியில்லை என்று கூறிய ஈசன் அவரை பசுவாக பிறக்கும்படி செய்தார். இங்கு பசுவாக பிறந்த கபில மகரிஷி சிவனை வழிபட்டி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் பிறந்த கபில மகரிஷி வழிபட்ட தலம் என்பதால், இத்தல இறைவனுக்கு தேனுபுரீஸ்வரர் என்று பெயரிட்டார். தேனு என்பதற்கு பசு என்பது பொருள். ஆகையால் பசு வழிபட்ட தலம் என்பதால், தேனுபுரீஸ்வரர் என்று ஆனார்.
