ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்
ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர் , அவரது சகோதரர் பலராமர் , அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்.
நடு இரவாகி விட்டது.
மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர்.
வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் , மூவரும் ஒரு சேரத் தூங்கக் கூடாது என்றும் , ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்
அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும் , பலராமரும் தூங்கச் செல்ல , அர்ஜுனன் காவல் இருந்தான்.
அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது.அகன்ற நாசியும் , தூக்கிய பற்களும் , முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.
மரத்தடியில் இருவர் தூங்குவதையும் , அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.அப்போது அவ்வுருவம் ,அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் , அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்டு கோபம் மிகக் கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.
அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக , அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது. அர்ஜுனன் , ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பி விட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி , அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது.
அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்
அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு , அவ்வுருவம் மறைந்துவிட்டது.
மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பி விட்டு படுக்கச் சென்றார்.அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.
அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் ?! என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும் , அழகான முட்டைக் கண்களையும் கண்டு தான் , என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்.அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே , சண்டை போட்டார்.
கிருஷ்ணர் , சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே வந்தது.கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது.
பலராமரும் , அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும் , அவர்களைத் தாக்கியதும் , அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி , நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான்.நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்.
உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் , இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது.
வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு , புன்னகையோடு வெளியேறி விலகி இருந்து விட்டால் , அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். “கோபத்தைக் குறைப்பவனே ஞானி ” என்றார்
ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்
