ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்

319

இறைவனின் அவதாரமாகவே கருதி பக்தர்களால் வழிபடப்படும் ஸ்ரீ ராமானுஜர் நாம் எவ்வாறு வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியுள்ளார். பொதுவாக நாம் பெரியோர்களைப் பூஜித்து வழிபடுவதில் மட்டும் திருப்தியடைந்து விடுகிறோம். ஆனால் அவர்கள் கூறிய, வாழ்ந்து காட்டிய வழியை மறந்து விடுகிறோம். உண்மையில் நாம் பெரியோர்களுக்கு, ஏன் இறைவனுக்குச் செய்யும் உண்மையான பூஜை அவர் காட்டும் வழியில் வாழ்வதேயாகும்.

ஸ்ரீ ராமர் திரேதாயுகத்தில் அவதரித்து வேடனான குகனையும் வானரனான சுக்ரீவனையும் அரக்க குல விபூஷணனையும் வேடுவச்சி சபரியையும் குணத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அருள்பாலித்தார்.

ஹிந்து மதத்தில் எங்குமே பிறப்பால் ஜாதி எனக் கூறப்படவில்லை. ஸ்ரீமத் பகவத்கீதையில் கண்ண பரமாத்மா, ‘நான்கு வர்ணத்தை, நானே குணத்தினுடையவும் கர்மத்தினுடையவும் அடிப்படையில் படைத்தேன்’ என்கிறார்.

ஆனால் யார் செய்த சூழ்ச்சியோ ஹிந்து மதத்தில் பிறப்பால் ஜாதி எனும் நிலை தோன்றியது மட்டுமல்ல, ஜாதியில் உயர்வு தாழ்வு சொல்லி தீண்டாமை எனும் கொடிய நோயும் தொற்றிக்கொண்டது. எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் உயர்வடையுமோ அப்போதெல்லாம் நான் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவேன் என கண்ண பரமாத்மா கூறிய கூற்றிற்கேற்ப ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார்.

இவர் அந்தண குலத்தில் பிறந்தார். யார் அந்தணர் என்பதற்கு இலக்கணம் வகுத்தார். வேளாளர் குலத்தில் உதித்த ‘திருக்கச்சி நம்பி’ என்ற பெரியவரைச் சந்தித்த ஸ்ரீராமானுஜர் அவர் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து தொழுது தன்னை அவர்தம் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆனால் திருக்கச்சி நம்பியோ, நான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன். தாங்களோ அந்தணர்; சாஸ்திரம் அதிகம் கற்றவர். தாங்கள் தான் என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். ஸ்ரீராமானுஜர், பல நூல்களைப் படிப்பதனால் ஒருவன் பண்டிதனாக முடியாது. ஆனால் தாங்கள் பண்புடன் வாழும் பண்டிதர்” எனக் கூறி அவர் தம் சீடரானார்.

இங்கே ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறார் ஸ்ரீராமானுஜர்.

‘நந்தனைப்போல் ஒரு பார்ப்பான்
இந்தப் பாரினில் இல்லை. குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் உணர்வு
இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்…’,
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..’

-என்று கூறும் தெய்வீகக் கவி பாரதியின் வாக்குகள் இங்கு நினைவு கூரத்தக்கது.

ஸ்ரீராமானுஜரிடம் மேலும் ஓர் அதிசய பழக்கம் இருந்தது. தாழ்ந்த குலத்தில் பிறந்த உறங்காவில்லியின் பெருமையை தனது சீடர்களுக்கு உணர வைத்தார். பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாக மாட்டான். குணத்தால் தான் உயர்ந்தவனாவான் என்பதை புரிய வைத்தார்.

‘அனைவரும் இறைவடிவம்’ எனக் கூறும் ஹிந்து மதத்தில் பிறந்த எவரும் எவரையும் தீண்டத்தகாதவர் எனக் கூறமாட்டார்; கூறவும் கூடாது.

அடுத்து ஸ்ரீராமானுஜர் நமக்குத் தரும் செய்தி ‘பரோபகாரம் புண்ணியம்’. அதாவது பிறருக்கு உதவுவதே புண்ணியம் என்பதாகும். ஸ்ரீராமானுஜரின் குரு திருக்கோஷ்டியூர் நம்பி, நாராயண மந்திரத்தை உபதேசித்து, இம்மந்திரத்தைக் கேட்பவர்கள் வைகுந்தப் பதவியடைவர்; இதை யாருக்கும் கூறாதே; இது பரம ரகசியம்; இதை நீ பிறருக்கு உபதேசித்தால் நரகையடைவாய்” என்றார்.

ஆனால், ஸ்ரீ ராமானுஜரோ, திருக்கோஷ்டியூர் ஆலய கோபுரத்தில் ஏறினார்; அனைவரையும் கூவி அழைத்தார். எட்டெழுத்து மந்திரத்தை உரக்க ஓதி, அனைவரும் இம்மந்திரத்தை உச்சரியுங்கள். அனைவரும் வைகுந்தப் பதவியடைவீர்கள்” என்றார்.

இங்கே ஸ்ரீராமானுஜரின் எண்ணம் குருவாக்கை மீறுவதல்ல. தான் ஒருவன் நரகை அடைந்தாலும் இம்மந்திரத்தை உச்சரிக்கும் ஆயிரக்கணக்கானோர் வைகுந்தப் பதவியடைவார்கள் என்பதுதான். ‘பிறரின் நன்மையைக் குறித்து யார் சிந்திக்கிறார்களோ அவர்களே சிறந்தோர். பிறருக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள்; மற்ற அனைவரும் நடைபிணத்துக்குச் சமம்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

உய்ய ஒரே வழி….
உடையவர் திருவடி….