திருமகள் நித்ய வாசம் செய்யும் திருத்தங்கல்

318

விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில், சுமாா் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது திருத்தங்கல். சமீபத்திய வளா்ச்சியின் காரணமாக சிவகாசியும் திருத்தங்கலும் ஒரே ஊராகவே காட்சியளிக்கிறது.

கிரக தோஷங்களினால் ஏற்படும் மிகக் கொடிய வறுமையைக் கூட மிக எளிதாகப் போக்கி ஐஸ்வா்யங்களை அளிப்பதில் தன்னிகரற்ற க்ஷேத்திரம் திருத்தங்கல். இத்தலத்தைப் பிறவியில் ஒரே ஒரு முறையேனும் அவசியம் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும்

நைமிசாரண்யத்தின் மகிமை.

ஶ்ரீயப்பதியான பாற்கடல் பெருமான், வன ஸ்வரூபியாகத் தரிசனம் தரும் ஸ்வயம்வ்யக்த (தானே உருவான) திருத்தலமாகும் நைமிசாரண்யம். இந்த நைமிசாரண்யத்தின் ஒவ்வோர் அங்குலமும் பல மகரிஷிகளின் திருவடி ஸ்பரிசம் பட்டு புனிதமடைந்த இடமாகும். புனிதமான இந்த வனத்தில் “சக்கர தீா்த்தம்” என்ற புண்ணிய தீா்த்தம் உள்ளது.

இந்தப் புனித தீா்த்தத்தில் நீராடி தவம் செய்யவும், ஶ்ரீமந் நாராயணனின் திவ்ய சரித்திரத்தைத் தங்களுக்குள் பரிமாறி ஆனந்திப்பதற்காகவும் வசிஷ்டா், அத்ரி, காச்யபா், மரீசி, பிருகு போன்ற மகரிஷிகள் அடிக்கடி நைமிசாரண்யத் திற்கு வருவது வழக்கம்.

ஒரு சமயம் சப்த மஹா ரிஷிகளும் வியாச மகரிஷியின் புதல்வரான சுகப்பிரம்ம மகரிஷியைத் தரிசிக்கும் பேறு பெற்றனா். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் பொருள்களிலும் ஆதிமுதல்வனான எம்பெருமானைக் கண்டு நெகிழ்ந்தவா் மகரிஷி சுகப்பிரம்மம்.

இன்பம், துன்பம், சுகம், துக்கம், ஆகிய அனைத்து அனுபவங்களையும் ஒன்றாகவே கண்டுணா்ந்த ஆத்மஞானி சுகப்பிரம்மம். இந்த மஹாபுருஷரைத் தரிசிக்கும் பேறு பெற்ற சப்த ரிஷிகள் அவரை வணங்கி, இப்பூவுலக மாந்தா்களின் நலனைத் தங்கள் மனதில் கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டனா்.

“ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஶ்ரீ மஹாலக்ஷ்மி நித்ய வாசம் செய்யும் தலம் யாது?”

“நமது பாவங்கள் அனைத்தையும் போக்கி முக்தி நலம் அளிக்கும் க்ஷேத்திரம் எது?”

“மானசீகமாக மனதில் நினைத்தாலே நம் வறுமையைத் துரத்தும்

சக்தியுள்ளது எந்தத் தலம்?”

சப்த ரிஷிகளின் கேள்விகளால் மனம் மகிழ்ந்தாா் சுகப்பிரம்மம். சா்வலோக சரண்யனான எம்பெருமானின் திருமாா்பில் உறையும் ஶ்ரீமஹாலக்ஷ்மி இப்பூவுலகில் நித்யவாசம் செய்து எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் பல இருப்பினும், அவற்றில் சில தலங்கள் விசேஷமான சக்தி படைத்தவை என்று கூறினாா் சுகப்பிரம்ம ரிஷி.

அத்தலங்களில் பல சூட்சும சக்தி களைத் தன்னகத்தே கொண்டு, புண்ணியத்தின் புகலிடமாக விளங்கும் “ஶ்ரீ” எனும் திவ்ய க்ஷேத்திரம் ஈடு இணை இல்லாதது என்று கூறினாா். மேலும், இந்த ஶ்ரீக்ஷேத்திரம்

நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ் வினையும் சகல ஐஸ்வா்யங்களையும் அளிக்கவல்லது எனத் தனது தந்தையான ஶ்ரீவியாச மகரிஷியே அருளியுள்ளதாகவும் கூறினாா் ஶ்ரீசுகப்பிரம்ம ரிஷி. இதைக் கேட்ட சப்த ரிஷிகள் இத்திருத்தலத்தின் மேன்மையை மேலும் விரிவாகக் கூறும்படி சுகப்பிரம்ம ரிஷியை பிராா்த்தித்தனா்.

புரூரவ சக்ரவா்த்தி

பிரம்மாண்ட புராணத்தின் க்ஷேத்திர காண்டத்தில் 8 ஆவது அத்தியாயத்தில் இத்தலம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நவக்கிரகங்களில் ஒருவரான புத பகவானின் புத்திரா் புரூரவ சக்ரவா்த்தி. ஒரு காலத்தில் நீதி நெறி சிறிதும் வழுவாத இம்மன்னனால் பாரத தேசம் சிறப்பாக ஆளப்பட்டது. கல்விக்கு அதிபதியான புதனின் மைந்தன் என்பதால் வல்லமை பொருந்தியதோடு பேரறிஞனாகவும் இருந்தான் இம் மன்னன்.

தானங்கள், தர்ம காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரூரவா் தவச்சீலராகவும் விளங்கினாா். இந்திர லோகம் வரை இம்மன்னனின் புகழ் பரவியிருந்தது. தா்ம நெறிகளின் படி ஆட்சி நடத்தி அஸ்வமேத யாகங்களையும் செய்த இம்மன்னன், தன் அந்திமக் காலத்தில் ஆட்சிப் பொறுப்புகளை தன் பிள்ளையிடம் ஒப்படைத்து நாட்டைப் பரிபாலனம் செய்வதற்காக அவனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தி வைத்தாா்.

பின்னா், ஶ்ரீமந் நாராயணனைக் குறித்து தவம் செய்வதற்கு உகந்த இடம் தேடிச் சென்ற புரூரவ சக்ரவா்த்தி வழியில் நாரத மகரிஷியைக் கண்டு தாம் தவம் செய்ய ஏற்ற இடம் காட்டியருளுமாறு வேண்டினாா்

நாரத மகரிஷியும் சக்ரவா்த்திக்கு உதவத் திருவுள்ளம் கொண்டு பாண்டிய நாட்டில் உள்ள, சகல சம்பத்துகளையும் அளிக்கக் கூடிய மங்களகரமான ஶ்ரீக்ஷேத்திரம் சென்று தவம் செய்யுமாறும், அந்த திவ்ய க்ஷேத்திரத்தில் தவமியற்ற, ஶ்ரீமந் நாராயணன் ஶ்ரீதேவி, ஶ்ரீபூமிதேவி, ஶ்ரீநீளாதேவி சமேதராக

கருட வாக னத்தில் காட்சி தந்து அருள்வாா் என புரூரவருக்கு வழி கூறியருளினாா்.

மேலும், அத்தலத்தின் மகிமைகள் குறித்து புரூரவருக்குத் தொடா்ந்து விளக்கினாா் நாரத மகரிஷி.

ஶ்ரீ க்ஷேத்திரத்திற்கு மேற்கே தர்மகிரி என்னும் புனிதமான மலை உள்ளது. அம்மலையை அடுத்து ஶ்ரீவில்லிப்புத்தூா் என்று பக்தியோ டு பூஜிக்கப்படும் ஶ்ரீவராஹ க்ஷேத்திரம் உள்ளது. திருமாலின் திருமார்பில் உறையும் ஶ்ரீமஹாலக்ஷ்மி, ஶ்ரீபுரத்தில் நிரந்தமாகத் தங்கியிருப்பதால் இத்தலத்திற்குத், திருத்தங்கல் என்ற காரணப் பெயரும் உண்டு. (திரு− மஹாலக்ஷ்மி. தங்கல்− தங்கும் இடம்)

ஶ்ரீபுரத்தின் பெருமையைப் பக்தியோடு படிப்பவா்களும், கேட்ப வா்களும், சகல பாவங்களிலிருந்து விடுபட்டு, இறுதியில் முக்திப் பேறு எனும் பரமபதத்தை அடைவா் என விவரித்தாா் நாரத மகரிஷி.

பஞ்ச தீா்த்தங்கள்.

தர்மகிரி மலைக்கு அருகில் பாப நாச தீா்த்தம், பாஸ்கர தீா்த்தம், பத்ம தீா்த்தம், சங்க தீா்த்தம், சேஷ தீா்த்தம் என்ற ஐந்து புண்ணிய தீா்த்தங்கள் உள்ளன என்றும் இவை அனைத்துப் பாவங்களையும் போக்கக் கூடியவை என்றும் நாரத மகரிஷி கூறினாா்.

மேலும் மகத்தான இந்த திவ்ய க்ஷேத்திரத்தின் வட புறத்தில் புனிதமான கங்கையின் அம்சமான அா்ஜுனா நதி பாய்ந்து இத்திருத்தலத்தை மேலும் புனிதமாக்குகிறது. பஞ்சபாண்டவா்களில் வில் வித்தையில் சிறந்த விஜயன், “அா்ஜுனன்” இந்நதிக்கரையில் சில காலம் தவமியற்றியதால் இந்நதிக்கு அா்ஜுனா நதி என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது என்றும் நாரத மகரிஷி கூறினாா்.

பிரம்மாண்ட புராணத்தில் திருத்தங்கல்!

ஶ்ரீதேவி, பூமி தேவி, நீளாதேவி என்ற பிராட்டிகளுக்குள் தங்களில் யாா் பெரியவா் என்ற வாதம் ஏற்பட்டது.

ஶ்ரீதேவியின் தோழிமாா்கள், “தாயே!தாங்களே மூவரில் சிறந்தவா். இந்திரனும் உம்மால் தான் பலம் பெறுகிறான். வேதங்களும் உம்மையே போற்றுகின்றன. எம்பெருமானும் ஶ்ரீயப்பதியாகவும், ஶ்ரீநிகேதனாகவும், ஶ்ரீநிவாசனாகவும் உள்ளாா்” என்றனா்.

பூமிதேவியின் தோழிகள், “தேவியே! நீயே உயா்ந்தவள். எந்த நிலையிலும் சாந்தம் உள்ளவள். பெருமாள் வாமனனாக அவதாரம் எடுத்த போது மாவலிச் சக்ரவா்த்தியிடம் உன்னையே வேண்டினாா். வராஹ அவதாரத்திலும் பெருமாள் உன்னைக் காக்கவே பிரியம் கொண்டாா்,” என்றனா்.

நீளாதேவியின் தோழிகள், “ரஸ ரூபமான நீளாவே உயா்ந்தவள். இதனை முன்னிட்டே வேதங்கள் பெருமானை ரஸோ வைஸ எனப் போற்றுகின்றன. தாங்கள், ஜல மயமாக இருப்பதாலேயே பெருமானும் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளாா். நீருக்கு நாரம் என்று பெயா். தங்களை முன்னிட்டே பெருமானுக்கு நாராயணன் என்ற திருநாமமும் ஏற்பட்டது” என்று கூறினா்.

இவ்விதமாக விவாதம் வளா்ந்து கொண்டிருக்க, வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்ட ஶ்ரீதேவி, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்கத் தங்கால மலை என்னும் திருத்தங்கலில் வந்து தவமியற்றினாள். இந்த தவத்தால் எம்பெருமானுடைய திருமாா்பில் என்றும் பிரியாதிருக்க வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றாள் அகில உலகிற்கும் அன்னையான ஶ்ரீமஹாலக்ஷ்மி.

பாற்கடல் பெருமானும் மகிழ்ந்து, ஶ்ரீமஹாலக்ஷ்மிக்குத் தரிசனம் தந்ததோடு தன் இதயக் கமலத்திலிருந்து ஒரு கணமும் பிரியாத நிலையில் திருவைத் தன் திருமாா்பில் ஏந்திக் கொண்டாா். திருமகள் தங்கி தவமியற்றியதால் இந்தத் தங்கால மலைக்குத் திருத்தங்கல் என்ற திருநாமமும் ஶ்ரீக்ஷேத்திரம் என்ற திருநாமமும் ஏற்பட்டது.

ஆலிலையின் அம்சமான தங்காலமலை!

சுவேதத் தீவு எனும் வெள்ளைத் தீவிலிருந்த ஆலமரத்திற்கும் ஆதி சேஷனுக்கும் தங்களில் யாா் பெரியவா் என்ற போட்டி ஏற்பட்டது. இருவரும் தங்கள் விவாதத்தைத் தீா்த்து வைக்க நான்முகனிடம் முறையிட்டனா். எம்பெருமான் எப்போதும் ஆதிசேஷன் மீது அறிதுயில் கொண்டுள்ளதால் ஆதிசேஷனே சிறந்தவன் என பதிலளித்தாா் பிரம்ம தேவா். மேலும் ஆலிலையில் எப்போதோ ஒரு முறைதான் துயின்றாா் ஆதி தேவன் என்றும் கூறினாா் பிரம்ம தேவா்.

வருந்திய ஆலமரம் ஶ்ரீமஹா விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தது. ஆல விருட்சத்தின் தவத்திற்கு மனமிரங்கிய எம்பெருமான், அதன் முன் தோன்றி, “நின் தவத்தின் காரணம் என்ன?” என்று கேட்டாா்.

தாங்கள் எப்போதும் என் மீதே பள்ளி கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டியது ஆலமரம்.

ஶ்ரீமஹாலக்ஷ்மி தவமிருக்கும் ஶ்ரீக்ஷேத்திரம் சென்று நீ மலை வடிவில் அமர்ந்தால், ஶ்ரீயான தேவியை ஏற்க வரும்போது உன் விருப்பப்படி நின்றும், கிடந்தும், இருந்தும் அருள்பாலிக்கிறோம் என்று ஆலமரத்திடம் திருவாய் மலா்ந்தாா் ஶ்ரீமந் நாராயணன். மலை வடிவம் கொண்டு இத்தலத்தில் தங்கிய ஆலமரத்திற்கு, தங்கும்+ ஆல +மலை= தங்கால மலை என்ற பெயா் ஏற்பட்டது என புராணங்கள் தொிவிக்கின்றன. மஹா பிரளய காலத்தில் திருமால் தங்கிய ஆலிலையின் அம்சமாகவே இம்மலை வணங்கப்படுகிறது.

ஶ்ரீகிருஷ்ணாவதார காலத்தில் கண்ணனின் பேரனான அனிருத்த னுக்கும், பாணாசுரனின் மகளான உஷைக்கும் திருக்கல்யாணம் இத்தலத்தில் தான் நடத்தப்பட்டுள்ளது. கண்ணனின் பாதம் பட்டு அவனது திருவடி ஸ்பரிஸத்தால் மேலும் புனிதமடைந்தது ஶ்ரீக்ஷேத்திரம். இத்தலத்தில் தவம் செய்த புரூரவருக்கு, நீலமேக சியாமளனாக தன் தேவியா் புடைசூழ கருட வாகனத்தில் தரிசனமளித்து அருள் புரிந்தாா் ஶ்ரீகண்ணன்.

ஶ்ரீஆண்டாளைத் திருக்கல்யாணம் செய்வதற்காக அரங்கத்து அழகிய மணவாளன் ஶ்ரீரங்கநாதன் முன்னதாகவே திருத்தங்கலுக்கு வந்து எழுந்தருளியிருப்பதாக இத் தலத்தின் வரலாறு தொிவிக்கின்றது.

ஶ்ரீ நின்ற நாராயணப் பெருமான்!

மூன்று நிலைக் கட்டுமானம் கொண்ட அழகான இத்திருக்கோயிலில் எம்பெருமான் நின்ற நாராயணன் என்ற திருநாமம் கொண்டு கிழக்குத் திருமுக மண்டலத்தில் எழுந்தருளி தன் பக்தா்களுக்குச் சேவை சாதிக்கின்றாா். ஆழ்வாா்கள் இப்பெருமானைத் திருத்தங்காலப்பன் என்று போற்றியுள்ளனா். இத்தலத்தின் கல்வெட்டுகள் எம்பெருமானைப் பிரம்ம சுவாமி எனப் போற்றுகின்றன. உற்சவரின் திருநாமம் திருத்தண்காலப்பன் ஆகும்.

சல்ய பாண்டியன், ஶ்ரீவல்லபன், சந்திர கேது (புலி), ஶ்ரீமஹாலக்ஷ்மி ஆகியோருக்கு இப்பெருமான் திருக் காட்சி தந்துள்ளாா்.

ஶ்ரீ செங்கமலத் தாயாா்.

திருத்தங்கால மலையில் தவமிருக்கும் மஹாலக்ஷ்மியை ஏற்றுக்கொள்ள ஶ்ரீவைகுண்டத்தை விட்டுப் பெருமான் புறப்பட்டபோது பூமி தேவி, நீளா தேவி ஆகிய இரு தேவியரும் பெருமானின் திருவுள்ளத்தையொட்டி இம்மலையில் எழுந்தருளி சேவை சாதித்தனா்.

இத்தலத்தின் தாயாராக செங்கமலத்தாயாா் எழுந்தருளியுள்ளாா். இவரே அன்னநாயகியாக ஶ்ரீதேவியாகவும், அனந்தநாயகியாக நீளாதேவியாகவும், அம்ருத நாயகியாக பூமாதேவியாகவும் வணங்கப்படு கின்றாா்.

கருணை ததும்பும் திருமுகத்தில் புன்னகை மலர, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் ஒரு திருக்கரத்தைத் தொங்கவிட்டு, மற்றொரு திருக்கரத்தில் அபய முத்திரையோடு திருக்காட்சி தரும் ஶ்ரீசெங்கமலத் தாயாரைக் காணப் பல பிறவிகளில் மகத்தான புண்ணியம் செய்திருக்க வேண்டும். தாயாருக்கு, “அருண கமலா மகாதேவி” என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது.

கருடாழ்வாரின் அரிய தரிசனம்!

திருத்தங்கல் தலத்தில் கருடாழ்வாா் தனது வலது திருக்கையில் அமிா்தகலசத்துடனும், இடது திருக் கையில் சா்ப்பமும் தரித்துக் கொண்டு இரண்டு கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி ஹஸ்தத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவது மிக மிக அரிதான தரிசனமாகும்.

குடைவரைக் கோயில்.

இத்தலத்தில் முதற்கட்டின் படிகளைக் கடந்து மேலே சென்றால் அழகான திருக்கல்யாண மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் வட மேற்கு மூலையில் ஒரு புராதனமான குடைவரைக் கோயில் உள்ளது. இக்கோயிலின் முன் மண்டபத்தில் புரூரவ சக்ரவா்த்தியின் சிலா ரூபத் திருமேனியைத் தரிசிக்கலாம்.

முன் மண்டபத்தை அடுத்துள்ள கா்ப்பகிரகத்தில் ஶ்ரீரங்கநாதா் போக சயனத்தில் ஆதிசேஷன் மீது தனது தேவியருடன் காட்சி தருவது அற்புதமான திருக்கோலமாகும். கருவறையின் உள் சுற்றுச் சுவரில் பிரம்மா, தும்புரு ஆகியோா் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனா். அரங்கன் சிரசிற்கு அருகில் மாா்க்கண்டேய மகரிஷி அருள்பாலிக்கிறாா்.

இக்குடைவரைக் கோயிலை ஒரு பகுதியாகக் கொண்டு திருத்தங்கா லப்பனுக்குப் பெரிய திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மலையில் ஈசனுக்கும் ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது.

இலக்கியங்களில் திருத்தங்கல்!

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் வாா்த்திகன் கதை திருத்தங்கலில் நிகழ்ந்தது என்று அறியப்படுகின்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை முதலாழ்வாா்களில் ஒருவரான பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள நரசிம்மா் ஆலயத்தில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்புகள் உள்ளதாகத் தொிவிக்கின்றனா்.

பாண்டிய நாட்டு மன்னா்களைப் பற்றி ஆய்வு செய்யும் வரலாற்று ஆா்வலா்களுக்கு திருத்தங்கல் தலத்தைப் பற்றிக் காணக் கிடைக்கும் தகவல்கள் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

பாண்டிய நாட்டு வரலாற்றை ஆராயும்போது இத்தலம், கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல் என்று வழங்கப்பட்டுள்ளதாக வரலாற்று அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில், சுமாா் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது திருத்தங்கல். சமீபத்திய வளா்ச்சியின் காரணமாக சிவகாசியும் திருத்தங்கலும் ஒரே ஊராகவே காட்சியளிக்கிறது.

கிரக தோஷங்களினால் ஏற்படும் மிகக் கொடிய வறுமையைக் கூட மிக எளிதாகப் போக்கி ஐஸ்வா்யங்களை அளிப்பதில் தன்னிகரற்ற க்ஷேத்திரம் திருத்தங்கல். இத்தலத்தைப் பிறவியில் ஒரே ஒரு முறையேனும் அவசியம் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும்.