“ஸ்ரீராம” என்று மட்டும் சொன்னாலே தோசங்களும், தீய எண்ணங்களும் நீங்கிவிடும்.

212

ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராம பிரானிடம் வேண்டினார். எவர் ஒருவர் ஸ்ரீ ராம நாமத்தை உச்சரிக்கிறாரோ, அவர்களைப் பாவங்களிலிருந்தும், தோசங்களிலிருந்தும், சாபங்களிலிருந்தும் விடிவிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார், ஸ்ரீஆஞ்சநேயர்.

அனைத்து நாமவளிகளும் ‘ஓம்’ என்ற பிரணவ ஒலியை முன்மொழிந்தே ஆரம்பமாகின்றன. ‘ஓம்’ என்னும் மந்திர உச்சாரத்துள், ‘ஓம்’கார நாதனாக வீற்றிருக்கும் ‘ஓம்காரன் சிவபெருமான்’ தனக்குப் பிரியமாக ‘ஸ்ரீராம’ நாமத்தைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டுள்ளார்.

ஸ்ரீராம பிரான் சிவபெருமானை வணங்கி தன் பெயரோடு ஈஸ்வரன் பெயரும் இணைந்து இவ்வுலகில் ஒலிக்க வேண்டும் என்று கேட்டதன் விழைவாக, ஸ்ரீ ராமேஸ்வரம் என்ற பெயர் உருவாகி, இன்றும் நிலைத்து இருக்கின்றது. இது, ஸ்ரீமத் இராமாயணம் காட்டும் கண்கூடான உண்மை.

ஸ்ரீராமேஸ்வரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீராமரின் இறைவன், ஸ்ரீராம நாமத்தைத் தன் பெயராக ஏற்று, ஸ்ரீ ராமனின் மனம் நிறைந்த தலைவனாக, “ஸ்ரீராமநாதன்” என்ற பெயர் கொண்டு ஸ்ரீராமனின் வேண்டுதலுக்கிணங்க அருள்கின்றார், சிவபெருமான்.

“ஸ்ரீராமநாதா!” என்றழைத்தால், அங்கு ஸ்ரீராமனின் அருளும், அவர் நாதனான சிவனின் அருளும் கிடைக்கும். ஸ்ரீராமா என்றால், ஸ்ரீஅனுமனும் வருவார், சீதையும் வருவார். சக்தியில்லாமல் சிவன் வருவாரா? இறைவனே வருகையில் அவர் பிள்ளைகளும், அடியார்களும் வராமல் இருக்க முடியுமா? எனவே, ஸ்ரீராமநாதா என்றாலும், ஸ்ரீராமா என்றாலும், இறை அருள் நிச்சயம் உண்டு.

ஸ்ரீராமன் பஞ்சாட்சரன் ஆனது இங்கே- ஸ்ரீ-ரா-மே-ஸ்-வ-ர்
பஞ்சாட்சரனாக ஸ்ரீராமனோடு இறைவன் இங்கே – ஸ்ரீ-ரா-ம-நா-த்
பஞ்சாட்சரனின் அவதாரம் –
ஸ்ரீ-அ-நு-மா-ன், ஆ-ஞ்-ச-நே-ய, வா-யு-பு-த்-ர…

ஸ்ரீராம நாமத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு எனில்,

நாராயணனின் ஈராம் எழுத்து – ரா- வும்,
நமசிவாயனின் ஈராம் எழுத்து – ம-வும், சேர்ந்திருக்கும் ஒரு அற்புத மந்திரம் தான் – “ராம”.

சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ரா” என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “ம” என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார்.

உச்சரிக்கப்படும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு சக்தி உண்டு. அதன் காரணமாகத்தான், பிரணவ மந்திரம் முதலான வழிபாட்டு மந்திரங்கள் அனைத்தையும் வணங்குகிறோம். உச்சரிப்பு தவறாகும் போது, அதற்கான பலனும் மாறுபடுகிறது. நாம ஜெபத்தின் உள்நோக்கமும் இதுவே.

உதாரணமாக, ஒலி- சப்தம், ஒளி- வெளிச்சம்.

இதன் காரணமாகத்தான், ஒன்றை முழுதாக, பிழையின்றி கற்றுக்கொள்ள, குருவை நாடுகிறோம்.

ஸ்ரீராம நாமத்தை வால்மீகி மஹரிஷிக்குக் கற்றுத்தந்தவர், தேவரிஷி நாரதர். முதலில் “மரா” என்று தவறாகச் சொன்ன ரத்னாகர் தான் ஸ்ரீமத் இராமாயணத்தை இயற்றிய வால்மீகி மகரிஷி.

இன்றும் உலக மக்களுக்கு ஸ்ரீராம நாமத்தைக் கற்றுத்தருபவர், ஸ்ரீஆஞ்சநேயர். அவ்வகையில், நம் அனைவருக்கும் குரு, ஸ்ரீஆஞ்சநேயர் தான்.

ஸ்ரீராம பாணத்தின் முன் எந்த அஸ்திரமும் தோல்வியடையும். ஸ்ரீராமருக்கும் ஸ்ரீஆஞ்சநேயருக்கும் இடையே மூண்ட யுத்தத்தில், சக்திவாய்ந்த ராமபாணத்தின் முன் ஸ்ரீ ராம நாமத்தை மட்டுமே கூறி காசிராஜன் யயாதியைக் காத்தவர் ஸ்ரீஅனுமான். யயாதிராஜனின் ராம நாம ஜெபம், அவனை ராம பாணத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் காத்தது.

சமுதாயத்தில் மனிதன் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகள் ராம நாமத்திற்கு இல்லை. சமுதாயத்தின் கீழ் வகுப்பினர் என்று ஒதுக்கப்பட்டவர் இல்லத்திலும் ஸ்ரீராம நாமம் வாழ்கின்றது; ராமசாமி என்று பெயர் சூட்டி, ராமா என்றாலும் அது ராம நாம ஜெபமே; அங்கு அனுமன் வருவது தின்னமே!

ஸ்ரீ ராம நாம மகிமையை ஒரு யுகத்தில் சொல்லிவிட முடியுமோ?
ஸ்ரீ ராம நாமம் சொல்லி, உணர்ந்து, மகிழ்ந்து, வாழ்ந்து, பிறரையும் சொல்லச் செய்து வாழச் செய்யுங்கள்!

ஸ்ரீ ராம ஜெயம்!