Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalதுளசி கல்யாணம் ஸ்பெஷல் !

துளசி கல்யாணம் ஸ்பெஷல் !

கமலை ஞானப்பிரகாசர் அருளிய புட்பவிதி நூலிலிருந்து…
#துளசியின்_சிறப்புகள்
1.துளசியின் இலைபூ ஒன்றைத் தோகைஓர் பாகற் கேற்றின்
வளமலி மால்ப தத்தின் மருவவே வாழ்ந்தி ருந்தே
இளமதி அணிந்தோன் பாங்கர் எழில்புனை சாரூ பத்தில்
உளமகிழ் ஞானம் மேவி உயர்பர முத்தி சேர்வார்.
உரை:-
துளசியினது இலைகளிலாயினும், பூக்களிலாயினும் ஒன்றைச் சிவபெருமானுக்குச் சாத்தினால், திருமாலினுடைய வைகுந்தத்தில் வாழ்ந்து, பின்பு சிவலோகத்தில் சாரூப பதவியைப் பெற்றிருந்து, பின் ஞானத்தை அடைந்து, பரமுத்தியைப் பெறுவார்கள்.
குறிப்பு:- துளசியின் பூவை ‘கதிர்’ என்பர்.
2.கருந்துழாய் மாலுக் கேற்றின் கலகவேல் விழியார் போகம்
அருந்தி நான் முகனே யாகி அளவகல் போகம் ஆர்ந்தே
இருந்துபின் வைகுந் தத்தில் இசைந்துமால் போலும் ரூபம் பொருந்திஆ யிரங்கற் பங்கள் போனபின் புகழ்மால் ஆவார்.
உரை:-
கருந்துளசியைத் திருமாலுக்குச் சாத்தினால் மகளிர் போகத்துடன் மற்றைய போகங்களையும் நிரம்பத் துய்த்துப் பின் வைகுந்தத்தை அடைந்து திருமாலின் சாரூபத்தைப் பெற்று ஆயிரகற்பங்கள் இருந்து, அதன்பின் திருமாலாகி அப்பதவியில் வாழ்வார்கள்.
குறிப்பு:- ‘கலகம்’ என்றது காதலை.
3.திங்கள்முன் ஓணம் வெள்ளி செவ்வாய் ஆ தித்தன் வாரம்
மங்கிராக் காலை மாலை மன்அப ராணம் எட்டும் தங்குபன் னிரண்டீ ரேழும் சாற்றும்ஈ ருவாவி னோடும் புங்கமார் விதிபா தந்தான் புகழ்துழாய் கொய்ய லாகா.
உரை:-
ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், திருவோண நட்சத்திரத்திலும், அட்டமி , துவாதசி, சதுர்த்தசி பெளர்ணமை, அமாவாசை என்னும் திதிகளிலும் (*விதிபாத யோகத்திலும் இரவு, வைகறை, மாலை, பிற்பகல் என்னும் காலங்களிலும் துளசியைச் செடியிலிருந்து எடுத்தலாகாது).
குறிப்பு:- ‘காலை’ என்றது வைகறையை. அபராணம் – பிற்பகல் * ‘சத்தமி’ திதியிலும் துளசி எடுத்தல் கூடாது என்பர்.
4.துளபநீள் கதிருள் மன்னும் தூயபூ அலர்ந்த காலைக்
கிளரும்நாள் ஓரா தென்றும் கெழுமிய இலை இரண்டே
அளவிய கதிர்எ டுத்தே அரன்றனக் கணிய லாகும்;
களிமதக் கரிமு கத்துக் கடவுளுக் காகா தன்றே.
உரை:-
துளசிக் கதிருள் பொருந்தியுள்ள பூக்கள் மலர்ந்தபின் கீழே இரண்டு இலைகளை மட்டும் உடையதாயிருந்தால் அவற்றை இன்ன நாள் என்பதைப் பாராமல் எந்த நாளிலும் எடுத்துச் சிவபெருமானுக்குச் சாத்தலாம். துளசி விநாயகருக்கு ஆகாது.
5.துளபம்ஏழ் வாரங் காறும் துலங்கவே சாத்த லாகும்;
துளபம்ஓர் வருடங் காறும் தூள்செய்து சாத்த லாகும்;
கிளரும்முக் கிளைவில் வத்தைக் கெழுமவைத் துலர்த்தித் தூள் செய்து அளவில்கா லங்க ளெல்லாம் அரன்றனக் கணிய லாகும்.
உரை:-
ஒருநாள் எடுத்துவைத்த துளசியை ஏழுவாரம் வரையில் வைத்திருந்து சாத்தலாம். அதை உலர்த்தித் தூள் செய்து வைத்தால், ஓர் ஆண்டு வரையில் சாத்தலாகும். மூன்று கிளைகளையுடைய வில்வத்தை உலர்த்தித் தூள் செய்தால், எத்தனைக் காலமும் சாத்தலாம்.
குறிப்பு:- தூள்களைச் சாத்துதல், அட்சதை எள் இவற்றைச் சாத்துதல் போலவாம்.
நமஸ்தே துளசி தேவி !
நமோ நமஸ்தே நாராயண ப்ரியே !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − two =

Most Popular