Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் !

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் !

புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கும் மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

புதிய ஆண்டின் தொடக்கமாக முக்கனிகளும் ஒருங்கே கிடைக்கும் சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக சித்திரைகனி எனும் தமிழ்புத்தாண்டாக சிறப்பாக கொண்டாடுகிறோம் ..

சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, வாசலில் சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
அத்தோடு மஞ்சள், குங்குமம் நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.

சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.

புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.

அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். அத்துடன் உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய தமிழ் புத்தாண்டாக மலர வாழ்த்துகள் !!!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =

Most Popular