தர்மத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்திய அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் *ஸ்ரீபார்த்தசாரதி* திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்!
காயங்களுடன் இருப்பதால் இவருக்கான தளிகையில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் பொன்ற காரமான பொருள்களை அதிகம் சேர்ப்பதில்லை.
தாயார் *வேதவல்லி*! தனி சன்னிதியில் அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் மட்டும் கோயில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு கண்டருள்வார்!
தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயில் மூலவர் *வேங்கடகிருஷ்ணன்* மீசையுடன் சேவை சாதிக்கிறார்! வைகுண்ட ஏகாதசி பகல்பத்து ஐந்து திருநாட்கள் மட்டும் இவர் மீசை இல்லாமல் சேவை சாதிப்பார்! உற்சவர் ஸ்ரீபார்த்தசாரதி, வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் திருமஞ்சனத்தில் மட்டும் மீசையுடன் சேவை சாதிப்பார்!
எல்லா கோயில்களிலும் பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும் சக்கரமும் பிரதானமானவை. ஆனால் இங்கு பெருமாளிடம் சக்கரம் இல்லை. மகாபாரதப் போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி பூண்டார். எனவே, இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார்! போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்துள்ளார்!
அடியவர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இக்கோயிலில் பெருமாள் குடும்பசமேதராய் சேவை சாதிக்கிறார்! இந்த பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் வீற்றிருக்கிறாள்! வலப்புறத்தில் தமையன் பலராமன், இடப்புறத்தில் இளவல் சாத்யகி, குமாரர் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோருடன் மூலஸ்தானத்தில் சேவை சாதிக்கிறார்!
“வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்;
கோதலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலாயத் தோர்தெழுதேத்தும்;
ஆதியை அமுதை என்னையாளுடைய அப்பனை ஒப்பவரில்லா மாதர்கள் வாழும்;
மாடமா மயிலைத் திருவெல்லிக்கேணி கண்டேனே!’
-திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி)
–
(வேதத்தின் வடிவமாகவும், அவ்வேதத்தின் மூலம் பெறக்கூடிய இனிய சுவைப் பயனையும் உடைய எம்பெருமான், சனகர் முதலிய மேன்மையான முனிவர்கள் வணங்கும் ஸ்ரீகண்ணபிரானை, நந்தகோபரின் திருமகனும் ஆண் யானைக்கு சமமான அக்கண்ணபிரானை இப்புவியிலுள்ளோர் அனைவரும் தொழும் ஆதிமூர்த்தியாகிய எம்பெருமானை, அடியேனை ஆட்கொண்டு அருளும் என் அப்பனை, அமுதம் போன்று இனியவைகளை அளிக்கக்கூடிய எம்பெருமானை, ஒப்புமை அற்ற பெண்கள் நிறைந்து வாழும் மயிலை அடுத்து திகழும் மாடமாளிகைகள் நிறைந்த *திருவெல்லிக்கேணி* என்ற இத்திருத்தலத்தில் அடியேன் கண்டேனே!)
