திருமாலின் திருவோண விரதம்!

70

திருமாலின் திருவோண விரதம்!

பெருமாளுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம். அதேபோல், சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில், ‘திரு’ எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகிற இரண்டே நட்சத்திரங்கள்… திருவாதிரையும் திருவோணமும் மட்டுமே!

திதிகளில் ஏகாதசி திதியும் நட்சத்திரங்களில் திருவோண நட்சத்திர நாளும் பெருமாளுக்கு உகந்த மிக முக்கியமான நாட்கள். அதனால்தான் ஏகாதசி விரதமும் திருவோண விரதமும் கடைப்பிடிக்கச் சொல்லி ஆச்சார்யர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏகாதசி திதி நாளில் பெருமாளுக்கு விரதம் மேற்கொண்டு அவருக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், திருமாலின் திருவடியில் நமக்கு இடம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் திருவோண நட்சத்திர நாளில், பெருமாளை நினைத்து விரதம் இருந்து, அவரை கண்ணாரத் தரிசித்து, துளசி மாலை சார்த்தி வழிபட்டால், 16 வகையான செல்வங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

சந்திர தோஷத்தை நீக்கும் திருவோண விரதம்:

மேலும், திருவோண நட்சத்திரத்தில் முறையாக பெருமாளை பூஜித்து வழிபட்டு வந்தால், சந்திர தோஷமும் நீங்கப்பெறும். புத்தியில் தெளிவும் மனதில் குழப்பமின்மையும் இருக்கும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வீரியமாகி வெற்றியைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருவோண நட்சத்திரம் வரும் நாளுக்கு முதல் நாளிலிருந்தே இரவில் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. மறுநாள் மட்டும் அதாவது திருவோண விரத நாளில் மட்டும் உணவு உட்கொள்ளாமல் விரதமிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், வயதானவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் முதலானோர் திருவோண விரதம் மேற்கொள்ளும் வேளையில், உணவு எடுத்துக் கொள்வதில் தோஷமில்லை என்று விளக்குகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பெளர்ணமியும் திருவோணமும் இணைந்து வரும் இந்த அற்புதமான நாளில், வீட்டில் பூஜையறையில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அல்லது அதை ஒலிக்கச் செய்து காதாரக் கேட்பதும் நற்பலன்களை வழங்கும். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை சார்த்துங்கள். ஒரு கைப்பிடி அளவேனும் துளசி சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால், கேட்டதெல்லாம் தருவார் திருமால்; நாம் நினைத்ததையெல்ல்லாம் நடத்தி அருளுவார் பெருமாள் என்பது நிச்சயம்.