Saturday, October 14, 2023
HomePurana Kathaigalதுவாரகநாதர் கிருஷ்ணர் ஆலயத்தின் புராணக் கதை!

துவாரகநாதர் கிருஷ்ணர் ஆலயத்தின் புராணக் கதை!

துவாரகநாதர் கிருஷ்ணர் ஆலயத்தின் புராணக் கதை!

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டம் துவாரகாவில் அமைந்துள்ளது துவாரகநாதர் எனும் கிருஷ்ணர் கோவில். இக்கோவிலின் புராணக் கதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஆலயத்தின் சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம். இத்தலத்தின் புராணப் பெயர் சுதாமபுரி ஆகும். இவ்வாலயத்தின் மூலவர் ஸ்ரீ கிருஷ்ணர் (துவாரகநாதர்), மற்றும் ராதா, பாமா, ருக்மணி உடன் அருள்பாளிக்கிறார்.

ஆலய அமைப்பு:

கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.

கீழே சன்னிதானமும், மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சாரதா பீடம் இங்கு உள்ளது. 5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இதுவே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. கோமதி நதிக்கரையில், துவாரகா கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். 11 விதமான பதார்த்தங்கள் பிரசாதமாக கிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.

துர்வாச முனிவரின் கமண்டல நீரை ருக்மணி தேவி பருகியதால் துர்வாச முனிவர் இங்குள்ள – பூமி உப்பாகும் என்றும் கடல்நீர் வற்றும் என சாபமிட்டார். பின்னர் துவாரகை வந்த கிருஷ்ணரை மண முடித்த பின் துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார். இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி, ஊர் செழிப்புறவும், கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார்.

இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான- சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய- சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கொடியை ஏற்றியவுடன் கோபுர உச்சியிலேயே உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப்போலவும் மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம், அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது. இங்கும் ஒரு துவாரகாநாத் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் இங்கு அவரது மற்ற மனைவியர்களின் (ருக்மிணி தவிர) கோவில்கள், தாய் தேவகி கோவில், கல்யாணராமர், திரிவிக்கிரமமூர்த்தி, லக்ஷ்மி நாராயணர் கோவில்கள் உள்ளன.

இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சங்க தீர்த்தம் உள்ளது. இந்த தீவு துவாரகையிலேயே ருக்மிணிக்குத் தனிக்கோவில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் ருக்மிணி. துவாரகா கிருஷ்ணனிடம் ருக்மிணி ஏதோ காரணத்தால் கோபித்துக் கொண்டு இங்கு வந்ததாக கோவில் பூசாரி கூறுகிறார். அதாவது துவாரகா கோவிலிலுள்ள ஸ்ரீகிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்தபடி இங்கு நிற்கிறாராம் ருக்மிணி.

கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றன. (அவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல் இருக்கும். சில கற்களில் விஷ்ணுவின் சக்கரம் இருக்குமாம்.) மேலும் இந்த கற்களில் நாராயண சின்னம், மகாலக்ஷ்மி சின்னம் (பிரதீக்) இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கற்களை எடுத்து வந்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த தீவு துவாரகாவுக்கு அக்காலத்தில் சங்கோதரா, ஸ்ரீதீர்த்தா என்று பெயர். இங்கு ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தர்ம சபையும், ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவாரகாவிலும், தீவு துவாரகாவிலும் ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துவாரகாதீஷையும் ருக்மிணி தாயாரையும் தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.52 கஜம் அகலமுள்ள கொடி 10 கி.மீ. வரை தெரிகிறது.

புராணக் கதை:

கண்ணனை ஆன்மிக குருவாகவும் சாரதியாகவும் கண்டான் காண்டீபன். மானம் காத்த தெய்வமாகக் கண்டாள் பாஞ்சாலி. நண்பனாகக் கண்டான் குசேலன். தங்களை ஆகர்ஷிக்கும் கிருஷ்ணனாக, காதலனாகக் கண்டனர் கோபிகையர். பாரதியோ, சேவகனாகக் கண்டான். ஆனால், அவனை மன்னனாக இன்றளவும் காண்கின்றனர் துவாரகாபுரி மக்கள்.

துவாரகை-கட்ச் வளைகுடா அருகில் உள்ளது. பண்டைய வேத சாஸ்திரங்கள், இந்தப் புண்ணியத் தலம் கிருஷ்ணருடைய ராஜ்ஜியமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றன. அவர் தமது யாதவ குலத்தை ஜராசந்தனிடமிருந்து காப்பதற்கு மதுராவை விட்டு இங்கு ஓர் பொன்னாலான நகரத்தை நிர்மாணித்தார். அதற்கு குசஸ்தலி அல்லது துவாரவதி என்றும் பெயரிடப்பட்டது. அதுவே பின்னாளில், துவாரகா என்று மாறியது. யாதவர்களும் கிருஷ்ணரும் மறைந்த பின்னர் அந்த பிராந்தியமே கடலில் மூழ்கியது, கிருஷ்ணரின் மாளிகையைத் தவிர.

பல வருடங்கள் கழித்து அவருடைய கொள்ளுப் பேரன் வஜ்ரனபி அந்த மாளிகைக்கு அருகிலேயே ஒரு கோயிலைக் கட்டினான். இன்றைய துவாரகை கோமதி நதியும் அரபிக் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கணக்கற்ற பக்தர்களைத் தம் வசம் இழுக்கும் உன்னதத் தலங்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. காசியைப் போலவே படித்துறை, கோயிலலைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தாலும், துர்நாற்றமோ தூசுபடிதலோ இல்லை.

பக்தர்களின் பிரார்த்தனை:

பக்தர்கள் தங்களது பிரார்த்தனை அனைத்தும் நிறைவேற இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டுச் செல்கின்றனர். கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்தும், வெண்ணெய் காப்பு சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

திருவிழா:

கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் . கோகுலாஷ்டமி அன்று பாவன் பேடா என்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு ஆடும் இந்த நடனம் பார்ப்பவர்களுக்கு பார்வை விருந்தாக அமைகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

Most Popular