Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalஉங்களுக்கு தவ்வை என்பவளைத் தெரியுமா?

உங்களுக்கு தவ்வை என்பவளைத் தெரியுமா?

அவளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இவளின் இன்னொரு பெயரைச் சொன்னால் தெரியும் என்று தலையாட்டி, பதறித்தான் போவீர்கள். அவள் பெயர்… மூதேவி!

யாரிந்த தவ்வை?

ஏன் இவளுக்கு மூதேவி என்று பெயர்?

இவர் ஒதுக்கப்படவேண்டியவரா? இவர் பெயரை சொல்லலாமா? சொல்லக்கூடாதா? சொல்வதே பாவம் என்கின்றனரே?

அத்தனை மோசமான பலன்கள் தருபவளா மூதேவி?

அவ்வளவு துர்குணங்கள் நிறைந்தவளா மூதேவி?
திருமகளின் மூத்த சகோதரி என அறியப்படுபவர் மூதேவி. இவர் பெயரை உச்சரிக்க கூடாது என்றுதான் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிவைத்திருக்கிறார்கள்

உண்மையில் இவள் விளைச்சலுக்கு அதிபதி. இவளுக்கென ஒரு சில இடங்களில் ஆலயம் உண்டு. ஆனால் இவள் மூதேவி என்பதை அறியாமலேயே, அவளை வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
அமோக விளைச்சலை அள்ளி அள்ளித் தருபவள் அல்லவா.

ஆகவே இவள் பெரும்பாலும் வயல்வெளியில்தான் இருப்பாள். பருத்த உடல், பெருத்த கொங்கை, முன் தள்ளிய தொப்பை வயிறு, என்கிற தோற்றம் கொண்டவள் மூதேவி! ஆதிகாலத்தில், இவள்தான்… அதாவது மூதேவிதான், நமக்கெல்லாம் குலதெய்வமாகத் திகழ்ந்தார் என்றால் நம்புவீர்களா? ஆச்சரியமாக இருக்கிறதா?

அதுதான் உண்மை.

அந்தக் காலத்தில், நம் பூமியில் விளைச்சல் பூமி முக்காலும் வீடுகள் கால்வாசியும்தானே இருந்தன. அதனால் எல்லோருக்குமான முக்கியத் தொழில், விவசாயம். எல்லோருக்குமான தெய்வம்… மூதேவி!

விவசாயத்தின் காவல் தெய்வமாகவும்,வளமைக்கு அதிபதியாகவும் இருந்தவர் இவரே. பிற்காலத்தில் தெய்வங்களுக்கு பெயர் வைத்து வழிபாடு தொடங்கியதும் இவரின் தோற்றத்தை வைத்தும், அடுத்தடுத்த தெய்வ வழிபாடுகளாலும் இவர் வெறுக்கப்பட்டவர் ஆனார். கூடவே டி.ராஜேந்தர் ஸ்டைலாலும் வெறுக்கப்பட்டார்.

அதென்ன ராஜேந்தர் ஸ்டைல். அதுதான் அடுக்குமொழி பேசுவது. ’என்ன ஊருக்கு கீறுக்கு போனியா” , “ராஜா, கூஜா” இப்படிப் பேசப்படுகிற வரிசையில், “ஸ்ரீதேவி மூதேவி’’ என எதிர்ப் பத வார்த்தைப் பிரயோகத்தினால் இவர் வணங்குதலில் இருந்து மறக்கப்பட்டார்.

“மகம் ஜெகம் ஆளும்,” “பெண் மூலம் நிர்மூலம்” என இவர்களாகவே ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு அதன் உண்மைத்தன்மையை அறியாமல், அதை இன்று வரை உணராமல், இருக்கிறார்களே. அதுமாதிரிதான் இந்த தவ்வை எனும் மூத்ததேவி வழிபாடு அமைந்துவிட்டது.

ஆதியில் காளிக்கு அடுத்து இந்த தவ்வை வழிபாடே முக்கியத்துவம் வாயந்ததாக இருந்தது. உருவ வழிபாடுகளில் காளி, தவ்வை, நடுகல், மரம், சுமைதாங்கிக் கல்.

இவையே முதன்மை வழிபாடாக இருந்து வந்துள்ளது. பின்னர் நமக்கு நிறைய தேவைகளும், தேவைகளால் ஆசையும், ஆசைகளால் பிரச்சினைகளும் வர வர அதிக தெய்வங்களை வழிபடத் தொடங்கிவிட்டோம்.

அதாவது, ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தெய்வம் என்ற நிலைக்கு நாம் வந்தபோது, இந்த இயற்கை தெய்வங்களை நாம் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். இன்று நாம் அதிகபட்சமாக குலதெய்வ வழிபாடு என்று குறுகிவிட்டோம்.

நம் முன்னோர்கள் வழிவழியாக வழிபட்ட தெய்வங்களை மறந்தேபோனோம். எனவே இனி நம் முன்னோர் வணங்கிய தெய்வங்களையும் சேர்த்தே வணங்குவோம்.

சரி, எங்கே இருக்கிறாள் இந்த மூத்ததேவி?
தஞ்சையில் இன்னமும் வயல்கள் பகுதியில் மூதேவி உருவச் சிலைகள் உள்ளன. நாகை வழுவூர் வீரட்டேஸ்வர கோயில், திருவானைக்காவல், காஞ்சி கைலாசநாதர் கோவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்,

ஓரையூர் சிவன் கோயில் என இன்னும் பல கோயில்களில் மூதேவி காட்சி தருகிறாள்.
நம் வீட்டில் துடைப்பத்தை, ஒரு ஓரமாகத்தான் வைப்போம், ஆனால் துடைப்பம் இல்லாத வீடு உண்டா? துடைப்பம் இல்லாவிட்டால் வீடு சுத்தம் ஆகுமா?

ஆகவே ஒதுக்கப்படவேண்டியது என்றோ விலக்கப்பட வேண்டியது என்றோ எதுவுமில்லை.
நம் மூத்தோர் வணங்கிய மூதேவி என்கிற மூத்ததேவி என்று சொல்லப்படுகிற தவ்வை அன்னையை வணங்குவோம். மூதேவி என்ற சொல் அமங்கலம் அல்ல மங்கலம் என முதலில் உணருவோம்.

நம் வீட்டில் வளமை என்னும் வளர்ச்சியை தந்தருள்வாள் மூதெவி!
இந்த மூதேவிதான், ஜேஷ்டாதேவி என்றும் சொல்வார்கள்.

இவர் சனியின் மனைவி என்றும் கூறப்படுகிறது. எனவே சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள் இந்த ஜேஷ்டாதேவி எனும் தவ்வையை வணங்கி வந்தால், சனி பகவானின் நன்மைகள் நம்மை வந்தடையும் என்பது உறுதி!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 8 =

Most Popular