நம் வீட்டுக்கு வந்து தரிசனம் தருவான் ஏழுமலையான்!

200

திருப்பதி திருவேங்கட நாதனை தரிசிக்க திருப்பதிக்குச் செல்ல முடியாத நிலையில், அவரை மனதால் நினைத்து வீட்டிலேயே வழிபடுவதற்கான விரத நியதிகள், வழிபாட்டு முறைகள் ஏதேனும் உண்டா…?

உண்டு என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

இறைவனை ஆலயம் சென்று தரிசிக்கவேண்டும் என்பதில்லை. கோயிலுக்குச் சென்றுதான் வழிபடவேண்டும் என்பதில்லை. ஆத்மார்த்தமாக வழிபட்டால், நம் வீட்டுக்கே வருவான் திருவேங்கடத்தான்.

திருப்பதிக்குச் சென்று, ஏழுமலையானைக் கண்ணால் தரிசித்தாலும், அவரை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும் என்பதே முக்கியம். உண்மையான தரிசனம் என்பது மனதால் பார்ப்பது. மனதால் நெருங்குவது! வெறும் கண்களால் மட்டுமே பார்ப்பது பூரண தரிசனம் ஆகாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆக, வீட்டில் இருக்கும் தருணங்களிலும், ஏழுமலையானை மனதால் பார்க்கலாம். தரிசிக்கலாம். அப்படி மனதால் பார்த்த கடவுளை, தங்களது வீட்டில் உள்ள இறைத் திருமேனியில் இறக்கிவைத்துப் பணிவிடை செய்யலாம். அது, திருமலையானுக்கான வழிபாடாக மாறிவிடும்.

க்ஷேத்திர தரிசனம் என்பது, அதாவது கண்ணால் காணும் தரிசனம் பக்தியின் நுழைவாயில்; அதுவே இறுதியல்ல! இறைவனே, உங்களுக்குள் புகுந்து ஜீவாத்மாவை இயக்குகிறான். ஜீவாத்மா வேறு; இறைவன் வேறு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த அறியாமை விலகினால், அவனுடன் இணைந்துவிடுவீர்கள். ஜீவாத்மா மறைந்து, அவனாகவே விளங்குவீர்கள். பிறப்பின் நோக்கமும் அதுவே! எனவே, திருப்பதிக்குச் செல்லமுடியவில்லையே என வருந்தாதீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

‘உயிரினங்களைத் தோற்றிவைத்து, அவற்றை இயக்க ஒளி வடிவில் உட்புகுந்து உறைந்திருக்கிறேன்’ என்கிறான் பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. வெளியேயுள்ள இறையுருவங்களை வழிபடும்போது, இரண்டு கரங்களாலும் புஷ்பத்தை அள்ளியெடுத்து, நமக்குள் இருக்கும் இறைவனை நினைத்து (தியானித்து), மூச்சுக் காற்று வழியே வெளியே வந்து, புஷ்பத்தில் கலந்தவனாக பாவிக்கவேண்டும்.

அப்போது, இறையுருவத்தில் சேர்க்கும்போது, அந்தத் திருவுருவில் நமக்குள் இருக்கும் இறைவனையே காண்கிறோம் என்கிறது சாஸ்திரம். அவனுக்குப் பணிவிடை செய்கிறோம். அதாவது எந்த இறைவனை உள்ளுக்குள் தியானிக்கிறோமோ, அவரையே வெளியிலும் தரிசிக்கிறோம்; வழிபடுகிறோம்!

பூஜையின்போது, உள்ளத்திலிருந்து இறைவனை வெளிக் கொண்டு வருகிறோம். இதுவே, பூஜையின் நடைமுறை. ஆகவே, வீட்டில் இருந்தபடியே ஏழுமலையானை வழிபடலாம். நம் வீட்டில் சூட்சுமமாக அந்த திருவேங்கடவன் வந்து, நமக்கு அருளுவான்.

மனதார பெருமாளுக்கு துளசி சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால், நம் வீட்டுக்கே வந்து நம்மையும் நம் ஏழு தலைமுறையையும் வாழச் செய்வான் ஏழுமலையான்!