கல்வி செல்வமும் பொருட் செல்வமும் தரும் வசந்த பஞ்சமி இன்று

419

பிரம்மாவின் மனதில் இருந்து சரஸ்வதி தேவி அவதரித்த நாள் இந்த தை மாத வசந்த பஞ்சமி நாள் ஆகும். இதனால் தான், வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வணங்கி பிரார்த்திக்கின்றனர். அன்றைய நாளில், சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர். வசந்த பஞ்சமி நாளில் அம்பிகையான அன்னை சரஸ்வதி தேவியை வழிபட்டால், அனைத்து கலைகளிலும் முன்னேற்றம் பெறுவதோடு, ஆன்மீகத்திலும் உயர்நிலை பெற்று ஞானமும் பெறலாம்.

மனிதனாக பிறந்த அனைவருமே தங்கள் எதிர்கால வாழ்வு வளமான வாழ்வாகவும், சிறப்பாக அமைய வேண்டும் என்பதே அதிக எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்காக, நிகழ்காலத்தில் ஓடி ஓடி அயராது உழைத்து சேமிக்க வைக்க வேண்டும் என்றும் நினைப்பதுண்டு. ஆனால், என்னதான் ஓடி ஓடி அயராது உழைத்தாலும் கூட, தெய்வத்தின் அருளாசி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
நம்முடைய எதிர்கால வாழ்வு வசந்தமாக மாற வேண்டுமானால், உத்திராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வளர்பிறையில் வரும் வசந்த பஞ்சமி நாளில் அம்பாளை தொழுது பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் நிச்சயம் வசந்தம் ஏற்படும் என்பது முன்னோர்களின் கூற்றாகும்.

வசந்த பஞ்சமி
பஞ்சமி என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திதியில் வரும் ஐந்தாவது நாளாகும். அதில், சூரியன் பயணிக்கும் தட்சிணாயன காலத்தில் ஆவணி மாத வளர்பிறை திதியில் வரும் பஞ்சமி திதியை கருட பஞ்சமி என்றும், புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமியை ரிஷி பஞ்சமி என்றும், உத்திராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத வளர்பிறை திதியில் வரும் பஞ்சமி திதியை வசந்த பஞ்சமி என்றும் அழைக்கிறோம்.

கல்வியை தொடங்கும் நாள் குழந்தைகளுக்கு கல்வி தென் மாநிலங்களில் விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்க சொல்லித் தருகிறோமோ, அதேபோல், வட மாநிலங்களில் இந்த வசந்த பஞ்சமி நாளில் தான் குழந்தைகளின் கல்வி கற்கும் பருவம் தொடங்குகிறது. வசந்த பஞ்சமி நாளில் கல்வியை தொடங்கும் குழந்தைகளின் முன்பாக, பேனா, பென்சில் மற்றும் சில தொழிற் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து, அவற்றில் ஏதாவது ஒரு பொருளை எடுக்கச் சொல்வார்கள். குழந்தை எடுக்கும் பொருளை வைத்து அதன் ஆர்வமும், எதிர்காலமும் இருக்கும் என்பது நம்பிக்கை.

சரஸ்வதி யாகம்

கல்வி செல்வம் தரும் சரஸ்வதி வேதங்கள் போற்றும் பல தெய்வங்களில் முக்கிய தெய்வம் அலைமகளான சரஸ்வதி தேவி. ஆதி பராசக்தியின் அம்சமாக விளங்கும் அவர் படைக்கும் கடவுளான பிரம்மாவின் மனதிலிருந்து அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சரஸ்வதி தேவி நம்முடைய பாரதத்தில் புண்ணிய நதியாக ஓடுவதாக வேதங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவி யாகத்தை காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்கு ஞானம், வசீகரம், அறிவு, வீரம், வெற்றி போன்றவற்றை வாரி வழங்கும் தேவதை ஆவர்.

சரஸ்வதிக்கு படையல்
பிரம்மாவின் மனதில் இருந்து சரஸ்வதி தேவி அவதரித்த நாள் இந்த தை மாத வசந்த பஞ்சமி நாள் ஆகும். இதனால் தான், வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வணங்கி பிரார்த்திக்கின்றனர். அன்றைய நாளில், சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர். சரஸ்வதி தேவிக்கு படைக்கும் படையல் வகைகளும் மஞ்சள் நிறத்திலேயே தயாரிக்கப்படும். அதோடு சரஸ்வதி பூஜையில் பங்கேற்கும் பெண்களும் மஞ்சள் நிற ஆடைகளையே உடுத்துகின்றனர்.

செல்வ வளம் பெருகும் வாழ்க்கை வசந்த மாகும்
தென் மாநிலங்களில் வசந்த பஞ்சமி தினத்தை காமதேனுவை போற்றும் நாளாக கொண்டாடி வருகின்றனர். அம்பிகையான சரஸ்வதி தேவி அவதரித்த வசந்த பஞ்சமி நாளில் இசையாலும், கீர்த்தனைகளாலும் பஜனை பாடல்களை பாடி அம்பிகையை ஆராதனை செய்வது வழக்கம். வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டால், ஞான சித்தியாகும். கல்வி, தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தொடங்கவும் உகந்த தினமாகும். வசந்த பஞ்சமி நாளில் புதிய தொழிலை தொடங்கினால் வாழ்வும் வசந்தமாகும்.

பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களால் பூத்துக் குலுங்கி கண்ணை கவரும். அதற்கு பொருத்தமாக மக்களும் மஞ்சள் நிற ஆடைகளை உடுத்திக் கொண்டு பாங்க்ரா நடனம் ஆடி களிப்பதுண்டு. பள்ளி கல்லூரிகளில், மாணவர்களும் ஆசிரியர்களும் சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வணங்குவார்கள்.