ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 2

373

கிருஷ்ணர் யசோதைக்கு கொடுத்த வாக்கு

திருப்பதி வெங்கடேசப் பெருமான் அவதரித்த கதை கிருஷ்ண அவதாரம் முடிந்து வெகு காலத்துக்குப் பிறகு நடந்தது என்பதே உண்மை. கிருஷ்ணருக்கும் திருப்பதி வெங்கடேசப் பெருமான் அவதரித்த கதைக்கும் என்ன தொடர்ப்பு என்று யோசனை செய்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள், அது புரியும்.

கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு விட்டவுடன் கிருஷ்ண அவதாரத்தில் இருந்த விஷ்ணு வேறு அவதாரம் எதையும் எடுக்கவில்லை. ஆனால் கிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு பூமியில் அதர்மம் ஓங்கத் துவங்கி இருந்தது. தர்ம நெறி மங்கத் துவங்கி, மக்கள் அவரவர் மனம் போன போக்கில் கட்டுக் கோப்பு இல்லாமல் வாழத் துவங்கினார்கள். கல்கி யுகம் பிறக்க இன்னும் சில யுகங்கள் பாக்கி இருந்தது. கல்கி யுகம் பிறக்கும் முன்னரே மீண்டும் நான் அவதரித்து இந்த பூமியைக் காப்பேன் என்று கிருஷ்ணர் கூறி இருந்தார். ஆனால் அவர் அவதரிக்க இருக்கும் சூழ்நிலையே தெரியவில்லை. அதனால் பல காலத்துக்குப் பின்னால் ஏற்பட உள்ள பின் விளைவுகளை நாரதர் எண்ணிப் பார்க்கத் துவங்கி கவலையுற்றார். அவர் மனம் பின்னோக்கி ஓடியது.

ஒருமுறை கோகிலத்தில் இருந்த யசோதை கவலையுடன் அமர்ந்து இருந்தாள். அப்போது அங்கு சென்றிருந்த நாரதர் யசோதை கவலையுடன் இருப்பதைக் கண்டார். வீடு அமைதியாக இருந்தது. ‘என்ன தாயே, வருத்தமாக அமர்ந்து இருக்கிறீர்கள்? என்ன நடந்தது?’ என்று அவர் கேட்கவும் கிருஷ்ணர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. யசோதை துயரமாக இருக்கிறாள், நாரதர் வேறு அங்கு இருக்கிறார். எதோ நடக்கிறது என்பதை உணர்ந்த கிருஷ்ணர் ஒரு அர்த்த புஷ்டியுடன் நாரதரை நோக்கி ‘என்ன நடந்தது’ என்று கண்களால் ஜாடைக் காட்டிக் கேட்டார். தெரியவில்லையே என்று ஜாடைக் காட்டிய பின் யசோதையை காட்டி அவளையே கேள் என்று மேலும் ஜாடைக் காட்டினார்.

கிருஷ்ணர் யசோதையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு ‘என்ன ஆயிற்று அம்மா, என்ன ஆயிற்று…….நீ ஏன் வருத்தத்துடன் இருக்கிறாய்?’ என்று கொஞ்சலாகக் கேட்க யசோதையின் கண்களில் நீர் நிரம்பி வழிந்தது. கண்களைத் துடைத்துக் கொண்ட யசோதை ‘கிருஷ்ணா, நான் இத்தனை துரதிஷ்டசாலியாக இருக்கிறேனே என்பதை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்’ என்றாள். ‘என்ன அம்மா இப்படியெல்லாம் பேசுகிறாய்? நான் உன் அருகில் இருக்கையில் உனக்கு என்னம்மா கஷ்டம். எதற்காக தேவை இல்லாமல் மனத்தைக் குழப்பிக் கொண்டு இப்படி எல்லாம் பேசுகிறாய்?’ என்று கிருஷ்ணர் கேட்க யசோதை கூறினாள் ‘கிருஷ்ணா, நான் இன்னும் எத்தனைக் காலம் இப்படியே இருக்கப் போகிறேன். நான் இறப்பதற்கு முன் உனக்கு ஒரு திருமணம் நடத்தி , அந்த ஆனந்தத்தை கண்டு களிக்காமல் மறைந்து விடுவேனோ என்று என் மனதில் வேதனை வந்து விட்டது. நீ ஒரு திருமணம் செய்து கொண்டு என் ஏக்கத்தை போக்குவாயா?’ என்று மனம் வருந்தி அழலானாள்.

அதைக் கண்ட கிருஷ்ணரின் கண்களிலும் நீர் நிறைந்தது. அதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தான் அவதரித்ததிற்கு காரணம் இருந்தது. அதை முதலில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். அதன் பின்னரே திருமணம் அது இது என அனைத்தையும் யோசனை செய்ய வேண்டும். இப்போது திடீர் என திருமணத்தைப் பற்றிக் கேட்டால் எப்படி நிறைவேற்றுவது எனக் குழம்பினார். அப்போது அவர் ருக்மணியை மணமுடித்திருக்கவில்லை. ஆகவே யசோதைக்கு ஒரு வாக்கு கொடுத்தார் ‘ அம்மா, நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்போது அந்த திருமணம் உன் முன்னிலையில் நிச்சயமாக நடக்கும். நீயே அதை நடத்தி வைப்பாய். ஆனால் அது இப்போது நடக்காது என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால் நான் அடுத்த பிறவி எடுக்கும்போது நான் உனக்கு கொடுக்கும் இந்த வாக்குறுதியை சத்தியமாக நிறைவேற்றி வைப்பேன்’ என்றார். விதிப்படி அவர் ருக்மணியை கவர்ந்து வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டி இருந்ததினால்தான் அதை முன்கூட்டியே அவர் தாயாருக்கு தெரிவிக்க முடியவில்லை.

அதன் சில காலத்துக்குப் பிறகு யசோதை மறைந்து விட்டாள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்து விட்டன. யாதவ குலமும் அழிய, கிருஷ்ணரும் மறைந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த நாரதர் எண்ணலானார் ‘யசோதைக்கு கிருஷ்ணாவதாரத்தில் வாக்கு தந்துள்ள விஷ்ணு பகவான் மீண்டும் யாராக அவதரிப்பார்? யசோதை எப்படி அவருக்கு தாயாக பிறப்பாள்? அப்படி அவதரிக்கும் விஷ்ணுவின் மனைவியாக லஷ்மி தேவி அல்லவா பிறக்க வேண்டும். அப்படி என்றால் லஷ்மி தேவியும் மீண்டும் ஏதாவது அவதாரத்தில் அவதரிக்க உள்ளாரா? அப்படி என்றால் அவை அனைத்தும் எங்கு நடக்க உள்ளது?’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டு அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த நாரதர் எண்ணம் மீண்டும் தன் நிலைக்கு வந்தது. ஆனால் மீண்டும் கவலை சூழ்ந்து விட்டது.

யாதவ குலம் சின்னாபின்னமாகி அழிந்தப் பின் அப்போது துவங்கிய ஒழுங்கீனம் வேகமாக பூ உலகில் பரவி விட்டது. ஆகவே கூடிய விரைவில் பூவுலகப் பிறவிகள் ஒழுங்கின்றி தான் தோன்றித்தனமாக வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களை நல் வழியில் கொண்டு செல்லவில்லை என்றால் கலி யுகம் பிறக்கும் முன்னரே மீண்டும் பிரபஞ்சம் அழிந்து விடும். கல்கி அவதாரத்துக்கும் பல யுகங்கள் பாக்கி இருந்தது. ஆகவே அதற்கு இடையில் பூமியில் நடைபெற்றுக் கொண்டு இருந்த தீய செயல்கள் தடுத்து நிறுத்தப்பட என்ன செய்யலாம்?. இதுவே அப்போது நாரதர் முன் நின்றிருந்த கேள்விகள்.

……..தொடரும்