புதிய வீடு கட்ட துவங்குவதற்கு முன் வழிபட வேண்டிய வாஸ்து மரம்!
நல்மணீஸ்வரர் கோயில் திருப்பூர் மாவட்டம் கத்தாங்கண்ணி என்ற ஊரில் உள்ளது. இங்கு நல்மணீஸ்வரர், சவுந்தீஸ்வர சுவாமி மூலவராக காட்சி தருகின்றனர். சவுந்தரவல்லி நாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வம் மற்றும் பால மரமே இங்கு தல விருட்சமாக விளங்குகிறது. பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆடி நாகஜோதி, கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 6.23 மணிவரையில் சூரிய ஒளி நல்மணீஸ்வரர் திருமேனியில் விழுகிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு 2 கற்கள் சேர்ந்தபடி வளர்ந்து சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமி நாளில் தயிர் சாதம், வடைமாலை, சிவப்பு அரளி பூ மாலை சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். நல்வாழ்வு அமைய, கண்திருஷ்டி, செய்வினை தோஷம், பூமி தோஷம் மற்றும் நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டி பலர் கருதுகின்றனர். கால பைரவர் அருகில் சனீஸ்வர பகவான் அமைந்துள்ளதால் அவரை வழிபட கெடுபலன்கள் நீங்கி சுபபலன் அமையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 7 நெய் தீபம் ஏற்றி, பைரவருக்கு அபிஷேகம் செய்து வந்தால் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோயிலில் பால மரம் தல விருட்சமாக விளங்குவதால் வாஸ்து நாளில் இந்த பால மரத்தை வணங்கி வழிபாடு செய்து புதிய வீடு மனை துவங்குவோருக்கு நல்லதே நடக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி இங்கு ஸ்தல விருட்சத்தை வணங்கிவிட்டு தான் முகூர்த்த கால் கூட நடுவதாக பலரும் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. கோயிலுக்கு தெற்கு பகுதியில் உள்ள நாகர் சன்னதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத நாக சதுர்த்தியின் போது சர்ப்பம் (பாம்பு) வந்து செல்வதாக ஐதீகம். பைரவருக்கு வலது பக்கமாக வாகனம் உள்ளது இந்தக் கோயிலில் மட்டும் தான். பில்லி, சூனியம், ஏவல், பாவங்கள் நீங்க இந்தக் கோயிலில் தான் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
மகாபாரதம் காலம், பஞ்ச பாண்டவர்களின் வனவாசத்தில் இருந்துள்ளனர். அப்போது தாராபுரம் பகுதிக்கு வந்த நகுலன் தனது ராஜ்ஜியம் மற்றும் பதவிகளை இழந்துள்ளான். இதனால், இழந்த ராஜ்ஜியம் மற்றும் பதவிகளை மறுபடியும் பெற வேண்டும் என்பதற்காக பிரதோஷ நாளன்று இந்தக் கோயிலில் வந்து வழிபாடு செய்துள்ளார். அப்போது, அவர் ருத்ர மந்திரத்தை கூறி பூஜித்ததால் நகுலன் தான் இழந்த ராஜ்ஜியம் மற்றும் பதவிகளை மீண்டும் பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பு வீரசோழபுரம் என்று இந்த ஊருக்கு பெயர் இருந்துள்ளது. இங்கு வாழ்ந்து வந்த சோழர்கள் சிவனை வழிபட்டதால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. சோழர்கள் 4 வேதங்களையும் கற்றவர்களுக்கு தானம் வழங்கினர். கற்றோருக்கு தானம் வழங்கியதால், இந்தக் கோயிலின் பெயர் கற்றாங்கண்ணி என்று மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
