48 நாட்கள் விரதம் கடைப்பிடிப்பதன் தாத்பரியம் என்ன?

339

நாம் எந்த ஒரு செயலை புதிதாகச் செய்வதாக இருந்தாலும், ஒரு மண்டலம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அறிவுறுத்தப்படுகிறது.

அது என்ன ஒரு மண்டலம்? ஏதாவது கட்டாயமா? கூட, குறைய இருக்கக்கூடாதா? என்று சிலர் கேட்கலாம். எல்லாவற்றுக்கும் ஒரு காரண காரியங்களை நம் முன்னோர்கள் நமக்கு வகுத்து வைத்துள்ளனர். அதன் தாத்பரியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மைத் தொடுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா? அது போலத்தான், நம் பூமியைச் சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன. அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

அதேபோல் தான், நம்மைச் சுற்றிலும் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

அதைத்தான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து ஒன்பது கோள்கள் (9 கிரகங்கள்), 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தே 48 நாட்கள் ஒரு மண்டலம் என்று வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களும், ஏன் எல்லா உயிரினங்களுமே இந்த அமைப்பிற்குள் அடங்கி விடுகின்றன. எனவே, நாற்பத்தெட்டு நாள்கள் விரதம் என்பது நமக்கு எல்லா வகையிலும் நன்மையை அள்ளி வழங்குகின்றது.

தொடர்ச்சியாக 48 நாட்கள் ஒரு மண்டல காலத்துக்குச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படிச் செய்தால் அந்த நோய் நிரந்தரமாகக் குணமாகும். அதேபோல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத செயல்களும் கை கூடுகின்றன. நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாளர்கள்.

ஏதாவது ஒரு செயலையோ அல்லது வேண்டுதலையோ 48 நாட்கள் நம்பிக்கையோடு கடைப்பிடித்துப் பாருங்களேன்..

அப்பறம் என்ன நடக்கிறது என்று…!