ராம நவமியில் என்ன தானம் செய்யலாம்?

52

ராம நவமியில் என்ன தானம் செய்யலாம்!

ஸ்ரீ ராம நவமி நாளன்று விசிறியோ, நீர்மோரோ தானம் செய்யலாம்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமாக கருதப்படுவது ராம அவதாரம். பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி தவறாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.

சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் ராமர். இராவணனை அழிக்கும் காலம் வந்த போது அவனை வதம் செய்து, தர்மத்தை நிலை நாட்டினார்.

இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது.

அஷ்டமி, நவமி திதி:

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டன. அப்போது விஷ்ணு பகவான், ‘உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்” என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

விரதமுறை:

ராம நவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

பலன்கள்:

காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக் கேட்பதும், ஸ்ரீராம பிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும் ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீ ராம ஸ்ரீ ராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.