குழந்தை பாக்கியம் அருளும் முனியப்பன் வழிபாடு!

62

குழந்தை பாக்கியம் அருளும் முனியப்பன் வழிபாடு!

சேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் முனியப்பன் ராஜ்ஜியம் தான். கோரப்பல் அழகன், கோழி முட்டை கண் அழகன், வெட்டருவாள் மீசை அழகன், கம்பீரமாக, சேலத்தின் ராஜாவாக சேலத்தின் மையபகுதியான ஜாகிர் அம்மாப்பாளையத்தில் முருக்கு மீசையுடன் கம்பீரமாக வெண்ணங்கொடி நிழலில் அமர்ந்து இருக்கிறார் முனீஸ்வரன்.

மூலவர் : முனியப்பன்.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.
ஊர் : வெண்ணங்கொடி.
மாவட்டம் : சேலம்.

தல வரலாறு:

அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள்லாட முனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள்.

அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல்கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார்.

தலப் பெருமை:

குழந்தை வரம், திருமணத்தடை நீங்குவதற்காக இங்குள்ள முனியப்பனிடம் வேண்டிக்கொள்கின்றனர். வேல் விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பய உணர்வு நீங்குவதாக நம்பிக்கை.

இந்த வழிபாட்டுக்கு கட்டு வர்த்தனம் என்று பெயர். இத்தகைய வழிபாடு மிகச் சில கோயில்களில் தான் உள்ளது என்பது தனி சிறப்பு. நீண்ட தூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது.

பிரார்த்தனை:

குழந்தை வரம், திருமணத் தடை நீங்குவதற்காக இங்குள்ள முனியப்பனிடம் வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் தொட்டில் போடுவதுடன், பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மேலும், சுவாமிக்கு புதிய வஸ்திரம் சாற்றியும் வேண்டிக் கொள்கின்றனர்.