ஆண்டாள் கூடாரவல்லி என்றால் என்னவென்று தெரியுமா?
ஆண்டாள் பிரசுரங்கள்:
மார்கழி மாதம் முப்பது நாட்களுக்கும் இணையாக முப்பது பாசுரங்களை ஆண்டாள் பாடியுள்ளபடியால், மார்கழியின் ஒவ்வொரு நாளையும் அந்நாளுக்குரிய பாசுரத்தின் முதல் வார்த்தையை இட்டுக் குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, மார்கழி மாதம் முதல் நாளை ‘மார்கழித் திங்கள்’ என்றும், இரண்டாம் நாளை ‘வையத்து’ என்றும், மூன்றாம் நாளை ‘ஓங்கி’ என்றும் குறிப்பிடுவார்கள்.
கூடாரவல்லி என்றால் என்ன?
ஆண்டாள் திருப்பாவையின் 27ம் பாசுரம், “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” என்று தொடங்குவதால், மார்கழி மாதத்தின் 27ம் நாளை ‘கூடாரை வெல்லும்’ என்று பெரியோர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். காலப்போக்கில் கூடாரை வெல்லும் என்பது மருவிக் ‘கூடாரவல்லி’ என்று ஆகிவிட்டது.“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!” என்பது திருப்பாவையில் மிகவும் பொருள் பொதிந்த ஒரு சொற்றொடர் ஆகும். கோவிந்தன் என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிக்கும். அது என்னவென்று பார்ப்போம்..
1. மத்ஸ்யாவதாரத்தில் கோ எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால், மத்ஸ்யாவதாரத்துக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருந்துகிறது.
2. கூர்மாவதாரத்தில் கோ எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே.
3. வராக அவதாரத்தில் கோ எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்.
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய ‘கோ’வை (கோ என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே.
5. கோ எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்.
6. கோ எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது.
7. கோ எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தன்.
8. கோ எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்.
9. கோ எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை.
10. கோ எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்.
இத்தகைய கோவிந்தனான இறைவனைக் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்று அழைக்கிறாள் ஆண்டாள். கூடார் என்றால் எதிரிகள், அசுரர்கள். சீர் என்றால் குணம் என்று பொருள். தனது குணத்தாலும் அழகாலும் எதிரிகளைக் கூட வென்று திருத்தி, அவர்களைத் தன் அடியார்களாக ஆக்குபவன் என்பது இதன் பொருளாகும். “கூடாரான எதிரிகளை வென்று பக்தர்களாய் மாற்றத் தக்கதான சீரை உடைய கோவிந்தனே!” என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தத் தொடருக்குள்ளே மற்றொரு ஆழ்பொருளையும் ஒளித்து வைத்திருக்கிறாள் ஆண்டாள். எதிரிகளை வெல்பவனே என்று இறைவனைக் குறிப்பிடுவதில் உள்ள ஆழ்பொருள் என்னவென்றால், “இறைவா! நீ எதிரிகளைத் தான் வெல்வாய்! உன் அடியார்களான எங்களிடம் நீ தோற்று விடுவாய்!” என்று பொருள். எனவே கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்றால், “கூடுவோரான பக்தர்களிடம் தோற்கும் கோவிந்தா!” என்று ஆழ்பொருள். ஏனெனில், பக்தனை வெற்றி பெறச் செய்து, அந்த பக்தனிடம் தான் தோற்று மகிழ்கிறானாம், இறைவன்.
