பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர என்ன செய்ய வேண்டும்?
தன் பக்தர்களுக்கு வெற்றியை தந்து தான் தோற்று மகிழும் திருமால்:
விஷ்ணு ஸ்ஹஸ்ரநாமத்தில் ‘விஜிதாத்மா’ என்று ஒரு திருப்பெயர் (626-வது திருப்பெயர்) வருகிறது. யாராலும் வெல்ல முடியாதவர் என்று அதற்குப் பொருள். அதற்கு அடுத்த திருப்பெயர் (627) ‘விதேயாத்மா’ என்று வருகிறது. அதற்குத் தோற்பவர் என்று பொருள். இவை இரண்டும் முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றுகிறதே என்று சிந்தித்தால், உரையாசிரியர்கள் அதற்குச் சுவையாக விளக்கம் தருகிறார்கள்.
விஜிதாத்மா – யாராலும் வெல்ல முடியாதவர் – என்றால் எதிரிகளால் வெல்ல முடியாதவர் என்று பொருள். விதேயாத்மா – தோற்பவர் – என்றால் அடியார்களிடம் தோற்பவர் என்று பொருள். தன் பக்தனுக்கு வெற்றியைத் தந்து, அவனிடம் தான் தோற்று மகிழ்கிறான் இறைவன். அதையே கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா எனும் தொடரில் உணர்த்துகிறாள், ஆண்டாள்.
ஆண்டாள் பாடிய அக்கார அடிசில்:
இறைவனின் இத்தகைய எளிமையை விளக்கும் இந்தப் பாசுரத்தில் அக்கார அடிசில் செய்யும் முறையையும் ஆண்டாள் பாடி இருக்கிறாள். மார்கழி நோன்பு நோற்கையில், நெய் உண்ணோம், பால் உண்ணோம் எனப் போகப் பொருட்களை விலக்கி வைத்த கோபிகைகள், இப்போது நோன்பு வெற்றி அடைந்து, கிருஷ்ண அநுபவம் கிட்டி விட்டதாலே, பாலும் நெய்யும் கலந்த அக்கார அடிசிலை உண்போம் என்று,
“பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்”
என்கிறார்கள்.
இங்கே உரை ஆசிரியர்கள், பால் பாய்ச்சிய வயலில் விளைந்த அரிசியை எடுத்து வந்து, அதைப் பாலிலேயே சாதமாக வடித்து, அதன்பின் 70 படி பாலுக்கு ஒரு படி அரிசி என்ற வீதத்தில் அதைப் பாலுடன் கலந்து, வெல்லம் சேர்த்து, ஒவ்வொரு பிடி அரிசிக்கும் ஒரு பாதாம், இரண்டு கற்கண்டு, இரண்டு பிஸ்தா, இரண்டு திராட்சை, இரண்டு முந்திரி வீதம் கலந்து, ஒவ்வொரு பிடி அரிசிக்கும் ஒரு பிடி நெய் சேர்த்து, ஒரு துளி உப்பு கலந்து, அதைச் சுமார் 6 முதல் 9 மணி நேரம் கலந்து தயாரிக்கும் அக்கார அடிசிலைப் போல் இனியவனான கண்ணன் என்னும் அமுதை ஆண்டாளும் அவள் தோழிகளும் உண்டு மகிழ்கிறார்கள் என்று சுவைபடத் தெரிவிக்கிறார்கள்.
பெருமாள் ஆலயங்களின் கூடாரவல்லி வழிபாடு:
இதன் நினைவாகவே, இந்த வழிமுறையை இயன்ற அளவு பின்பற்றி, கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களிலும், இல்லங்களிலும் இத்தகைய அக்கார அடிசில் தயாரித்து இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இந்த நன்னாளில் நாமும் வீட்டில் அக்கார அடிசில் தயாரித்து இறைவனுக்குச் சமர்ப்பித்தால், நாம் அடையும் பலன் ஏராளம்.
பலன்கள்:
ஆண்டாள் என்ற மானுடப் பெண், மாதவனை மணாளனாகப் பெற்ற மகத்தான நாள் இந்த கூடாரவல்லி என்பதால், இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதீகம்.
