உண்மையான மனிதாபிமானம் எது?
ஒரு மாதத்திற்கு முன்பு, காலையில் வேலைக்காக சென்று கொண்டிருந்தேன். அப்போது தெருவோரத்தின் வாதங்காய் மரத்தினடியில், ஒருவர் படுத்து கிடந்ததை பார்த்தேன். அவருக்கு வயது என்னவோ ஒரு 60, 65 இருக்கும். ஆஜானுபாகுவான உடல்வாகு, கட்டியிருந்த வேட்டியும், சட்டையும் இரண்டு மூன்று நாட்கள் ஊரிய கறைகளால், மெருகேறி கொண்டிப்பதை காட்டியது.
மாலையில் பணியினை முடித்து விட்டு திரும்பவும், அதே வழியில் வந்தேன். காலையில் பார்த்த அதே முதியவர், அதே இடத்தில், வேறு கோணத்தில் படுத்து கிடந்தார், அருகில் சென்று, ஏதாவது உதவி செய்யலாம் என, மனம் பதறுகிறது. ஆனால், எனது மோசமான நிதிநிலையால், மூளை என்னை தடுத்து வீட்டிற்கு செல்ல தூண்டியது.
மறுநாள் காலையிலும், அதே இடத்தில் அதே முதியவர், சுருண்டு படுத்து கிடந்தார், பரிதாப உச்சத்தில் இருந்த அவரைப் பார்த்து கொண்டே சென்று விட்டேன், மனதை கல்லாக்கிக்கொண்டு, மாலை அதே வழியில் திரும்பவும் சென்றேன், ஆனால்.. இப்போது அந்தயிடத்தில் அப்பெரியவர் இல்லை, மனதுக்கு சிறு நிம்மதி.
ஒரு மாதம் கழித்து, இப்போது மீண்டும் அப்பெரியவரை பார்க்க நேர்ந்தது, நீல வண்ண முழுக்கை சட்டையும், அதே நிறத்தில் கைலியும் உடுத்திக் கொண்டு, நான்கு சக்கர தள்ளுவண்டியில், காய்கறி பதார்த்தங்களை பாத்தி கட்டி, ஒவ்வொரு காய்கறி பாத்தியிலும், அன்றைய விலையை, எழுதிய அட்டையை நட்டு வைத்திருந்தார்.
அவர் வியாபாரம் செய்யும் போதுதான், ஒரு விசயத்தை கவனித்தேன், அவரால் வாய்பேச முடியாதென்பதை. காய்கறியைக்கூட, புர்ர்ர்ரேய்ய் என்று சத்தம் எழுப்பித்தான், மக்களின் கவனத்தை ஈர்க்கிறார். காய்கறி வாங்கி கொண்டு திரும்பிய ஒருவரிடம், அவரைப் பற்றிய, என் சந்தேகத்தை எழுப்பினேன். அதற்கு இவர் சொன்ன பதில், என்னை ஆர்ச்சர்யபட வைத்தது.
போனமாதம், பசியும் பட்டினியுமாய், சுருண்டு கிடந்த இவரை அனுகி, உணவு கொடுத்து.. பணம் கொடுத்தோம், இவர் உணவை வாங்கி கொண்டு, பணத்தை வாங்க மறுத்து விட்டார், இவரை பொறுத்தவரை, வேலையேதும் செய்யாமல் பெறும் பணம், பிச்சை எடுப்பதற்கு சமமாக பார்க்கிறார் என்பதை புரிந்து கொண்டோம்.
பிறகு… யார் இவர், எங்கிருந்து வந்தார், இங்கு ஏன் விழுந்து கிடந்தார் என்று விசாரிக்கையில், இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று, இவரால் சரியாக சொல்லத் தெரியவில்லை.
நாம் பேசும் தமிழைப் புரிந்து கொண்டு, அதற்கு சைகையில் பதில் சொன்னார், திரும்பவும் அவருடைய ஊருக்கு செல்ல, உத்தேசமில்லை என்பதையும், சைகையால் விவரித்தார். எங்கள் அடுக்குமனையில் குடியிருக்கும், அனைவரும் ஒன்று சேர்ந்து, … அவருக்கு ஒரு வருமானம் தரும் தொழிலொன்றை ஆரம்பித்து, மீதமுள்ள காலத்தை கழிக்கட்டுமென முடிவெடுத்தோம்.
இவருக்கு தொழில் செய்ய, தேவையானவற்றை வாங்கி கொடுத்தோம், மொத்த செலவு இருபதாயிரம் வந்தாலும், சக மனிதன் ஒருவருக்கு, வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்ததை நினைத்து, நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவர் மூலமாக, எங்களுக்கு ஒரு பாடம் ஏற்பட்டது, எங்களுக்குள்ளே ஒரு சங்கத்தை தொடங்கி, இவர்போன்ற வாழ்க்கையில், தடம் மாறி தடுமாறுபவர்களுக்கு, ஒரு நல்வழியை ஏற்படுத்தலாம் என்று, முடிவெடுத்து உள்ளோம்.
போகும்போது என்னங்க கொண்டு போகப்போறோம், இருக்கிற இன்னுங்கொஞ்ச வாழ்க்கையில, நம்மளால ஒரு நாளுபேரு, நன்மை அடைஞ்சாங்க என்ற, மன திருப்தியோட போய்ச் சேர்ந்திடலாம் என்று கூறி முடித்தார். எவன் ஒருவன், சக மனிதனின் வலி, தமக்கு ஏற்பட்ட வலியாக பாவிக்கின்றானோ, அவன்தான் மனித குலத்தில் பிறந்த, அர்த்தமுள்ள பிறப்பு, சிறந்த மனிதனுங்கூட.
எத்தனையோ நகரங்களில், எத்தனையோ குடியிருப்புகள் உள்ளன, அத்தனை குடியிருப்புகளிலும், இவர்களை போன்று தொண்டு செய்தால், மனிதர்களில் பகைமை மறந்து, உவமை பரவிடும். நடக்குமா நடந்தால் நன்றாக இருக்கும்.
